சனி, 20 ஆகஸ்ட், 2016

கோவையில் - திரு.பாலகுமாரன் என்ற நிலவுக்கு அருகில் ..


                   மொத்த வாழ்க்கையுமே பாலகுமாரனின் எழுத்துக்கு அடகு வைத்துவிட்டு என்னிடம் இருப்பது எல்லாம் பாலகுமாரன் சொல்லித்தான் வந்தது என்று சற்றே கர்வமாகத் திரிந்தக் காலம் அது . இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் திண்டுகல்லுக்குப் பாலகுமாரன் வந்த போது வைரமுத்துவுடன் ஒரே மேடையில் பார்த்தேன் .அதற்குப் பிறகு நேற்று 19.08.2016  இங்குக் கொடிசியாவில் - மிக அருகில் என் எழுத்தின் சுவாசமான பாலா என்ற பாலாகுமாரனைத் தொடும் தூரத்தில் பார்க்க முடிந்தது. 

              அன்று மெல்லிய உருவமாய் ,ஒரு வெறித்தனமான எதையும் விழுங்கிக்கொள்ளும் பார்வையுடன் எழுத்தில் சாதனை செய்து கொண்டு இருந்த உரத்தக் குரலில் இலக்கியம் பேசும் பாலகுமாரனைப் பார்த்தேன் .இன்று சற்றுப் பருத்த தேகத்துடன் நரைத்தப் பின்முடியிட்ட வளர்ந்தத் தலைமுடியும், நெஞ்சுவரைப் பரவி அலையும் தாடியுடன் யாரோ ஒருவர் கைபிடித்து மெல்ல நடந்திவரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்க வந்த எழுத்தாளர் பாலகுமாரனைப் பார்க்கிறேன் .கண்களில் தீட்சன்யம் ,கூர்மை ,உடலைக் கடந்து ஊடுருவும் பார்வை அவருக்கு குரு யோகிராம் சுரத்குமார் மேல் வைக்கும் இடைவிடாத பிரார்தனை வளர்த்து இருக்கிறது. பலரும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதைப் பார்த்தேன் .அதில் சில பேர் அழுதார்கள் .

காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது. 


நண்பர் ஆதிநாரயணன்

              பாலா சாரின் “பச்சை வயல் மனது” - அவரின் ஆறாவது நூல் தொடங்கிய என் அவரின் எழுத்தின் நேசம் ,இன்னும் மருதநிலச் செழித்த நெல்வயல் குளிர் காற்றாய்ச் சில்லிட்டுக் கொண்டு இருக்கிறது மனதில் . எழுத்து இன்னும் உள்ளே பசுமையாய் உள்ளே வருடிக்கொண்டு இருக்கிறது இளமையாய் .எழுதியவரும் அதை வாசித்தவனும் காலத்தின் முன் கைது செய்யப்பட்டு நிற்கிறோம்.அப்போதும் கூடநின்று புகைப்படம் எடுக்கத் தயக்கம். இப்போதும் அதே தொடர்ந்தது .என்னை அழைத்துச்சென்ற நண்பர் ஆசீர்வாதம் வாங்கினார்.உடன் நின்று படம் எடுக்கத் தயங்கி நின்றோம் . நண்பர் மிகவும் விருப்பமுடன் பாலா சாரைப் பாரப்பதற்காக மட்டும்தான் தன்னுடைய வேலைகளைப் புறம் தள்ளிவிட்டு வந்து இருக்கிறார் . அலைபேசியில் படம் எடுத்துக்கொள்ள நண்பரைப் பாலா சாருக்குப் பின்னாடி வரச்சொல்லிப் படம் எடுத்தேன் .நன்றாக வந்து இருந்தது .என்னையும் நிற்கச்சொன்னார் .நின்றேன் .


              ஆனால் அது ஏதோ உறுத்தியது.பாலா சாரின் பின்னால் நின்று அவரின் அனுமதியில்லாமல் எடுத்ததை என் புத்தி ஒத்துக்கொள்ள மறுத்தது .  என் வாழ்வின் மிகப்பல அர்த்தங்களைச் சொல்லித்தந்த இளமையில் என் தந்தையை விட அதிகம் கற்றுத் தந்த என் ஆதர்ச எழுத்தாளருடன் அவரின் அனுமதியில்லாமல் ஏதோ ஒரு காட்சிப் பொறுளாக எடுத்தப்படத்தைப் பதிவிடுவது பெருமையில்லை என்பதாய்ப்பட்டது . இருந்தாலும் வெகு தூரத்து நிலவை ,அந்த குளிரின் அருகாமையை கையெட்டும் தூரத்தில் தரிசித்து விட்டேன்.  அந்த மாபெரும் எழுத்தாளானின் வாசகன் என்ற ஆசீர்வாதம் அந்த அருகே ”இருத்தல்” ஒரு நிறைவைத் தந்தது. 

போதுமே !

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு