சனி, 14 மே, 2016

சலூன் கடைப் போஸ்டரும் - தேர்தல் வாக்குறுதிகளும் !


பழைய படம் இல்லை . புதுசு ! அப்போது செல் ஃபோன் வசதி இல்லையே ?

எங்களின் குடும்பத்தில் ஆறு பேருக்கும் வெகு நாளாய் ஆஸ்தானமுடித் திருத்தம் செய்பவர் திரு.ராமு (அப்பா அப்படித்தான் கூப்பிடுவார் ) அவர் சலூன் கடைத் திண்டுக்கல் டாக்ஸி ஸ்டாண்ட் ஒட்டியுள்ள மார்க்கெட் பகுதிக்குள் இருக்கும் .அப்பா கடைக்குக் கொண்டு போய் விடும் போது ஒட்ட வெட்டச் சொல்லி விட்டுப் போய்விடுவார். இருந்தாலும் அவர் எனக்கு வெட்ட ஆரம்பிக்கும் போது , உனக்கு எப்படி வெட்ட வேண்டும் என்று பரிவாய்ப் பணிவாய் விசாரிப்பார். தாத்தா , பாட்டி ,அப்பா, அம்மா,அண்ணன்கள் நான்குபேர் ஆக மொத்தம் எட்டுப்பேருக்கு இளையவனான (கடைசி அடிமையான) எனக்கு அது மிகப்பெரிய கௌவுரவமாகத் தெரியும்.எனக்கு அதுனாலேயே அவரை ரொம்பப் பிடிக்கும்.ஆனால் அப்போது ஸ்டைல்ன்னா என்னான்னுத் தெரியாது . எதைச்சொல்வது ? அதனாலப் பதிலுக்கு அழகா வெட்டுங்க என்பேன் . 

விவரம் தெரிய ஆரம்பிக்கும் முன்னிருந்து ராமுதான் வெட்டிக்கொண்டு இருக்கிறார் .அனேகமாக ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதுதான் அந்தக் கடையிலுள்ள காலண்டர்களும் போஸ்டரும் என்னை மிகவும் பயமுறுத்த தொடங்கின .அவர் பார்க்க கிராமத்து ஆசாமியாய் இருப்பார் ஆனால் அவர் கொஞ்ச சின்ன வயதில் சினிமாக் கம்பெனிக்குப் போய்க் காஞ்சித் தலைவனில் ( 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ) எம்.ஜி ஆருக்குச் சிகை அலங்காரம் செய்யும் போது உதவியாளராக இருந்ததாக அப்பச் சொல்லியிருக்கிறார். அங்கே இருந்த அவரை  அப்படி இப்படியெனெக் கட்டவிழ்த்தக் காளையாய்க் கெட்டுப்போவார் என்று நினைத்த அவர் குடும்பம் இங்குக் கட்டாயமாக அழைத்து வந்து கால் கட்டுப் போட்டுவிட்டதாம் ! 

   அப்படிச் சினிமாப் பழக்கத்தினாலோ என்னவோ அவர் கடைப் போஸ்டர்களில் அதிகப் பட்சம் ஹிந்தி கதா நாயகிகளுக்கு நிறைய இடம் கொடுப்பார் அந்த நாயகிகள் கண்ணாடியில் சுவரில் படு மாடனாய் இருப்பார்கள்.நேரில் நின்று சிரிப்பது போலவே இருக்கும் ! எங்குதான் அதெல்லாம் அவருக்குக் கிடைக்கும் என்பது அப்போது தீராத ஆச்சர்யம் எனக்கு . அது மட்டுமல்ல அந்தக் கதாநாயகிகள் யாரும் இத்துனூண்டு உடை அணிந்து கொண்டு இருக்கமே என்று எப்படிக் கூச்சப்படாமல் இருக்கிறார்கள் ? பார்க்கிற நமக்கே இப்படி இருக்கேன்னு யோசிப்பேன்..நான் விடைத் தேடுவதற்குள், ஒன்று ராமு முடி வெட்டி முடுத்து விடுவார் அல்லது வெட்ட வெட்ட அவர் தலையில் தெளித்த தண்ணீர் ஈரத்தின் சுகத்தில் என்னையறியாமல்  தூங்கிப்போவேன்…. 

Pinky Lalwani சிரிப்பைப் பார்த்தால் இவர் இப்படி செய்வார் என முன்னமே தெரியும் போல ?

சில வருடம் கழித்து ராமு எங்கள் வீட்டுக்கே வந்து முடித் திருத்தம் செய்ய வீட்டுக்கே வந்து விட்டதால் கடைசிவரை அந்தப் போஸ்டர்கள் எதற்கு வைக்கிறீர்கள் , எங்குக் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் போனது .அதற்குப் பிறகு அந்த மாதிரிப் போஸ்டர்களை விஜய்மல்லையாவின் கிங்ஃபிசர்க் காலண்டர்களில் பார்த்தேன் அவரைக் கேட்பதற்குள் இந்தப் பேங்க் மேனேஜர்கள் எல்லோரும் சேர்ந்து எப்படியோ நாட்டைவிட்டே அனுப்பி வைத்து அவரைக் காப்பாற்றி விட்டார்கள். எனக்கு விஜய் மல்லையாவுக்கும் ஒரே பொருத்தம் இருவருக்கும் ஃபார்முலா1 ரேஸ் பிடிக்கும்.ஆனால் நான் பேங்கில் கடன் வாங்கினால் திருப்பிக் கட்டிவிடுவேன் என்பதால் எனக்கு யாரும் கடன் தரவில்லை.ஒருவேளை தந்து இருந்தால் நானும் இந்தியப்படை (Indian force ) என்ற ஒரு ஃபார்முலா1 ரேஸ் ஒரு அணி ஆரம்பித்து நம்மூர் நரேன் கார்த்திகேயனையும் ,கருண் சந்தோக்கையும் ரேஸ் ட்ராக்கில் வைத்து ஒரு கலக்குக் கலக்கியிருப்பேன் .! ஆனால் Pinky Lalwani யோடெல்லாம் சுத்தியிருக்க மாட்டேன் என்றூ சத்தியம் செய்கிறேன் .


இப்போது தெருவெங்கும் அரசியல் பிரச்சாரங்களில் சத்தமும் ,வாகன உறுமல்களும் ,துண்டு பிரசுரங்களும் கலைகட்டுகிறது . சில வாக்குறுதிகளைக் காப்பாற்றாவிட்டாலும் வீட்டு வாசலில் விசிறி எறியப்பட்ட வயதில் மூத்த அரசியல் வாதிகளின் படம் போட்ட நோட்டிஸ்கள் காலில் படும்போது வருத்தமாக இருக்கும் ! ஆனால் அவர்கள் பிரசாரங்களில் தரும் வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கைகளும் ( Manifesto ) தொலைக்காட்சி விவாதங்களில் நாங்கள் வந்தால் இதைச் செய்வோம் அதைச்செய்வோம் என்று சொல்கிறாகள்  .

ஆளும் கட்சி படிப்படியாக டாஸ்மாக் எனும் மாநில அரசு நிறுவனம் மூடப்படும் என்கிறார்கள் .மக்கள் மன்றம் என்ற பெயரில் 110 விதி ஆள்கிறது தமிழகத்தை .இலவசங்கள் தொடரும் என்கிறார்கள்

இன்னொரு கட்சி வந்தவுடனே முதல் கையெழுத்தே அதுதான் என்கிறது . 2014–15 ஆண்டில் 26,188 கோடி வருவாயையும் இழக்கவும் 29,297 பணியாளார்களுக்கும் ஆப்பு வைப்பேன் என்கிறது அதை விட அந்தப் பழக்கத்தால் வரி போக நிகர வருமானம் 7 ஆயிரம் கோடி வருவாய்த் தந்த தமிழனை குடித்தால் கைது செய்வேன் என்கிறது . அருமை . ஊற்றிக் கொடுத்தவர்கள் இப்படித்தானே சொல்வீர்கள் .

உங்கள் வலக்குகளில் தப்பிக்க மக்களைக் கொல்லும் போது கை கட்டி நிற்கிறீர்கள் , நீதிபதியின் கால் குலேட்டரை எடுத்து ஒளித்து வைத்து கொள்கிறீர்கள் .

இன்னொன்று கட்சி தேடிப்போனாலும் தீர்ந்துப் போச்சுன்னு கைவிரிக்கும் ரேசன் கடையை வீட்டுக்கே வந்து தருவேன் என்கிறது .அந்த கட்சி கடைசி வரை பேரம் பேசிப் பேசி பாவம் ஏற்கனவே இருந்த கூட்டணியை குழப்புகிறது !

முதுகெழும்பை வளைக்கச் சொல்லித் தந்த மெக்காலே கல்வித் திட்டத்தை ஒருத்தர்  முழுதாய் இலவசம் என்கிறார்.அவர்கள் அனுமதித் தந்த மருத்துவக் கல்லூரி வலக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது .

கடைசிவரை மீன் பிடிக்க சொல்லி தரமாட்டார்கள் கையேந்த மட்டுமே கற்றுத்தருவீர்கள் 

உங்களுக்கெல்லாம் தெரியுமா ? 2016-17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் தொகை மட்டும் ரூ.2,47,031 கோடி எனப் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உயர்த்தியுள்ள ரூ.2,47,031 கோடிக் கடன் தொகையைக் கணக்கிட்டால், 7 கோடியே 50 லட்சம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.32,937 கடனை ஏற்றி வைத்துள்ளது.
இதை யார் அடைப்பார்கள் ?

வந்தவுடன் வரவினங்களுக்கு முக்கியத்துவம் தருவோம் என்பதைப் பற்றிப் பேசத் தயங்குகிறீர்கள்.சென்னைவாசிகள் வெள்ளத்தின் போது உணவுக்காகவும் உயிர் பிழைப்பதற்காகவும் மக்கள் கையேந்தியதைப் போல இந்தத் தமிழகம் முழுதும் கையேந்த வேண்டும் ஆசைப்படுகிறார்கள் போல ! எவனையாவது குறை சொல்லியே வெட்கம் இல்லாமல் வாக்குக் கேட்கிறீகளே வாக்கு என்பது பெறப்படுவதில் இல்லை கொடுக்கப்படுவதிலும் அதைப் பிசிறில்லாமல் காப்பதிலும்தான் தில் இருக்கிறது.

சரி இன்னொன்றுத் தெரியுமா நீங்கள் எல்லாம் இன்னும் சில வருடங்களில் திருந்தினாலும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த உங்களிடம் பணம் கொடுத்துப் பதவிக்கும் பொறுப்புக்கும் வந்த அரசு ஊழியர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் அரசு இயந்திரத்தில் .அவர்கள் போட்டக் காசை எடுக்க வீட்டுக்குக் கூடப் போவதில்லையாம் அவர்களை வைத்தா நல்லாட்சி செய்யப் போகிறீர்கள் ? அவர்கள் படித்த தந்திரசாலிகள் உங்களை விடவும் திறமைசாலிகள் .கொடுத்த காசை வசூலிக்க அவர்கள் உங்களைப் பயன்படுத்த தயங்க மாட்டார்கள் .

ஏனோ எனக்கு அப்போது பார்த்த ராமு அவர்களின் சலூன் கடைதான் ஞாபகம் வந்தது .ராமுவாது முடி வெட்டுவதற்காக மட்டுமே அன்று காசு வாங்கினார் . அந்தச் சிரிக்கும் ஹிந்தி நாயகிகளைப் பார்க்கக் காசு வாங்கவில்லை . அங்கு வேண்டாதைக் கழிக்கக் காசு கொடுத்தோம் .ஆனால் நீங்கள் அரசியல் வியாபாரிகள் உங்கள் கட்சி ,உங்கள் அதிகாரம் , உங்கள் ஊழல் ,வழக்கு, மீண்டும் ஆட்சிக்கு வர இத்தனைக்கும் சேர்த்து எங்களை வெட்டவும் , வெட்டியதை ஐந்து வருடத்தில் மறந்து போகச் செய்யவும் வேண்டியதை இழக்க வாக்குக் கேட்கிறீகள் .



       நீங்கள் யார் வந்தாலும் தர வேண்டியது வாக்குகள் அல்ல மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது . அதில் கவனம் செலுத்துங்கள் .நீங்கள் கடவுளை மறந்து வேண்டுமானால் போங்கள் அல்லது உங்கள் வீட்டு பெண்களை ரகசியமாக அனுப்பி பூஜை செய்து கொள்ளுங்கள். ஆனால் முதலில் கோவில்களை பொதுவாக்குங்கள் எல்லோரும் தரிசிக்க அனுமதியுங்கள் .தரிசனத்திற்கான கட்டணத்தை முற்றிலும் இல்லாதாக்குங்கள் .என்று இறைவன் என்ற பயம் போனதோ அன்றே தமிழனின் சரித்திரம் தரித்திரமாகி விட்டது . எல்லா கல்வி நிலையங்களையும் அரசு அதிகாரிகளற்ற பொது மக்கள் குழு மேற்பார்வைக்கு கீழ் கொண்டு வாருங்கள் . எங்கள் முதல் கையெழுத்து குளம் , கம்மாய் ,ஏரி இவற்றை தூய்மை படுத்துவதாய் இருக்கட்டும் என்று சொல்லுங்கள் .வேலை வாய்ப்பை உருவாக்கவும் கைவினை பொருட்களை செய்யவும் ஊக்கமளியுங்கள்.சமுதாய மாற்றத்திற்கு அறிஞர்கள் மாநாடுகளை 6 மாதம் ஒரு முறை நடத்துங்கள் .லஞ்சம் பெறப்பட்டால் அவரை எதுவும் செய்யாதீர்கள் தனியாய் லஞ்சம் பெறும் அதிகாரி என்று ஒரு அட்டை மாட்டி அதற்கு கீழ் பண்புரியச் சொல்லுங்கள் .விவசாய பொருட்கள் நிர்ணயத்தை பங்கு மார்க்கெட்டுக்கு துளியும் விடாதீர்கள் .குழந்தைகள் - பெரியவர்களை அரசே கவனித்துக்கொள்ள  ஏற்பாடு செய்யுங்கள் . இப்படி மாற்ற வேண்டியது நிறைய இருக்கிறது .அரசு அதிகாரிகள் தாங்களே முன் வந்து ஓய்வு பெற்று வழி விடுங்கள் .உலகம் முழுதும் உள்ள தமிழன் அனைவரிடமும் முன்னேறும் திட்டம் நிறைய இருக்கிறது கேட்டுப் பெறுங்கள் .நம்மால் முடியாவிட்டால் யாராலும் முடியாது என்று நம்புங்கள்.இந்த உலகத்திற்கு தமிழன்தான் மூத்த குடி, வழிகாட்டி எல்லாம் அவனை உங்கள் இலவசங்களால் ஊனமாக்காதீர்கள் .

   எங்கள் எண்ணம்தான் நீங்கள் . அதனால் நாங்கள் மாற வேண்டும் .அதற்கு காலம்தான் எங்களுக்கு மே 16 ஆம் தேதிக்குள் பக்குவம் தர வேண்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக