சனி, 2 டிசம்பர், 2017

தீபத்திருநாள் - வாழ்க்கையின் வசீகர தினம் !




காலங்கள் எவ்வளவு அழகானவை

            இந்த மனதிற்கு காலத்தில் இறந்த காலம் எதிர்காலம் எல்லாம் இல்லை அதற்கு எப்போதும் வசந்த காலத்தின் மீதுதான் விருப்பம் போல ! அதை மட்டுமே அது .மிக பத்திரமாக வாழ்வின் பல அழகாக சேமித்து வைத்து இருக்கிறது பாருங்களேன் !
                                                                                    

              அப்படிபட்ட என் வாழ்வில் நான் இன்றும் என்னை இந்த உலகில் மயக்கும் தினங்களாக கொண்டாடுவது  தீபத்திருநாளும் , மார்கழிப் பூஜைக் காலை வேளையும்தான். 

      திண்டுக்கல்லில் நண்பர்கள் யாரையும் அழைத்துக்கொள்ளாமல் நான் நகர் வலம் வரும் ஒரே நாள் திருக்கார்த்திகைத் தினத்தன்றுதான்.சேர்ந்து போனால் அதற்குப் பல அரத்தங்கள் வந்து விடுவதும் ஒரு காரணம்.அதை விட வசீகரமான காரணம் .தனித்துத் திரியும் போது சில விசயங்கள் உள்ளுக்குள் பொங்கி வழியும்.ஆமாம் தீபத்திருநாளன்று மாலை திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றும் நாளன்று வீட்டில் அம்மாவுக்கு உதவியால் மண் தீப சுட்டிகளைக் காலையிலிருந்து ஊரவைத்து வெளியே எடுத்து உலரவைத்தால்தான் சுட்டிகள் எண்ணை அதிகம் குடிக்காது என்பதால் அப்படி வழக்கம்.பிறகு திரியிட்டு எண்ணை வார்த்து தயார் செய்துகொள்வேன் .

          அம்மா அற்புதமாகக் கோளம் போடுவார்கள் .அதிலும் தேர்கோளம் பிரசித்தம். நல்ல நாட்களில் மட்டும் எந்தக்கோளம் போட வேண்டும் என்பது என் சாய்ஸ். அதே போல அம்மா போட்ட கோளத்தில் எந்த வர்ணப்பொடி இட்டு அழகு படுத்துவதும் எனது உரிமை .அம்மா சாமி படத்தின் முன்னும் ,வாசல் படி முன்னும் கடைசியாகப் பிரமாண்டக் கோளம், தெருவாசல் முன்னும் போடுவார்கள் . ஒற்றைப்படை எண்ணிக்கையில் மொத்தமாக எடுத்துக்கொண்டு , தீபங்களை வீட்டு வாசல் படிகள் இரு பக்கம் தொடங்கி , நீர்த்தொட்டி , காம்பவுண்ட் சுவர் என வரிசை கட்டி அழகு பார்த்து பார்த்து வைப்பேன் .சில இடங்களில் மட்டும் சுட்டிகளில் அடியில் எண்ணை வழிந்தால் பாதுகாப்பிற்காக அட்டை வைப்பது வழக்கம். தெரு வாசல் பிரமாண்டக் கோளத்தின் மையத்தில் சின்ன முக்காலி போட்டு அதன் மீது கேரளாவிலிருந்து வாங்கி வந்த ஐந்து முகப் பித்தளை விளக்குகள் வைத்து அதைச் சுற்றி பூ வடிவத்தில் ஏதாவது ஒரு அழகில் சுட்டிகளை வைப்பேன் .அம்மா அன்று மறுப்பெதுவும் சொல்ல மாட்டர்கள்.அவன் இஷ்டம் என்பார்கள் . 

      திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றியவுடன்,நாங்கள் வீட்டில் தீபமிடத்தொடங்கிவிடுவோம் , சகல தீபமும் மொட்டு மொட்டாய் மலர்வது போல அந்தக் காற்றில்  மெல்லியதால் ஒரு மஞ்சள் ,சிவப்பு ஆடையணிந்த பெண் அசைந்தாடுவது போல ரம்மியமாக இருக்கும் .வீட்டின் எல்லாத் தீபமும் எற்றிவிட்டு ,சாமி பூஜை செய்துவிட்டு வாசல் வரை தூபம் காட்டி விட்டுச் சூடம் ஏற்றி வீட்டுக் கார்த்திகை அரங்கேற்றம் முடிந்துவிடும்.அதற்குப் பிறகு ... 



நகர் உலா.

         இது எனக்குப் பதினேழுவயதிருக்கும் போது வந்த பழக்கம் . எங்குமே நண்பர்கள் இல்லாமல் வீட்டை விட்டுச் செல்லாத நான் அன்று மட்டும் நண்பர்கள் இல்லாமல் செல்வதற்குக் காரணம் சேர்ந்து செல்லும் போது காட்சிகளின் கோணம் மாறிப்போகலாம்.பார்ப்பவர்கள் மனதில் வேறு ஒரு நோக்கமாக மாறி எதார்த்தம் திசைமாறி விடும் என்ற பயமே காரணம் .என் நண்பர்களுக்கு ரசிக்கும் என் மனம் தனித்து இருப்பதையே விரும்பும் என்று புரிந்துகொள்வார்கள் . வீட்டுத் தீபம் ஏற்றி விட்டு மெல்ல என் தெருவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டின் முன் உள்ள கோளத்தையும் ,அதன் விளக்குகளையும் ரசிக்கக் கிளம்பி விடுவேன் .இன்னொன்றும் புரிந்திருக்கும் அந்தச் சமயத்தில் அந்த நாளில் ஏனோ எல்லாப் பெண்களும் மிக அழகாகத்தெரிவார்கள் .பல வீட்டில் தீபாவளியன்றே இதற்கும் சேர்த்து புது ஆடை எடுத்திருப்பார்கள் .அதனால் அந்தப் பட்டுப் புடவைகள் சரசரக்கப் பெண்கள் தீபமிடுவதும் ,தீபமிட்ட வீட்டில் ஜன்னல் ஓரங்களில் தீபத்தின் ஒளியில் மிளிரும் வெளிச்சச் சிதறல் முகத்தில் பட்டுத் தெறிக்க நின்று வாசலை நோக்கி நிற்கும் போது எல்லாப் பெண்களுமே தேவியின் ரூபமாய் தெய்வீகமாய்த் தெரிவார்கள் .அது ஒரு மனம் பூராவும் தீராத அழகை நிரப்பும்.சில வீட்டில் தீபாவளியின் மிச்ச பட்டாசு முனுமுணுக்கும்.

          எங்கள் தெருக்களைச் சுற்றித் தொடங்கும் உலா அப்படியே சொசைட்டி தெரு,அக்ராஹரம்,ஹவுசிங்போர்டு எனக் கால்கள் போய்கொண்டே இருக்கும் .எனக்குத்தெரிந்து அன்று மட்டும் கால் ஓய்வைத்தேடாது.சுமார் இரண்டு மணி நேரமாவது கண்களும் மனசும் தீபத்தின் சுடர்களைப் பறித்து மனதுக்குள் நிரப்பி விட்டு வீடு திரும்பி விடுவேன்.அன்று பலரும் திண்டுக்கல் மலைக்கோட்டை மேலே ஏறி சொக்கப்பானைக் கொளுத்திச் சுழற்றுவது மிக அழக்காக வெகு தூரமத்திலிருந்து பார்த்தாலும் தெரியும் .அது பொதுவாகப் பழைய சைக்கிள் டயர்கள் .துணிகளை எண்ணையில் நனைத்துக் குச்சி அல்லது கயிற்றில் கட்டுச் சுழற்றுவார்கள் .வேடிக்கைப் பார்த்து விட்டு வீட்டில் எரிந்து முடிந்த விளக்குகளைப் பூக்கள் வைத்துக் கையமர்த்தத் தொடங்கிவிடுவேன்...


சுமார் எட்டு மணிக்கும் மேல் பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு அமர்ந்தால் , கவிதை மார்கழிப்பனியாய்க் கொட்டும் ...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக