திங்கள், 17 ஏப்ரல், 2017

சிவபாத சேகரன் : பாலகுமாரன். # Writer Balakumaran



              மாமன்னர் ராஜராஜசோழன் தனது சிரசில் எப்போதும் சிவனின் பாதக் கமலங்களால் அழுந்திக்கொண்டு இருக்கும் நிலையையே தனது கிரீடமாக விரும்பி எல்லோருக்கும் சக்கரவர்த்தியான பரமேஸ்வரனின் தொண்டனாக எண்ணி வாழ்ந்ததால் அதனால் அவரைச் சிவபாத சேகரனாகத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பெருமைப்படுகிறது .நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு செயலும் இறைநீதிக்கு உட்பட்டது.இறைவன் வேறு நம் செயலும் பலனும் வேறு இல்லை என்பதை வெளிப்படுத்துவதே அந்த அழியாப் புகழ் பெற்ற சோழகுல மாமன்னன் ராஜராஜசோழன் இதன்மூலம் நமக்கு விட்டுச்சென்ற செய்தி .நாம் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் நம் செயலுக்கும் இறைவனுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை  என்று பிரித்து விட்ட மாபெரும் ஒழுக்கப் பிழைதான் இன்றிய மனிதகுலத்தின் அத்தனை துன்பங்களுக்கும் ஆணிவேர் என்பதை ராஜராஜசோழன் சிவபாதசேகரனாக்கிக் கொண்ட உட்பொறுள் . 

               அந்த மாபெரும் சோழச் சக்கரவர்த்தியின் பெயரில் உள்ள விருதைத்தான், திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள வைஸ் திருமண மண்டப்பத்தில் நேற்று (16.04.2017) ,பல்லடம் தமிழ்ச் சங்கம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தால் மாலை நடந்த இரண்டாவது பகுதி விழாவில் ஆத்மார்த்த எழுத்தாளர்த் திரு. பாலகுமாரனுக்கு வழங்கப்பட்டது . 


                   விழாவின் பெருமை அதன் மெனக்கெடல் திருப் பாலகுமாரனுக்காக விருது வழங்கும் முக்கியத்துவம் தாண்டி விழாவிற்குக் காரணமானவர்களைக் கௌரவப்படுத்தும் விழாவாக இருக்கும் தோற்றத்தை ஏற்படுத்தியது .ஒரு கட்டத்தில் பாலகுமாரன் அவர்கள் பேசுவாரா என்ற ஆதங்கம் வந்து விட்டது .நல்லவேளை அவருக்கும் வாய்ப்புத் தந்தார்கள் .ஐம்பது நிமிடம் பேசினார் எழுத்துச் சித்தர் .72 வயதிலும் மனிதர் தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் இளமையாக இருக்கிறார்.கலைஞன் எப்போதும் காலத்தின் குழந்தை .இளமை என்பது அதன் வரம் என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறார் பாலா சார். தன் உணர்வை இளைஞர்கள் தோழுக்கு மாற்றிவிட்ட பெருமையைத் தனது 42 வருட கால எழுத்துலுக வாழ்வில் சோழம் பற்றிய எழுதிய பிறகே சாதித்து இருப்பதாக அவர் எண்ணுகிறார்.இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று பெருமிதமாகச் சொன்னார் .அவருடைய பேச்சில் தன்னுடைய நாவல்கள் தோன்றுவதற்கு உரமாக நின்றவர்களைச் சொல்லாமல் விடவில்லை .முக்கியமாகச் சகோதரன் சசிதரனை மிகவும் குறிப்பிட்டுப் பேசினார் . 



                   விழா முடிந்தவுடன் சசிதரனுக்கு நேரில் சென்று நன்றி சொன்னோம் . இந்தச் சின்ன வயதில் தமிழனின் வரலாற்றை வெளிக்கொணர ஓய்வின்றி அலைந்து கொண்டு இருக்கும் சசிதரன் கண்ணில் வெகுநாள் துக்கம் மிச்சமிருந்தது .அந்தச் சகோதரனின் கனவெல்லாம் சோழம் சோழம் சோழம்தான் தெரிந்தது ...

           அன்று இரவே அவர்கள் மேலும் ஒரு ஆய்வின் பொருட்டு ஒரு பயணத்திற்குத் தயாராகிக் கொண்டு இருந்தார்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக