சனி, 22 ஜூலை, 2017

திரு.கோபிநாத்துக்கு அன்பு வணக்கங்கள் .




          அரசுக்கு எதிராக மக்களே தெருவில் இறங்கி டாஸ்மாக் கடைகளைத் துரத்தி அதற்காகத் தடியடி வாங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் மனம் விட்டுச் சிரிக்கும் நிகழ்ச்சியில் சிரிப்பு என்ற பெயரில் குடிகாரத்தனத்தையும் , பெண்கள் வேசமிட்ட ஆண்களையும் வைத்து மது,மாது என்ற இரண்டையும் கொண்டாடத் தொடங்கியது ஏன் என்று தெரியவில்லை .என்ன பஞ்சம் வந்தது உங்கள் தொலைக்காட்சி இயக்குனர்களுக்கு ?

          நாடகங்கள் போன்ற  நிகழ்ச்சிகளிலும் போதை என்ற வஸ்தைத் தெரியாமல் கலப்பது தொலைந்து போகட்டும். சிரிப்பு நிகழ்சியைக் குடும்பத்துடன் உட்கார்ந்தால் தவறாமல் இடம் பெறுவது போதையில் காமெடி பண்ணுவது , ஆண்கள் பெண் வேசமிட்டுப் பெண்கள் நடத்தையைக் கேவலத்தின் உச்சத்திற்கு இழுத்துக் கொண்டு போவதே வாடிக்கையாகி வருகிறது. இது எப்படிக் காமெடியில் சேரும் ? இதனை உருவாக்கும் இயக்குனர்களுக்குச் சமூகப் பொறுப்பு இல்லவே இல்லையா ? அவர்கள் வீட்டுக் குழந்தைகள் முதல் எல்லாருமே இதைப் பார்க்கத்தானே செய்வார்கள் ? பார்ப்பதால் இந்தப் போதையில் உளரும் காமெடிக் கன்னி வெடிகள் பிஞ்சு உள்ளங்களில் பதியாதா ? அது இதைப்பார்க்கும் நிரந்தர நடுவர்களாக இருப்பவர்கள் யாவரும் உச்சி முகர்ந்து கொண்டாடி மகிழ்கிறார்கள் .அதிலும் ஒருவர் தனக்கு இருக்கும் குடிக்கும் பழக்கத்தை ஏதோ சர்பட்டம் வாங்கியது போலப் பெருமையாகப் பேசிக்கொள்கிறார். 


 ஆண்கள் பெண் வேசமிடுவது தவறல்ல .ஆனால் அது ஒரு அதீத ஆணாதிக்க அருவெறுப்பை உரித்துக்காட்டிக் கொள்ளச் செய்யும் அவலமாகவேத் தெரிகிறது .ஒரு பெண் எப்படி இருக்கக் கூடாது என்பதை அவளுக்குச் சமூகம் சொல்லித்தரும் பாடம் மிக முக்கியம் .அவள் மேல் இருக்கும் தாய்மையும் அன்புமே இன்று வரை மிக உயரத்தில் வைத்து இருக்கிறது .அதைத் தள்ளிக் கீழே சாய்க்கும் விதமாக ஆடைகளை விலக்கிக் கொண்டு அலைவதும் ,இரட்டை வசனங்களால் ஆண்களே அருவெறுக்கும் வசனங்களை உச்சரிப்பதும் அதற்குக் கை தட்டு வாங்குவதும் எப்படி காமெடிக்கு மரியாதை சேர்க்கும்

       உங்களால் சிரிக்க வைக்க முடியவில்லையானாலும் பரவாயில்லை .சீரழிய வைத்துவிடாதீர்கள் .மிகப்ப்பெரிய செய்தி சேனலுடன் இணைத்துக் கொண்டு தொடங்கிய நீங்கள் செய்திகளே இல்லாமல் இவ்வளவு தூரம் வளர்ந்து  பாராட்டுப் பெற்று மக்கள் மனதில் நீங்காத இடம் நோக்கி வளர்ந்து கொண்டு இருப்பதன் காரணம் உங்கள் தொலைக்காட்சியின் வித்தியாசமான நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்ட கவனமேயாகும் .

    கல்யாணத்திற்கு முன் வைத்துக்கொண்ட காதலைக் கூட விவாதிக்கும்  நீயா நானா விவாதம் நடத்திக்கொண்டு இருக்கும் தாங்கள்  தயவு செய்து உங்கள் நிகழ்ச்சிகளில் இது சரியா என்று மக்கள் அரங்கில் விவாதித்து மக்கள் உணர்வுகளுக்கு மரியாதைத் தாருங்கள் என்ற விண்ணப்பத்தை உங்கள் தொலைக்காட்சி மீது வைத்திருக்கும் உரிமையும் அன்பும் மீதுள்ள அக்கறையாக பதிவு செய்கிறோம்.நன்றி.