வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அசல் ஓட்டுனர் உரிமமும் போலி மக்கள் நலனும் !




ஓவியாவைத் திருமணம் செய்து கொள்வீர்களாஎன்பதற்கு ஆரவ் என்ன சொல்லப் போகிறார் ?

ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அரசுத் தன்னுடைய கட்சிப் பெரும்பான்மையை எப்படிக் காத்துக் கொள்ளப் போகிறது ?

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் நிர்மலா சீதாராமன் ஏன் விலக்கப்படுகிறார் ? இன்ன பிற கவலை இந்தியாவைச் சூழந்து இருக்கும் போது,

          தமிழகரசு வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது ( ஆனால் சந்து சந்துக்கும் சீருடை அணிந்த காவல் துறை இருக்கும் ). என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் நீங்கள் செல்லும் முக்கியச் சாலைகள் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்து விபத்துக்கள் நடந்துஉங்கள் வண்டியிலோ ஆம்புலன்ஸ் வாகனத்தில் வீடு போய்ச் சேர்ந்தாலோ திருப்பூர் அவினாசிச் சாலைகளில் ஆயிரம் அடி இடைவெளிக்கு மூன்று சிக்னலில் காத்து இருக்கையில் உங்களுக்கு அதில் முன் நிற்கும் வாகனம் எவ்வளவு புகையில் கருகினாலோ புஷ்பாத் தியேட்டர்த் துவங்கி RTO அலுவலகம் வரை மற்றும் பழைய பேருந்து நிலையம் முதல் வீரபாண்டி வரை உள்ள பிரபல உணவகங்களின் வாசலில் போக்குவரத்துக்கு இடையூறு இருந்தாலோஆட்சியே மாறினாலும் இந்தா முடித்து விடுவோம் என்று கட்டிக்கொண்டே.......இருக்கும் பாலங்களாலும் இன்ன பிற சாலை ஆக்கிரமிப்புகள்முக்கியச் சாலைகளை ஒட்டிய கோவில் கூட்டங்கள் ,எந்த ஒரு வேக விதிகளுக்கும் உட்படாத விர் விர்... வாகனத் தொந்திரவுகள் போன்ற இத்தியாதி இத்தியாதிப் பிரச்சனையால் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை எதுவும் இல்லாமல் போனாலும் (எதுவும் மாற்ற மாட்டோம் ).


        ஆனால் நீங்கள் உங்கள் சொந்தக்காசில் உரிமம் எடுத்து வண்டி வாங்கி அதில் ISI முத்திரை உயிர்கவசம் அணிந்திருந்துவண்டிக்கும் (உங்களுக்கும் கூட) இன்சூரன்ஸ் வைத்திருந்து உங்கள் அன்புக் குடும்பத்திடம் போயிட்டு வரேன்னு சொல்லி விட்டு வந்தாலும்நீங்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1988 பிரிவு 181-ன் படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிப் பிடிபட்டால் 3 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.500 அபராதம்ஏன் இரண்டையுமே சேர்த்து கூட விதிக்க முடியும் என்பதாகச் சட்டம் சொல்லுகிறது.

    அன்பு மனைவிகள் வேண்டுகோளுக்கிணங்க ஆதர்ச வாகன ஓட்டிப் புருசர்கள் தங்கள் உரிமங்களை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பந்தாவா வந்திருந்த போதிலும் இன்று யாரும் திருப்பூரில் சீருடைக் காவலர்கள் நிறுத்தி உரிமம் சோதிக்காததால் ஏமாற்றம் அடைந்தோம் .அனேகமாக எப்படி எங்கு நிறுத்தி சோதிக்கலாம் என்ற ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கலாம் !



       திருப்பூர் போன்ற வாகன பயன்பாடுகள் அதிகம் உள்ள இடங்களில் நிறையப் பேருக்கு வாகன ஓட்டும் உரிமம் இருந்தாலும் சாலை விதிகளை மதிக்கவோ விரும்புவதில்லை.இங்குக் கம்பெனிகளின் கட்டாயத்தில் வண்டி ஓட்டுவதும்,அவசரம் அவசரம் என்ற மன அழுத்தம் முழுவதுமே சாலைகளின் மேல் கொண்டுவந்து சுமத்துவதுமே காரணம்.மேலும் முக்கியச் சாலைகள் எப்போதும் மாற்றிப் பயணிக்க அனுப்பப் படும்போதும் அங்கே மாற்றப்ட்ட சாலையை அதைச் சீர் செய்யக் காவலர்கள் நியமிப்பது குறைவு.தானே தனக்கு உதவி என்ற கோபமும் இதற்குக் காரணம் .ஒரு சின்னக் கூட்டம் என்றாலும் மிக ஜனசந்தடிப் புழங்கும் திருப்பூர் நகராட்சி முன்னால் அனுமதி கொடுக்கிறார்கள். பொதுவாய் ஊருக்கு ஊர் வழி விடு விநாயகர்தான் அதிகம்.ஆனால் திருப்பூரில் விநாயகசதுர்த்தியால் வழி அடைக்கப்பட்டவர்கள் அதிகம். முக்கியவீதிகள் அனைத்துமே சில கி.மீட்டர்தான் இருக்கும்.இருந்தும் எதனால் முக்கியச் சாலைகள் வழியே ஊர்வலங்களுக்கு முன் அனுமதி வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை.அதுபோல ஏற்கனவே போக்குவரத்துக்குப் போதாக் குறையாக உள்ள குமரன் சாலைகளில் ஜவுளிக் கடைகள் மற்றும் நகைக்கடைகள் துவங்க எப்படித்தான் அனுமதி அளிக்கிறார்கள் என்பது நீலத் திமிங்கில விளையாட்டின் (Blue Whale Game) 50 ஆவது நாள் போல அதிர்ச்சியளிக்கிறது.


       திருப்பூரில் என் போன்ற பல நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவர்கள் ஒரு வீட்டுக்கு வாகனங்கள் ஓட்டினாலும் அல்லது நிறுவனங்களுக்காக வாகனங்கள் ஓட்டினாலும் அவர்களின் அசல் வாகன உரிமம்தான் அவர்களுக்கு வேலை உத்திராவாதம் (Guarantee ) அளிக்கிறது.அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.நண்பன் ஒருவன் சொந்த ஊரிலிருந்து போனில் பேசும்போது என்னுடைய பதினாறு லட்ச ரூபாய் லாரியை ஒரிஜினல் லைசென்ஸ் நம்பித்தான் கொடுத்து இருக்கிறேன். ட்ரைவரும் அதனால்தான் பொறுப்பாய் ஓட்டிக்கொண்டு இருக்கிறான் .நான் அவனிடம் காவல்துறைச் சோதனைக்காக ஒரிஜினல் லைசென்ஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வண்டி வருமா இல்லை அடுத்த மாநிலத்தில் அவன் விற்று விட்டுக் காணவில்லை என்று சொன்னாலும் நான் நம்பி அவன் பின்னால் அலைய வேண்டியதுதான் என்று நொந்துகொண்டான்.




        காலை இது சம்பந்தமாக தந்தி தொலைக்காட்சி ஒரு அலசல் நேரடி செய்தி தொகுப்பு செய்தது அதன் மூத்த பத்திரிக்கையாளர் பாண்டே பேசும்போது நம்முடைய ATM கார்டுகள் நாம் ஒரிஜினலை பத்திரமாக வைத்திருக்கும் போது அது போல அசல் உரிமமும் முக்கியத்துவம் கொடுத்தால் என்ன என்று கேள்வியை முன்வைத்தார். நல்ல ஆலோசனை ஆனால் பாண்டே நீங்கள் ஆளும் கட்சி திவாகரன் அணி போல சில சமயம் பேசுகிறீர்கள்.நாம் ATM இல்லாமல் கூட நம்முடைய தேவைக்கேற்ப காசோலை அல்லது இணைய சேவையை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை உபயோகம் செய்யலாம் .உங்கள் அசல் உரிமம் தொலைந்து போனால் காவல் நிலையத்தில் என்ன நடக்கும்  எப்படி நடத்தப்படுவீர்கள் என்று என்னை வந்து தனியே சந்தியுங்கள் சொல்கிறேன் .

       உரிமம் தொலைந்து போனால் அதைப் பெறும் வழியை எளிதாக்கினால் இது சாத்தியம். நாங்கள் எப்போதும் அரசை மதிக்கிறோம்.அரசு சொல்வதைக் கேட்டு மதிப்பதால்தான் ஓட்டுனர் உரிமம் தேர்வு எழுதி, எட்டுப்போட்டு, வாய் மூலம் பதிலளித்துப் பெற்று வைத்து இருக்கிறோம்.இது எங்கள் கடமை ஆனால் அதைப் பற்றிய சந்தேகங்களும் சங்கடங்களும் அறிந்து பேசுங்கள் .

    அது சரி உங்களைப் போன்ற பத்திரிக்கையும் தொலைக்காட்சியும் உண்மை மட்டும்தானே பேசுவீர்கள் .அது மக்களுக்கு என்ன செய்தால் என்ன ?