செவ்வாய், 22 மார்ச், 2016

ஆண்கள் அழுவது வெளியே தெரிவதில்லை !


                  ஆண்கள் அழுவது சில சமயம் வெளியே தெரிவதில்லை ! இப்படி ஆரம்பிக்கும் இந்தப் பதிவு ஒரு விதக் கோழைத்தனமான் பதிவாகக் கூட உங்கள் மனதில் நினைக்கலாம் .ஆனால் இந்த உலகில் அப்பாக்களின் அழுகையை மொழிப் பெயர்க்க யாருமில்லை . கம்பீரமாகவே நடித்து விட்டுத் தன்னால் எதோ ஒன்று முடியாதபோது அதுவும் தன் குழந்தைகளின் படிப்புக்கோ,திருமண விசயத்திலோ நல்லது என்று தெரிந்த விசயத்தைச் செய்ய முடியாத நிலை வரும் போது எவ்வளவு பெரிய சாதனை செய்த அப்பாவானாலும் முகம் பொத்தி அழுக வேண்டிய நிலை வருமே அந்த நாளை சில சமயம் மறக்கவோ அல்லது மறுக்க முடியாது . அப்படிப்பட்ட அப்பாவில் நானும் ஒருவன். 

            விசயம் இதுதான் .இன்று அந்தக் குழந்தை ஏசு பள்ளியில் என் பையனைச் சேர்த்து விட மாமானாருக்குத் தெரிந்த ஒரு காவல் துறை அதிகாரி மூலம் அந்தப் பள்ளியின் தந்தையை ( Father) சந்தித்தோம் .பொதுத்தேர்வு நடக்கிறபடியால் அவரைச் சில நிமிடமே சந்திக்க அவகாசம் கிடைத்தது. 

           வரவேற்றவர் மரியாதை நிமித்தமாகச் சில வார்த்தை அந்த அதிகாரியிடம் பேசிய பள்ளித் தந்தை என்னிடம் திரும்பி இப்போ உங்க பையன் எங்க படிக்கிறான் ? என்றார்.சொன்னேன்.அதுவுமே நல்ல பள்ளிதானே என்றவர் தொடர்ந்து எல்லாமே இங்கதான் படிகணுன்னு ஆசைப்பட்டா முடியுமா ? எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்கன்னார் ? 

         அவரின் பொதுத்தேர்வு இந்நேரம் அரம்பித்து இருக்குமே என்ற அவசரமும் ஏன் கழுதறுக்கிறீர்கள் என்ற அயற்சியும் ஒரு சேரக் கேள்விகளாய் வந்து விழுந்தது.சோதனைத் தேர்வு முடிந்தவுடன் யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்கினாத்தான் மற்றபடி உங்களுக்கு என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்றார். 

 நன்றி சொல்லி விட்டு வெளியேறினோம். 

அந்த அதிகாரியின் வேலை நேரத்தை அபகரித்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டு ,விடைபெற்றேன் . 


             வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கிப் பயணப்படும் போது, எனக்குப் பள்ளித்தந்தையின் அந்தக் கேள்வி எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ?’ என்ற மீண்டும் கேட்டது.  எனது தந்தை என்னை ஆறாம் வகுப்புக்கு திண்டுக்கல் 1980ல் புனித மரியன்னைப் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டபோது இதே கேள்வி சிலர் கேட்டார்கள் .அப்போது அவர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார் . திண்டுக்கல்லில் மூன்று விதமான பள்ளிகள் அப்போது இருந்தது.ஒன்று அடித்தே படிக்க வைக்கும் பள்ளி.இன்னொன்று எப்படியோ படி எனக்கு மாசம் ஆனால் கவர் கொடுத்திடுவாங்கன்னு கூசாமச் சொல்லி பிழைப்பு நடத்தின ஆசிரியர்களின் புனிதத் தன்மையைத் தூக்கி எறியும் சில பேர் இருக்கும் அரசுப் பள்ளி!.இதற்கு இரண்டுக்கும் நடுவே அப்பா என்னைச் சேர்க்க விரும்பியது புனித மரியன்னைப் பள்ளியில்  . காரணம் அங்கு ஒழுக்கம் கல்வி இரண்டும் இரு கண்களாக இருந்தது. அடித்துப் படிக்க வைப்பதில் நம்பிக்கையற்றவர்கள் அங்கு இருந்த ஆசிரியர்கள் .ஆனால் அக்கறை மிகுந்தவர்கள் .எனது மூத்த சகோதரர் அங்குப் படித்தவர். ( திண்டுக்கல் ஐ.லியோனி, என் அண்ணனுக்கு சீனியர். ) அவர் நல்ல முறையில் தேறினாலும், குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்புக்கு அனுப்பவில்லை .

அப்பா அப்போது நினைத்து இருந்தால் இப்போது என்னைப் போல யாராவது ஒரு முக்கிய நபரை என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம் ஆனால் சிபாரிசை அவர் வெறுத்தார்.சிபாரிசினால் யாருக்கோ தகுதியான ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப்பறிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் . விளைவு ? ஐந்தாம் வகுப்பு வரை தன் சொந்த பெயரைக்கூடத் தமிழைத் தவிர வேறு எதிலும் எழுத தெரியாத எனக்கு எப்படி அந்தப் பள்ளியில் கிடைக்கும் ? அரசுப் பள்ளிதான் என் தகுதிக்கு வாய்ப்புத் தந்தது. 


ஒரு வேளை நான் அந்தப் புனித மரியன்னையில் படித்து இருந்தால் இங்கு வந்து பதிவுலகத்துக்கு வேண்டுமானால் வராமல் போயிருப்பேன்.ஆனால் அந்தப் பள்ளியில் நடத்த ஆள் இல்லாது போனதால் கைவிடப்பட்ட , எனக்குப் பிடித்த தேசிய மாணவர் படை (NCC ) அல்லது சாரணர் படையிலோ (Scout) சேர்ந்து, ராணுவத்தில் சேரும் ஒரு வாய்ப்பைப் புனித மரியன்னைப் பள்ளியின் மூலம் பெற்று இருப்பேன் ! அது என் கனவு .அந்தக் கனவையும் அந்தப் பள்ளியில் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.அங்கு படித்த என் வகுப்புத் தோழர்கள் பெரும்பகுதிப்பேர் தேராமல் அவர்களின் விவசாயத்துக்கு போய் விட்டார்கள் . சிலரை இப்போது முனிசிபால்டி குழி தோண்டும் பணியிலும் இன்னும் சிலர் அரசியல் வாதிகளாய் வலம் வருகிறார்கள் .நிறையப்பேரின் விதியை மாற்றிய பெருமை அந்த பள்ளிக்கு உண்டு.

அரசுப் பள்ளிகளில் காசு இல்லாதவர்கள் மட்டும் சேரவில்லை,வெகு தூரத்திலிருக்கும் கிராமத்துப் பள்ளியில் விவசாய வேலை மற்றும் மாடு மேய்த்த நேரம் போன பிறகு ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் , வேறு பள்ளியில் தோற்று ஒதுங்கினவர்கள் ,என்னைப்போல அடி முட்டாள்கள் எல்லோரும் படித்தோம் .எங்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவில்லை வேறு வழியில்லாது சில ஆசிரியர்கள் அடித்துப் படிக்க வைத்தார்கள்,அதிலும் முக்கியமாக விதியின்  பரிசோ தெரியவில்லை அந்தப் பள்ளியின் பிரேமா டீச்சர் ,அரங்க நாயகப்பெருமாள் ,ராபர்ட் சார் ,ஜோசப் சார் போன்ற தமிழாசிரியர்கள் இன்றும் நான் வணங்கிக் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் . அதே போல எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ’பாட்டனி மாஸ்டர்’சுந்தர மகாலிங்கம் சார் .அவருக்கு மற்ற ஆசிரியர்களே பயப்படுவார்கள் வகுப்பில் என்னை மற்றவர்கள் போல நடத்துவார்.மாலைத் தன் வீடு வரை என்னை அழைத்துச் சென்று  சாப்பிட வைத்திருக்கிறார்.ஆனால் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எதனால் என்பது இதுவரை எனக்குத் தெரியாது .


                  படிப்புதான் வரவில்லை இந்தப் பசங்களுக்குப் பொதுச் சேவையிலாவது பயன்படுத்தலாம் என்று நினைத்தரோ என்னவோ தெரியவில்லை சுந்தரமகாலிங்கம் சார் -  இயற்கைக் கழகம் (Nature Club) ஒன்றை ஆரம்பித்து,அதில் என்னைத் தலைவனாய் ( President ) போட்டுத் திண்டுக்கல் ஒடுக்கம் மர வளர்ப்புத்திட்டத்தில் பள்ளியின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் பங்கு பெறச்செய்து லட்சகணக்கான மரம் நடச்செய்து பள்ளிக்குப் பெருமைச் சேர்த்தார்.அந்த செய்தி அப்போது ’ஹிண்டு’ பத்திரிக்கையில் முதல் பக்க கட்டச்செய்தியாய் என் பெயருடன் வந்தது.பார்த்தீனியம் செடியளிப்புத் திட்டம்,மேலும்  குஜராத் மாநிலத்தின் ஜல்கானில்,  இந்திய அளவில் நடந்த மரம் நடுவிழாவில் கலந்து கொள்ளச் செய்தார் . இன்றும் நான் திண்டுக்கல் போகும் போது வெகு தூரத்திலிருந்து நின்றுப் பார்த்தாலே அந்த மரங்கள் தெரியும் அதில் ஒரு மரமாவது நான் நட்டுப் பிழைத்த மரமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன் .அந்தத் தோப்பின் மரங்களில் ஆணி வேர்களுக்கு நிச்சயம் என் பாட்டனி மாஸ்டர் சுந்தரமகாலிங்கம் சார் யாரெனெத் நிச்சயமாகத் தெரியும் .இயற்கை எப்போதும் மனிதனை மறக்காதல்லவா ? 


அதே சமயம் இந்தப் பசுமையான நிகழ்வுக்களுக்கு எதிராக  வாழ்நாள் முழுதும் மாறாத வலி நிறைந்த தழும்புகளையும் அங்குதான் பெற்றேன் . எட்டாவது படிக்கும் போது ஒரு பெண் ஆசிரியை  சொந்த வீட்டில் மாடி மேல் நிலைத்தொட்டிக் கழுவும் வேலைக்கு மாதம் ஒருமுறை அனுப்ப படுவதும், ஒன்பதாவது படிக்கும் போது வேதியியல் ஃபார்முலா தெரியவில்லை என்பதால் எங்கள் வகுப்புப் பிரம்பு உடைந்தும் அடுத்த வகுப்பு பிரம்புவரை அடித்தே உடைத்து அதையும் எங்கள் காசில் வாங்க வைத்து இருந்த ஆசிரியர்களும் இருந்தார்கள்.பத்தாவது படிக்கும்போது வேலை நேரத்தில் ஆசிரியர்களுக்குள்ளே வட்டி கொடுத்து வசூல் வாங்கச் சென்று விடும் என் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவர் வகுப்பை ’டியூசனில்’தான் எடுப்பார் . அதற்கு என்னால் போக முடியவில்லை .காரணம் வெளியில் கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கு (அடித்தே படிக்க வைக்கும்) பள்ளி ஆசிரியரிடம் படித்துக்கொண்டு இருந்தேன்.எனக்கு இருந்த கல்வி புலமைக்குத் தமிழ் வரலாறு தவிர எல்லாமே டியூசன் படிக்க வேண்டிய சூழ்நிலைதான்.ஆனால் வசதியில்லை .அதைக் அந்த வட்டிக்கார ஆசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை. தேவை இல்லாதுக்கெல்லாம் அடிப்பார்.அதிலும் என்னை ’லீடராக’போட்டுப் படிப்பையும் கெடுக்க முயற்சி தீவிர முயற்சியும் கூட எடுத்தார் .இதெல்லாம் பரவாயில்லை பத்தாவது பொதுத்தேர்வுக்குச் சில நாள் முன்னால் என்னையும் நண்பர் சுகுமாரையும் அழைத்து ,நீங்கள் இரண்டு பேரும் ஹாலுக்குள் துண்டுச் சீட்டுக்கள் கொண்டு போங்கள் .கேள்விகளுக்கு விடைகளை எழுதி (அவரிடம் டியூசன் படித்த) எனது சக மாணவர்களுக்குக் கொடுத்து உதவச்சொன்னார்.அப்படிப் பட்ட  அபத்தமும் அங்கு அரங்கேறியது. 


இப்போது யோசித்துப் பாருங்கள் இந்தக் கேள்வியை ! எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ? என்ற அந்தப் பள்ளியின் தந்தைக்கு பதிலாக என் மொத்த வலிகளையும் அவர் தந்த சில நிமிடத்தில் சொல்ல முடியுமா ? பண்ணிரெண்டாம் வகுப்பில் வேதியல் மற்றும் இயற்பியல் சமண்பாடுகள் புரியவில்லையே என்று புத்தகத்தைப் பார்த்து அழுது ,அழுது ஓய்ந்துபோய் வெறித்து ஓட்டு வீட்டின் கூரையைப் பார்த்து தானாய் சிரித்துக்கொண்டதைத்தான் சொல்லவா ? திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல நம் தாய்நாட்டின் முந்தையை (குறிப்பிட்ட) ஆண்டு வரலாறுகள் அத்தனையும் ஆங்கிலத்தில் மட்டுமதான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே அதை எப்படிப் படிப்பது என்று கேட்கவா ? 

இது மட்டுமா ? தீபாவளிக்கு அலுவலகம் சார்பில் நான் தயாரித்த ’ட்ராஃப்ட்’ மெயிலைப் பார்த்து ஒரு சின்னத் தவறுக்கு முதலாளி பல பேர் முன்னால் சொல்லிச் சிரித்த போது அவமானத்தில் வலித்தது சொல்லவா ? சரி இதெல்லாம் போகட்டும்.  என்னைப்போல என் பையனும் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான் (அதிலும் அங்கு ஒரு யோகா மாஸ்டராக இருக்க ஆசைப்படுகிறான் . அப்படியெல்லாம் இருக்காத் தெரியவில்லை ! ) அவன் கனவையாவது நிறைவேற்றுங்களேன் என்ற ஆதங்கத்தில் பார்த்து விட்டு என் அலுவலகம் திரும்போது தலைக்கவசத்திற்குள் வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் நான் அழுதேன்.நிறைய ஆண்கள் வெளியே தெரியாமல் என்னைப் போலத்தான் அழுகிறார்கள். 


அழுவதற்கு வில்லியம் ஜேம்ஸ் எண்ணங்களின் பிரதிபலிப்புக் காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு நடையைக் கட்டி விட்டார். அவருக்குத் தெரியுமா ? இந்திய ஆணுக்கு இருக்கும் பிரச்சனைகள் எத்தனை என்று ?... பல வருடம் கூடப் படித்த நண்பர்களை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது தொடங்கி , எம்பது மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் மூஞ்சிய கூடப் பார்க்காமல் பேப்பர் கொடுத்த டீச்சர் நாற்பது எடுத்த போது உரக்கக் கத்திச் சொல்லிப் பக்கத்து வகுப்புக்கே கேட்கும் அளவுக்குக் கூப்பாடுப் போடும் போது, இந்த உலகில் எவனுக்குமே பிடிக்காமல் போன தீபாவளிப் புது ஆடையைப் பார்த்தப் போதெல்லாம் வந்த அழுகை ,வயது ஒரு பக்குவம் தந்து நம் வீட்டில் அப்போதுதான் அக்காவோடோ அல்லது தங்கையோடோ ஒரு புரிதல் வரும் நேரத்தில் யாராவது ஒருவனுக்குக் கட்டிக்கொடுத்து அந்த மாமனுக்கோ மச்சானுக்கோ மெட்டிப் போட்டு அனுப்பி வைக்கும் போது , போயிட்டு வரேன் அப்பான்னு போகும் அக்காவை மவுனமாகப் பார்த்து கொண்டு இருக்கும் அப்பாவை பார்க்கும் போது , அடுத்து வந்த அக்காவை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்று எப்போதாவது சொல்லும்போது அந்த அக்கா ,அவருக்குப் பிடிக்காது என்று பிரித்துப்பேசி கொண்டு வந்து விட முடியுமா முடியாதான்னு நடையை கட்டும் போது ...நல்ல மேட்ச்சில் நம்ம பால் மட்டும் அந்த வீணாப் போனவன் தப்பாய்த் தொட அது பவுண்டரி லைனை தாண்டும் போது .. செஸ் விளையாட்டில் விளையாடத் தெரியாதவனின் சிப்பாயிடம் ராணியை பறி கொடுக்கும் போது .. ரம் அண்ட் சூட்டில் கீழே கிடந்த சீட்டை கவனிக்காமல் நழுவ விட்ட வாய்ப்பின் போது.. ரெட்டுக்கு ஃபாலோ போடுகிறேன்னு அதை எதிராளின் மவுத்தில் நிறுத்திக் கொடுக்கும் போது..சில சமயம் இதெல்லாம் ஆத்திரமும் அழுகையுமாய் பீறிடும் ...


கொடுத்த காதல் கடித்ததிற்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தையில் தூக்கி எறியாமல் அந்தப் பெண் அதைத் தலமையாசிரியர் அறைவரைப் புகார் அளித்து ,அதற்கு அப்பாவை வரவைத்து அங்கு நிறுத்திய போது ,அது உலக அளவில் பெரிய குற்றம் என்ற கூப்பாடுப் போட்டுப் பல வாரம் பேசாமல் பாக்கெட் மணியும் கொடுக்காத அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்... கேட்டக் குரூப் கிடைக்காமல் கிடைத்த குரூப் பிடிக்காமல் வைத்த அரியரை எதாவது ஒரு விசேசத்தில் தேடித் தேடிப் பெண்களைப் பெற்ற அம்மாக்களிடம் மட்டுமே நம் அம்மா சொல்லும் போது..காதலுக்கு உதவும் போது பஞ்சராகும் வண்டி மீது வரும் கோபம், தேடி வந்த பெண்ணைத் திருவிழாவில் தவற விட்டு கடைசி வரை கண்டு பிடிக்காமல் வீடு திரும்போது..அடித்துப் பிடித்து ஏறிக்குதித்து டிக்கட் கவுண்டரில் கை நீட்டும் போது டிக்கட் இல்லையென்று டப்பென்று அடித்துச் சாத்தும் போது , நண்பனிடம் வாங்கிய அதுவரை ஓட்டாத பைக்கைக் கியர் மாற்றிப் போட்டு அசடு வழியும் போது, பிடிக்காத பைக்கைச் சொல்லாமல் கொள்ளாமல் அப்பா வாங்கி நிறுத்தும் போது,பிடித்த ஹீரோ டம்மிக் கதையில் நடித்து ஃபிலாப் ஆக்கியது மட்டுமல்லாமல் அதை டிவிப் பேட்டியில் வந்து, என்னோட கேரியர்ல முக்கியமான படம்ன்னுக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாய்ச் சொல்லும் போது மொத்த வீடும் திரும்பி நக்கலாய் நம்மைப் பார்க்கும் போது ..

நம் தெருவிலே இருக்கிற ஒரே ஒரு ஃபிகரை எவனோ ஒருவன் தெரு முனையில் ட்ராப் பண்ணி விட்டு ,திரும்பி நமக்குக் கைக் காட்டும்போது ,பக்கத்து வீட்டுக் குட்டிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த போது தவறாக உச்சரித்த ஆங்கிலச்சொல்லை ஒட்டுக்கேட்டு அதைப்போய்த் தெருவுக்கு வரும் விளக்குமாறு விற்கும் பெண் வரை முதல் வீட்டு அங்கிள் தேடித் தேடி வெடிச்சிரிப்புடன் சொல்லிக் காட்டும் போதெல்லாம்,நம்மிடம் இருக்கும் மொபைல் போன் ஹேங் ஆகி வெறுப்பேற்றும் போது ...இன்னும் எத்தனை வலிகள் ஆணாய்ப் பிறந்தவனுக்கு ? 


               ஆனால் பிறக்கப் போகும் குழந்தையைப் பத்து மாதம் ஆணால் தூக்கிச் சுமக்க முடியாது .பெண்களின் பிரசவ வலியை நிச்சயமாய் ஒரு ஆண் மகனால்  புரிந்து கொள்ளவோ முடியாது . ஆனால் அன்று அந்தப் பிரசவத்தின் போது மருத்துவமனைக்கு வெளியே இவள் சின்ன வலிக்கெல்லாம் தாங்க மாட்டாளே எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ? என்று கவலைப்படத் தொடங்கிய ஆண்களின் அழுகையும்   வெளியே யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீர் துளிகளும்  இந்த மண்ணை இன்னும் ஈரமாகத்தான் வைத்துக்கொண்டு இருக்கிறது... 

1 கருத்து: