வியாழன், 31 மார்ச், 2016

என் இறந்த தினம் ( My Dead Day ) !



பெரியவர்கள் வாழும் அல்லது வாழ்ந்த வீட்டின் தனியறைகளில் , பரண்களில் அல்லது இரும்புப் பெட்டிகளில் ஏதாவது ஒரு ஆச்சர்யம் எப்போதும் ஒளிந்து கொண்டு இருக்கும் என்பதை நம்புவது எல்லோருக்கும் பழக்கமான ஒன்று ! எனது நண்பர் சுகுமார் வீட்டின் பரண்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு மூட்டையிலும் எங்களுக்கான ஏதோ ஓர் ரகசியம் காத்து இருக்கும் ! வீட்டில் யாருமில்லாத போது அனேகமாக எங்கள் வேலை அங்குப் பரணை ஆராய்வது !


அப்படி ஒரு சமயம் மூட்டையை இறக்கிப் பார்க்கும் போது முதலில் சிக்கியது சுகுமாரின் அப்பா தன் கைப்பட வரைந்த ஓர் ஓவிய நோட்டு.அதில் மிக நேர்த்தியான சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய, செதுக்கியது போலான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன .மிகப்பல ஓவியங்கள் ஒளிவுமறைவின்றி வரையப்பட்டு இருந்தாலும் விகல்ப மனம் உள்ளவர்களின் கண்களில் பட்டால் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காகக் குறிப்பிட்ட இடங்களில் சமீபத்தில் வெளியான சாருக்கான் மகள் சுஹானா (Suhana) ’பிகினி’ உடை போன்ற சின்ன மறைப்புகள் இருந்தன.அந்தப் பதினைந்து வயதில் அது ஒருவித உள்ளூரக் குறுகுறுப்பைத் தந்தாலும் அந்தப் பெரியவர்களின் பார்வையில் அந்த ஓவியங்களைப் பார்க்கும் போது , ஒரு மதிப்பையும் பிரமிப்பையும் தந்தது. இவ்வளவு தத்ரூபமான கைப்பட வரைந்த ஓவியங்களின் முதல் கைப்பிரதியை அப்போதுதான் பார்க்கிறேன் . அதற்கு முன் குமுத்தில் ஜெ…(ஜெயராஜ்) படங்களையும் ம.செ….(மணியம் செல்வன்) படங்களை மட்டுமே ஓவியம் என்று நினைத்துக் கொண்டு இருந்த காலம் அது ! 

              அடுத்து எங்களுக்குக் கிடைத்த புத்தகம்  பெயர் இல்லாத பழுப்பேறியக் காகிதங்களையுடைய கனமான ஒரு ஜோதிடப் புத்தகம் .அந்தப் புத்தகம்தான் இந்தப் பதிவுக்கே காரணம்...

அதில் என் மரணத்தைப்பற்றி…. 

        அந்தப் புத்தகத்தின் பல இடங்கள் அடிகோடிட்டு இருந்தன. அந்தக் கிழிந்தப் புத்தகத்துக்கான தலைப்பு பட்டியல் (Index) பகுதி சில பக்கங்கள் தள்ளி மடித்து உள்ளே வைக்கப்பட்டு இருந்தது. அதில் எங்களைக் கவர்ந்தத் தலைப்பு..
’ஒருவரின் மரணத்தேதியை எப்படிக் கண்டறியலாம்’
உடனே அந்தப்பகுதியை பிரித்தாராய்ந்துக் கண்டு பிடித்து மிக ஆவலுடன் வாசித்தோம். எனக்கு அதில்... 


”துலாம் ராசி ,சுவாதி  நட்சத்திரத்தில் எட்டாம் அதிபதி தசையில்  ஜாதகனுக்குத் தனது 83 ஆவது பிராயத்தில் ஒரு ஞாயிறுக் காலை சூரிய உதயத்திற்குச் சில நாளிகை முன் மாரடைப்பால் மரணம் சம்பவிக்கும்.” 

அதைப் படித்து விட்டு சாயந்திரம்வரை சுகுமார் வீட்டிலிருந்து விட்டுத்தான் என் வீட்டுக்குக் கிளம்பினேன்.சுகுமாரின் வீட்டுக்கும் என் வீட்டுக்கும் ஒரு கிலோ மீட்டர் தூரம் .நடந்து போகும்போது மீண்டும் அந்த ஞாபகம் பற்றிக்கொண்டது ..என் வரை வீடு வரும் வரை அதே நினைவுதான் சவலைப்பிள்ளையாய் மனதில் தொற்றிக்கொண்டு வந்தது... உயிரனங்களிலே மனிதன் மட்டுமே தனக்கு மரணம் உண்டு என் தெரிந்து வாழ்பவன் .இருந்தாலும் பதினைந்து வயதில் அந்தபுத்தகத்தின் வரிகள் ஒரு ஆழ்ந்த கலவர அலையை என்னுள் எழுப்பியது .

நான் 13 வயது வரை வளர்ந்த சூழ்நிலையும் அப்படிப்பட்டது .அந்த வயதில் பேய் , செய்வினை ,குட்டிச்சாத்தான் ,ஏவல் என்ற செய்திகள் சதா என் கிராமத்தை இரவுகளானால் இருள் கவ்வுகிறதோ இல்லையோ இந்தப் பயம் கவ்விப்பிடித்துக்கொள்ளும் . இதுக்கெல்லாம் மேலாகத் திண்டுக்கல் - பழநி இருப்புப்பாதை அருகில் ( இப்போது இருக்கும் அங்கு நகர் ”ஹவுசிங்போர்டு” கட்டுவதற்கு முன்னிருந்த கிராமம் ) என்னுடைய புதியஊர்.( ஊர்ப் பெயர் ) அந்த ஊர் அப்போது நகரத்தை விட்டு சுமார் இரண்டு கி.மீ தள்ளியிருந்ததால் தற்கொலை செய்துகொள்ள நிறையப்பேர் எங்கள் வீட்டுக்கு சுமார் ஆயிரம் அடித் தள்ளியுள்ள இரயில் தண்டவாளங்களைத்தான் தேர்வு செய்தார்கள் ! அந்த பகுதியில் போகும் ரயில் திடீரென்று நிறுத்தபட்டு இருந்தால் விபத்து நடந்து விட்டது என்பதாய் புரிந்துகொள்ளலாம்   அந்தக் கிராமம் முழுதும் ஓடிப்போய்ப் பார்த்துவிட்டுதான் மற்ற வேலையைப் பார்க்கப் போவார்கள் . அதில் எங்கள் வீட்டு அண்ணன்கள் நாழ்வரில் இருவர் மட்டும் முதல் ஆளாய் அங்கு போய் நிற்பார்கள் . அவர்களுக்கு அன்று இரவு என்னைப் பயமுறுத்த ஆயுதம் அதுதான் ! 


இங்க பாரு அந்த ஆளு மொட்டையாய் இருந்தான்.( செத்தவன் முடியோடு இருந்தால் பிழைத்து விடவா போகிறான் ?) குடித்து விட்டுத் தண்டவாளத்தில் படுத்து இருந்து இருக்கிறான் .நம்ம முனியாண்டிப் பார்த்து இருக்கிறார். அப்படியே ரயில் வந்து சதக் சதக்ன்னு ஏறி கழுத்து ஒருபக்கம் கால் சிதறி ஒருபக்கம் போயிருச்சு . முண்டம் மட்டும் தண்டவாளத்துக்கு நடுவில கிடந்துச்சு... 
                  அப்படியே தந்தி நிருபர் போல வீட்டுக்கு வந்து  கலந்து கட்டி அடிப்பார்கள் ! அதைக் கேட்டு விட்டு இரவு எனக்கு  இருக்கிற கொஞ்ச நெற்றி பூராவும் இடமில்லாத அளவுக்கு விபூதியை எடுத்துப்பூசிப் பூசிப் பயந்து கொண்டு தூங்குவேன் அந்த மாதிரி இரவுகள் ஏனோ ஆமை வேகத்தில்தான் நகரும்!


               அது மட்டுமல்ல எங்கள் பகுதியில் புளிய மரங்கள் அதிகம் . எல்லாப் புளிய மரங்களுமே பேய் பிடித்தவர்களுக்குக் கழிப்புக் கட்ட பயன் படுத்தியதுதான் பேய் ஓட்டுபவர் பேய் ஓட்டக் கொடுத்த காசுக்கு ஏற்ப பிடுங்கிய தலை முடிகளை இங்குக் கொண்டு வந்து பத்திரமாகப் பெரிய ஆணிகளில் சுற்றி புளிய மரத்தில் அடித்து விடுவார்கள் .கணக்கில்லாத அந்த ஆணிகளில் நீள முடிகளைப் பார்க்கும் போது அது காற்றில் லேசாக அசைந்தால் கூட யாரோ முகம் தெரியாத குரல் ஒன்று என்னைக் கூப்பிடுவது போல ஒரு பிரம்மை எனக்குள் தங்கிக்கொள்ளும். வீடு திரும்பிய அன்றைய இரவில் வரும் கனவுகள் எல்லாமே ஏறக்குறையப் பாதி ரயில் ஓடிக்கொண்டு இருக்கும் யாரோ தள்ளிவிட்டு உருண்டு விழுவது போலவே வரும் ! 

இப்படிச் சிறு வயதில் பயத்தின் பின்னனியிலும் (முன்னனியிலும்) வளர்ந்தாலோ என்னவோ இப்போதும் ”ஹாரர்” படங்களை என் வீட்டில் மனைவியோ மகனோ பார்க்கும் அளவுக்குக்கூட என்னால் தைரியமாகப் பார்க்க முடியாது. தாவணிக் கனவுகள் பாக்கியராஜ் குடும்பத்தோடு படம் பார்க்கப் போன கதையாய், நான் பேய் வரும் சீன்களில் கீழே எதையாவது தேடுவது போல முகத்தைத் திருப்பிக்கொண்டோ கண்ணை மூடிக்கொண்டோ யாருக்கும் தெரியாமல் சமாளித்துத் தப்பித்து விடுவேன் ! 

இதை மறக்க நினைத்த சில மாதங்களுக்குள்,மேலும் ஒரு சம்பவம் … 

நான் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் இருக்கும் போது ஒரு நாள் அந்த வழியாய் வந்த கிளி ஜோதிடக்காரர் ரூபத்தில் ஒரு பிரச்சனை வந்தது! பொழுது போக்காய் ஜோதிடம் பார்த்ததில் எல்லோருக்கும் ராமன் , சீதை என்று மங்களம் பாடிய கிளி என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை ,எனக்குக் எடுத்த சீட்டில் யாரோ கூண்டுக்குள் சிறைபட்டு நிற்பது மாதிரி ஒரு படம் எடுத்து தந்து ஒரு நெல்லைக் கவ்விக்கொண்டு மீண்டும் கூண்டுக்குள் சிறைப்பட்டது .அதற்குக் கிளி சாமி பலன் சொல்லும்போது ஒரு குண்டைப் போட்டார்..



…தம்பிக்கு நேரம் இந்த ஒரு மாதம் மிகவும் சரியில்லை.யாரோலோ கூண்டேறி ஜெயிலுக்குப் போகணும்ன்னுக் குறி சொல்லுது .இந்த ஒரு மாதம் யார் வீட்டிலும் தங்கக் கூடாது ,பொழுது சாயறதுக்குள்ள வீடு வந்து அடையணும் என்றவர் அதோடு நிறுத்தவில்லை …முக்கியமாப் போலிசுப் பிரச்சனைன்னு ஒரு நாளாவது தம்பி கூண்டேற விதியிருக்குன்னு சொல்லுது .. 

        என்று கிளியைக் கூண்டிலிருந்து வெளிவிட்டு என்னைக் கூண்டுக்குள் அடைத்து விட்டார் அந்த மனிதர் !.வீடு பயந்து விட்டது.அரண்டவன் கண்ணில் இருண்டதெல்லாம் பயம் என்பது போல ஆகிப்போச்சு .

ஆனால் அந்தக் கிளி சாமி சொல்லிச் சென்று முப்பது நாளுக்குள் காலை எழு மணிக்கெல்லாம் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அரக்கப் பரக்க மூச்சு வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்தார்.வந்தவர் திண்டுக்கல் மாணிக்கம் செட்டியார் மளிகைக் கடையில் பொட்டலம் மடிப்பவர். எழுதப் படிக்கத் தெரியாதவர் மூணு நாளாக மனிதர் குடும்பத்தோடு கொழுந்தியால் திருமணத்தைக் கொண்டாடத் தேனி போயிருக்கிறார் .இவர் இல்லாத வாடகை வீட்டில் திருடன் வந்து பொருளெல்லாம் எடுத்துக்கொண்டு இங்கே கொண்டாடி விட்டுப் போய் விட்டான் .காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் துணைக்கு எழுத படிக்கத் தெரிந்த ஆள் வேண்டுமென்று என் அம்மாவிடம் கேட்க அவர்களும் கிளி ஜோதிடம் மறந்து போய் இரக்கப்பட்டு அனுப்பி விட்டார்கள் . 
    காவல் நிலையத்திற்குக் காலை ஏழரைக்கு (அப்படித்தான் அரம்பித்தது) போனோம். அய்யா (காவல் துறை துணை ஆய்வாளர்) வரும் வருவதற்குள், அப்படியே அடுத்தத் தெருவில் உள்ள கடையில் இரண்டு குயர் பேப்பர்,ஒரு பேனா, வயர்லெஸ் பேட்டரிக்கு இரண்டு பாட்டில் டிஸ்டில் வாட்டர் வாங்கிக் கொடுத்துவிட்டுக் காத்து இருக்கச் சொன்னார் .பத்தரைக்கு வந்தார் அய்யா.வந்தவுடன் மற்றதெல்லாம் விசாரித்த அய்யா கடைசியில் இவரை விசாரித்தவர்,

      யாரைக்கேட்டு மூணு நாளெள்லாம் ஒம் பாட்டுக்கு பூட்டிட்டு போற ? ஒரு வார்த்தை இங்க வந்து சொல்லிட்டு போயிருக்கல்லாம்ல நாங்க அந்தப் பக்கம் ஒரு கண் வச்சு இருப்போம்ல ? என்றார் . 
 அவர் அக்கறைப்படுகிறாரா ? இல்ல சொல்லிட்டுப் போயிருந்தா இவரே எல்லாத்தையும் ஆள் வச்சு அள்ளி அனுப்பியிருப்பாரோ தெரியவில்லை! எனக்கு அந்தச் சமயத்தில் சிரிப்பு வந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது . ஆனால் அடக்கிக்கொண்டேன்.(ஒருவேளை என்னை ஜெயிலில் போட்டு விட்டால் ?) 


அப்புறம் இரண்டு காவலர்கள் எங்களுடன் வீடு வந்து கை வைக்காமல் சோதித்தார்கள்.பிறகு தடயவியல் நிபுணர்களுக்குத் தகவல் கொடுத்து ஒரு பெண்ணும் ஆணும் வந்தார்கள்.கதவு ,டேபிள் ,பரண் ,பீரோ,எல்லாப் பக்கமும் ஒரு பவுடர்த் தூவி பிறகு மெல்ல ஒரு பிரஸ் வைத்துத் தேங்யிருந்த ரேகைப் பதிவுகளை ’லென்ஸ்’ வைத்துப் பார்த்தார்கள்.போட்டோ எடுத்தார்கள்.இதில் ஒரு விசேசம் எனக்கு அப்போது தெரிந்தது.திருடர்களில் கூட இரண்டு வகைகள் இருக்கிறார்களாம் . ஒருவன் பணம் மற்றும் நகைகள் மட்டும் திருடுபவன் ,இன்னொருத்தன் அண்டாக் குண்டா வெள்ளிப்பாத்திரம் மட்டும் திருடுபவனாம்.அந்த வீட்டில் திருடியவன் இரண்டாம் வகை. அவர் வீட்டில் பித்தளைபாத்திரம் , வெள்ளிக்குத்து விளக்குகள் மட்டுமே களவு போயிருந்தன .பீரோவில் துணிக்கடியில் (அவருக்குக் கூடத் தெரியாமல் அவர் வீட்டு அம்மா ( மனைவி ) வைத்து இருந்த பணமெல்லாம் அப்படியே இருந்தது. அந்தச் சம்பவத்தை நம் இயக்குனர் சசிகுமார் வார்த்தையில் இப்போது சொல்ல வேண்டுமென்றால்  , ‘பொருள் மட்டும்தான் திருடுவேன் என்ற அந்த திருடனின் நேர்மை எனக்குப் பிடித்து இருந்தது !’ 

இந்தச் சம்பவம் நடந்த பிறகு ஜோதிடத்தில் நம்பிக்கை வந்ததோ இல்லையோ ஒரு சுவாரசியம் வந்தது சரி நமக்கு உண்மையில் என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்க ஆசைப்பட்டு அப்பாவிடம் கேட்டப் போதுதான் தெரிந்தது வீட்டில் யாருக்கும் முழுபலன்களைக் கணித்து ஜாதகம் நோட்டுக் கிடையாதாம்.பிறந்த போது எழுதிய குறிப்பு மட்டும்தான் இருந்தது.அதை எழுதியவரிடமே கொடுத்து முழுதாய் விரிவாக எழுதிக்கொள்ள அப்ப அந்த ஜோதிடரின் முகவரி சொன்னார் அவர் ஜோதிடர் மட்டுமில்லையாம் சிவன் கோவில் பூசாரியும் கூட .திண்டுக்கல் அரண்மனைக்குளத்தருகே (பேருந்து நிலையத்திலிருந்து மதுரைச் செல்லும் வழி ) அவர் வீடு தேடிப்போனேன் .சிவன் கோவில் பூசாரி என்பதால் உடனே வீட்டு அடையாளம் சொல்லி அனுப்பினார்கள். 

வீட்டு வாசலில் புதிதாய்ப் பந்தல் போடப்பட்டு இருந்தது.வாசலில் மத்திம வயதில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.
அவரிடம் ஜோஸ்யக்காரர் வீடு இதாங்களா ? என்றேன் .
ஆமாம் என்றார் .
அவரப் பார்க்க முடியுங்களா? என்றேன் .
அவரை என்னை உற்றுப்பார்த்து விட்டு ,

அவர் இறந்து இன்னைக்கோட மூணு நாளாகுது என்றார். 

செவ்வாய், 22 மார்ச், 2016

ஆண்கள் அழுவது வெளியே தெரிவதில்லை !


                  ஆண்கள் அழுவது சில சமயம் வெளியே தெரிவதில்லை ! இப்படி ஆரம்பிக்கும் இந்தப் பதிவு ஒரு விதக் கோழைத்தனமான் பதிவாகக் கூட உங்கள் மனதில் நினைக்கலாம் .ஆனால் இந்த உலகில் அப்பாக்களின் அழுகையை மொழிப் பெயர்க்க யாருமில்லை . கம்பீரமாகவே நடித்து விட்டுத் தன்னால் எதோ ஒன்று முடியாதபோது அதுவும் தன் குழந்தைகளின் படிப்புக்கோ,திருமண விசயத்திலோ நல்லது என்று தெரிந்த விசயத்தைச் செய்ய முடியாத நிலை வரும் போது எவ்வளவு பெரிய சாதனை செய்த அப்பாவானாலும் முகம் பொத்தி அழுக வேண்டிய நிலை வருமே அந்த நாளை சில சமயம் மறக்கவோ அல்லது மறுக்க முடியாது . அப்படிப்பட்ட அப்பாவில் நானும் ஒருவன். 

            விசயம் இதுதான் .இன்று அந்தக் குழந்தை ஏசு பள்ளியில் என் பையனைச் சேர்த்து விட மாமானாருக்குத் தெரிந்த ஒரு காவல் துறை அதிகாரி மூலம் அந்தப் பள்ளியின் தந்தையை ( Father) சந்தித்தோம் .பொதுத்தேர்வு நடக்கிறபடியால் அவரைச் சில நிமிடமே சந்திக்க அவகாசம் கிடைத்தது. 

           வரவேற்றவர் மரியாதை நிமித்தமாகச் சில வார்த்தை அந்த அதிகாரியிடம் பேசிய பள்ளித் தந்தை என்னிடம் திரும்பி இப்போ உங்க பையன் எங்க படிக்கிறான் ? என்றார்.சொன்னேன்.அதுவுமே நல்ல பள்ளிதானே என்றவர் தொடர்ந்து எல்லாமே இங்கதான் படிகணுன்னு ஆசைப்பட்டா முடியுமா ? எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்கன்னார் ? 

         அவரின் பொதுத்தேர்வு இந்நேரம் அரம்பித்து இருக்குமே என்ற அவசரமும் ஏன் கழுதறுக்கிறீர்கள் என்ற அயற்சியும் ஒரு சேரக் கேள்விகளாய் வந்து விழுந்தது.சோதனைத் தேர்வு முடிந்தவுடன் யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்கினாத்தான் மற்றபடி உங்களுக்கு என்னால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்றார். 

 நன்றி சொல்லி விட்டு வெளியேறினோம். 

அந்த அதிகாரியின் வேலை நேரத்தை அபகரித்த குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டு ,விடைபெற்றேன் . 


             வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் நோக்கிப் பயணப்படும் போது, எனக்குப் பள்ளித்தந்தையின் அந்தக் கேள்வி எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ?’ என்ற மீண்டும் கேட்டது.  எனது தந்தை என்னை ஆறாம் வகுப்புக்கு திண்டுக்கல் 1980ல் புனித மரியன்னைப் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டபோது இதே கேள்வி சிலர் கேட்டார்கள் .அப்போது அவர் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டார் . திண்டுக்கல்லில் மூன்று விதமான பள்ளிகள் அப்போது இருந்தது.ஒன்று அடித்தே படிக்க வைக்கும் பள்ளி.இன்னொன்று எப்படியோ படி எனக்கு மாசம் ஆனால் கவர் கொடுத்திடுவாங்கன்னு கூசாமச் சொல்லி பிழைப்பு நடத்தின ஆசிரியர்களின் புனிதத் தன்மையைத் தூக்கி எறியும் சில பேர் இருக்கும் அரசுப் பள்ளி!.இதற்கு இரண்டுக்கும் நடுவே அப்பா என்னைச் சேர்க்க விரும்பியது புனித மரியன்னைப் பள்ளியில்  . காரணம் அங்கு ஒழுக்கம் கல்வி இரண்டும் இரு கண்களாக இருந்தது. அடித்துப் படிக்க வைப்பதில் நம்பிக்கையற்றவர்கள் அங்கு இருந்த ஆசிரியர்கள் .ஆனால் அக்கறை மிகுந்தவர்கள் .எனது மூத்த சகோதரர் அங்குப் படித்தவர். ( திண்டுக்கல் ஐ.லியோனி, என் அண்ணனுக்கு சீனியர். ) அவர் நல்ல முறையில் தேறினாலும், குடும்பச் சூழ்நிலையால் மேற்படிப்புக்கு அனுப்பவில்லை .

அப்பா அப்போது நினைத்து இருந்தால் இப்போது என்னைப் போல யாராவது ஒரு முக்கிய நபரை என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க முயற்சி செய்து இருக்கலாம் ஆனால் சிபாரிசை அவர் வெறுத்தார்.சிபாரிசினால் யாருக்கோ தகுதியான ஒருவனுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப்பறிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார் . விளைவு ? ஐந்தாம் வகுப்பு வரை தன் சொந்த பெயரைக்கூடத் தமிழைத் தவிர வேறு எதிலும் எழுத தெரியாத எனக்கு எப்படி அந்தப் பள்ளியில் கிடைக்கும் ? அரசுப் பள்ளிதான் என் தகுதிக்கு வாய்ப்புத் தந்தது. 


ஒரு வேளை நான் அந்தப் புனித மரியன்னையில் படித்து இருந்தால் இங்கு வந்து பதிவுலகத்துக்கு வேண்டுமானால் வராமல் போயிருப்பேன்.ஆனால் அந்தப் பள்ளியில் நடத்த ஆள் இல்லாது போனதால் கைவிடப்பட்ட , எனக்குப் பிடித்த தேசிய மாணவர் படை (NCC ) அல்லது சாரணர் படையிலோ (Scout) சேர்ந்து, ராணுவத்தில் சேரும் ஒரு வாய்ப்பைப் புனித மரியன்னைப் பள்ளியின் மூலம் பெற்று இருப்பேன் ! அது என் கனவு .அந்தக் கனவையும் அந்தப் பள்ளியில் குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள்.அங்கு படித்த என் வகுப்புத் தோழர்கள் பெரும்பகுதிப்பேர் தேராமல் அவர்களின் விவசாயத்துக்கு போய் விட்டார்கள் . சிலரை இப்போது முனிசிபால்டி குழி தோண்டும் பணியிலும் இன்னும் சிலர் அரசியல் வாதிகளாய் வலம் வருகிறார்கள் .நிறையப்பேரின் விதியை மாற்றிய பெருமை அந்த பள்ளிக்கு உண்டு.

அரசுப் பள்ளிகளில் காசு இல்லாதவர்கள் மட்டும் சேரவில்லை,வெகு தூரத்திலிருக்கும் கிராமத்துப் பள்ளியில் விவசாய வேலை மற்றும் மாடு மேய்த்த நேரம் போன பிறகு ஆரம்பப் பள்ளியில் படித்தவர்கள் , வேறு பள்ளியில் தோற்று ஒதுங்கினவர்கள் ,என்னைப்போல அடி முட்டாள்கள் எல்லோரும் படித்தோம் .எங்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவில்லை வேறு வழியில்லாது சில ஆசிரியர்கள் அடித்துப் படிக்க வைத்தார்கள்,அதிலும் முக்கியமாக விதியின்  பரிசோ தெரியவில்லை அந்தப் பள்ளியின் பிரேமா டீச்சர் ,அரங்க நாயகப்பெருமாள் ,ராபர்ட் சார் ,ஜோசப் சார் போன்ற தமிழாசிரியர்கள் இன்றும் நான் வணங்கிக் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் . அதே போல எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் ’பாட்டனி மாஸ்டர்’சுந்தர மகாலிங்கம் சார் .அவருக்கு மற்ற ஆசிரியர்களே பயப்படுவார்கள் வகுப்பில் என்னை மற்றவர்கள் போல நடத்துவார்.மாலைத் தன் வீடு வரை என்னை அழைத்துச் சென்று  சாப்பிட வைத்திருக்கிறார்.ஆனால் அவர் என் மேல் வைத்த நம்பிக்கை எதனால் என்பது இதுவரை எனக்குத் தெரியாது .


                  படிப்புதான் வரவில்லை இந்தப் பசங்களுக்குப் பொதுச் சேவையிலாவது பயன்படுத்தலாம் என்று நினைத்தரோ என்னவோ தெரியவில்லை சுந்தரமகாலிங்கம் சார் -  இயற்கைக் கழகம் (Nature Club) ஒன்றை ஆரம்பித்து,அதில் என்னைத் தலைவனாய் ( President ) போட்டுத் திண்டுக்கல் ஒடுக்கம் மர வளர்ப்புத்திட்டத்தில் பள்ளியின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களையும் பங்கு பெறச்செய்து லட்சகணக்கான மரம் நடச்செய்து பள்ளிக்குப் பெருமைச் சேர்த்தார்.அந்த செய்தி அப்போது ’ஹிண்டு’ பத்திரிக்கையில் முதல் பக்க கட்டச்செய்தியாய் என் பெயருடன் வந்தது.பார்த்தீனியம் செடியளிப்புத் திட்டம்,மேலும்  குஜராத் மாநிலத்தின் ஜல்கானில்,  இந்திய அளவில் நடந்த மரம் நடுவிழாவில் கலந்து கொள்ளச் செய்தார் . இன்றும் நான் திண்டுக்கல் போகும் போது வெகு தூரத்திலிருந்து நின்றுப் பார்த்தாலே அந்த மரங்கள் தெரியும் அதில் ஒரு மரமாவது நான் நட்டுப் பிழைத்த மரமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொள்வேன் .அந்தத் தோப்பின் மரங்களில் ஆணி வேர்களுக்கு நிச்சயம் என் பாட்டனி மாஸ்டர் சுந்தரமகாலிங்கம் சார் யாரெனெத் நிச்சயமாகத் தெரியும் .இயற்கை எப்போதும் மனிதனை மறக்காதல்லவா ? 


அதே சமயம் இந்தப் பசுமையான நிகழ்வுக்களுக்கு எதிராக  வாழ்நாள் முழுதும் மாறாத வலி நிறைந்த தழும்புகளையும் அங்குதான் பெற்றேன் . எட்டாவது படிக்கும் போது ஒரு பெண் ஆசிரியை  சொந்த வீட்டில் மாடி மேல் நிலைத்தொட்டிக் கழுவும் வேலைக்கு மாதம் ஒருமுறை அனுப்ப படுவதும், ஒன்பதாவது படிக்கும் போது வேதியியல் ஃபார்முலா தெரியவில்லை என்பதால் எங்கள் வகுப்புப் பிரம்பு உடைந்தும் அடுத்த வகுப்பு பிரம்புவரை அடித்தே உடைத்து அதையும் எங்கள் காசில் வாங்க வைத்து இருந்த ஆசிரியர்களும் இருந்தார்கள்.பத்தாவது படிக்கும்போது வேலை நேரத்தில் ஆசிரியர்களுக்குள்ளே வட்டி கொடுத்து வசூல் வாங்கச் சென்று விடும் என் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அவர் வகுப்பை ’டியூசனில்’தான் எடுப்பார் . அதற்கு என்னால் போக முடியவில்லை .காரணம் வெளியில் கணக்கு மற்றும் ஆங்கில இலக்கணத்திற்கு (அடித்தே படிக்க வைக்கும்) பள்ளி ஆசிரியரிடம் படித்துக்கொண்டு இருந்தேன்.எனக்கு இருந்த கல்வி புலமைக்குத் தமிழ் வரலாறு தவிர எல்லாமே டியூசன் படிக்க வேண்டிய சூழ்நிலைதான்.ஆனால் வசதியில்லை .அதைக் அந்த வட்டிக்கார ஆசிரியர் ஒத்துக்கொள்ளவில்லை. தேவை இல்லாதுக்கெல்லாம் அடிப்பார்.அதிலும் என்னை ’லீடராக’போட்டுப் படிப்பையும் கெடுக்க முயற்சி தீவிர முயற்சியும் கூட எடுத்தார் .இதெல்லாம் பரவாயில்லை பத்தாவது பொதுத்தேர்வுக்குச் சில நாள் முன்னால் என்னையும் நண்பர் சுகுமாரையும் அழைத்து ,நீங்கள் இரண்டு பேரும் ஹாலுக்குள் துண்டுச் சீட்டுக்கள் கொண்டு போங்கள் .கேள்விகளுக்கு விடைகளை எழுதி (அவரிடம் டியூசன் படித்த) எனது சக மாணவர்களுக்குக் கொடுத்து உதவச்சொன்னார்.அப்படிப் பட்ட  அபத்தமும் அங்கு அரங்கேறியது. 


இப்போது யோசித்துப் பாருங்கள் இந்தக் கேள்வியை ! எதுக்கு இங்க படிக்கவைக்க ஆசைப்படுறீங்க ? என்ற அந்தப் பள்ளியின் தந்தைக்கு பதிலாக என் மொத்த வலிகளையும் அவர் தந்த சில நிமிடத்தில் சொல்ல முடியுமா ? பண்ணிரெண்டாம் வகுப்பில் வேதியல் மற்றும் இயற்பியல் சமண்பாடுகள் புரியவில்லையே என்று புத்தகத்தைப் பார்த்து அழுது ,அழுது ஓய்ந்துபோய் வெறித்து ஓட்டு வீட்டின் கூரையைப் பார்த்து தானாய் சிரித்துக்கொண்டதைத்தான் சொல்லவா ? திருப்பூர்ப் புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது போல நம் தாய்நாட்டின் முந்தையை (குறிப்பிட்ட) ஆண்டு வரலாறுகள் அத்தனையும் ஆங்கிலத்தில் மட்டுமதான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே அதை எப்படிப் படிப்பது என்று கேட்கவா ? 

இது மட்டுமா ? தீபாவளிக்கு அலுவலகம் சார்பில் நான் தயாரித்த ’ட்ராஃப்ட்’ மெயிலைப் பார்த்து ஒரு சின்னத் தவறுக்கு முதலாளி பல பேர் முன்னால் சொல்லிச் சிரித்த போது அவமானத்தில் வலித்தது சொல்லவா ? சரி இதெல்லாம் போகட்டும்.  என்னைப்போல என் பையனும் ராணுவத்தில் சேர ஆசைப்படுகிறான் (அதிலும் அங்கு ஒரு யோகா மாஸ்டராக இருக்க ஆசைப்படுகிறான் . அப்படியெல்லாம் இருக்காத் தெரியவில்லை ! ) அவன் கனவையாவது நிறைவேற்றுங்களேன் என்ற ஆதங்கத்தில் பார்த்து விட்டு என் அலுவலகம் திரும்போது தலைக்கவசத்திற்குள் வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் நான் அழுதேன்.நிறைய ஆண்கள் வெளியே தெரியாமல் என்னைப் போலத்தான் அழுகிறார்கள். 


அழுவதற்கு வில்லியம் ஜேம்ஸ் எண்ணங்களின் பிரதிபலிப்புக் காரணமாக உணர்வுகள் உடல் ரீதியாக வெளிப்படுகிறது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு நடையைக் கட்டி விட்டார். அவருக்குத் தெரியுமா ? இந்திய ஆணுக்கு இருக்கும் பிரச்சனைகள் எத்தனை என்று ?... பல வருடம் கூடப் படித்த நண்பர்களை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது தொடங்கி , எம்பது மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் மூஞ்சிய கூடப் பார்க்காமல் பேப்பர் கொடுத்த டீச்சர் நாற்பது எடுத்த போது உரக்கக் கத்திச் சொல்லிப் பக்கத்து வகுப்புக்கே கேட்கும் அளவுக்குக் கூப்பாடுப் போடும் போது, இந்த உலகில் எவனுக்குமே பிடிக்காமல் போன தீபாவளிப் புது ஆடையைப் பார்த்தப் போதெல்லாம் வந்த அழுகை ,வயது ஒரு பக்குவம் தந்து நம் வீட்டில் அப்போதுதான் அக்காவோடோ அல்லது தங்கையோடோ ஒரு புரிதல் வரும் நேரத்தில் யாராவது ஒருவனுக்குக் கட்டிக்கொடுத்து அந்த மாமனுக்கோ மச்சானுக்கோ மெட்டிப் போட்டு அனுப்பி வைக்கும் போது , போயிட்டு வரேன் அப்பான்னு போகும் அக்காவை மவுனமாகப் பார்த்து கொண்டு இருக்கும் அப்பாவை பார்க்கும் போது , அடுத்து வந்த அக்காவை இன்னும் ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்று எப்போதாவது சொல்லும்போது அந்த அக்கா ,அவருக்குப் பிடிக்காது என்று பிரித்துப்பேசி கொண்டு வந்து விட முடியுமா முடியாதான்னு நடையை கட்டும் போது ...நல்ல மேட்ச்சில் நம்ம பால் மட்டும் அந்த வீணாப் போனவன் தப்பாய்த் தொட அது பவுண்டரி லைனை தாண்டும் போது .. செஸ் விளையாட்டில் விளையாடத் தெரியாதவனின் சிப்பாயிடம் ராணியை பறி கொடுக்கும் போது .. ரம் அண்ட் சூட்டில் கீழே கிடந்த சீட்டை கவனிக்காமல் நழுவ விட்ட வாய்ப்பின் போது.. ரெட்டுக்கு ஃபாலோ போடுகிறேன்னு அதை எதிராளின் மவுத்தில் நிறுத்திக் கொடுக்கும் போது..சில சமயம் இதெல்லாம் ஆத்திரமும் அழுகையுமாய் பீறிடும் ...


கொடுத்த காதல் கடித்ததிற்கு உன்னைப் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தையில் தூக்கி எறியாமல் அந்தப் பெண் அதைத் தலமையாசிரியர் அறைவரைப் புகார் அளித்து ,அதற்கு அப்பாவை வரவைத்து அங்கு நிறுத்திய போது ,அது உலக அளவில் பெரிய குற்றம் என்ற கூப்பாடுப் போட்டுப் பல வாரம் பேசாமல் பாக்கெட் மணியும் கொடுக்காத அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்... கேட்டக் குரூப் கிடைக்காமல் கிடைத்த குரூப் பிடிக்காமல் வைத்த அரியரை எதாவது ஒரு விசேசத்தில் தேடித் தேடிப் பெண்களைப் பெற்ற அம்மாக்களிடம் மட்டுமே நம் அம்மா சொல்லும் போது..காதலுக்கு உதவும் போது பஞ்சராகும் வண்டி மீது வரும் கோபம், தேடி வந்த பெண்ணைத் திருவிழாவில் தவற விட்டு கடைசி வரை கண்டு பிடிக்காமல் வீடு திரும்போது..அடித்துப் பிடித்து ஏறிக்குதித்து டிக்கட் கவுண்டரில் கை நீட்டும் போது டிக்கட் இல்லையென்று டப்பென்று அடித்துச் சாத்தும் போது , நண்பனிடம் வாங்கிய அதுவரை ஓட்டாத பைக்கைக் கியர் மாற்றிப் போட்டு அசடு வழியும் போது, பிடிக்காத பைக்கைச் சொல்லாமல் கொள்ளாமல் அப்பா வாங்கி நிறுத்தும் போது,பிடித்த ஹீரோ டம்மிக் கதையில் நடித்து ஃபிலாப் ஆக்கியது மட்டுமல்லாமல் அதை டிவிப் பேட்டியில் வந்து, என்னோட கேரியர்ல முக்கியமான படம்ன்னுக் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாய்ச் சொல்லும் போது மொத்த வீடும் திரும்பி நக்கலாய் நம்மைப் பார்க்கும் போது ..

நம் தெருவிலே இருக்கிற ஒரே ஒரு ஃபிகரை எவனோ ஒருவன் தெரு முனையில் ட்ராப் பண்ணி விட்டு ,திரும்பி நமக்குக் கைக் காட்டும்போது ,பக்கத்து வீட்டுக் குட்டிப் பிள்ளைக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த போது தவறாக உச்சரித்த ஆங்கிலச்சொல்லை ஒட்டுக்கேட்டு அதைப்போய்த் தெருவுக்கு வரும் விளக்குமாறு விற்கும் பெண் வரை முதல் வீட்டு அங்கிள் தேடித் தேடி வெடிச்சிரிப்புடன் சொல்லிக் காட்டும் போதெல்லாம்,நம்மிடம் இருக்கும் மொபைல் போன் ஹேங் ஆகி வெறுப்பேற்றும் போது ...இன்னும் எத்தனை வலிகள் ஆணாய்ப் பிறந்தவனுக்கு ? 


               ஆனால் பிறக்கப் போகும் குழந்தையைப் பத்து மாதம் ஆணால் தூக்கிச் சுமக்க முடியாது .பெண்களின் பிரசவ வலியை நிச்சயமாய் ஒரு ஆண் மகனால்  புரிந்து கொள்ளவோ முடியாது . ஆனால் அன்று அந்தப் பிரசவத்தின் போது மருத்துவமனைக்கு வெளியே இவள் சின்ன வலிக்கெல்லாம் தாங்க மாட்டாளே எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ? என்று கவலைப்படத் தொடங்கிய ஆண்களின் அழுகையும்   வெளியே யாருக்கும் தெரியாமல் வழியும் கண்ணீர் துளிகளும்  இந்த மண்ணை இன்னும் ஈரமாகத்தான் வைத்துக்கொண்டு இருக்கிறது... 

வியாழன், 17 மார்ச், 2016

பாரதி பாஸ்கரின் ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...” நூல் மதிப்புரை.



சன் டிவியில் தீபாவளி , பொங்கலைக் கொண்டாடுகிறார்களோ இல்லையோ பட்டிமன்றங்களை இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதிலும் திரு.சாலமன் பாப்பையா,திருமதி.பாரதி பாஸ்கர்,திரு.ராஜா இவர்கள் கூட்டணியை நம்பியே இன்றும் சன் டிவி மக்கள் மனதில் நிரந்தரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்று வாய்க் கூசாமல் சொல்லலாம் ! இன்று இருக்கும் பிரபலத்துக்குப் பாரதி பாஸ்கரும் ,ராஜாவும் இன்னும் கூடத் தங்களை வளர்த்து விட்டவர்களானாலும் மேற்படித் தொலைக்காட்சியை எதோ ஒரு நன்றியுணர்வோடுதான் தாங்கிக் கொண்டு இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது !

பாரதி பாஸ்கர் ஆனந்த விகடன் மூலம் எழுதிய கட்டுரைத்தொகுதி அடங்கிய - ”நீ நதி போல ஓடிக்கொண்டு இரு...” நூல் வாசிக்க நேர்ந்தது (விகடன் பிரசுரம்,96 பக்கங்கள், விலை 70 ரூபாய்..ஓவியங்கள் :ஷிவ்ராம்) அதைப்பற்றித்தான் இங்குப் பேசப்போகிறோம் .

எழுதத் தெரிந்தவர்கள் நன்றாகப் பேசுவார்கள் என்பதற்கு உத்திரவாதம் தரமுடியாது ஆனால் பேச தெரிந்தவர்கள் அற்புதமாக எழுதுவார்கள் என்பது திருமதி பாரதி பாஸ்கராலும் நிருபணமாகியிருக்கிறது ! மேடையில் முழங்குவது போலத் தனது எழுத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் .அதிலும் அவரின் பட்டிமன்ற அதே பேச்சுத் தொணியில் கொஞ்சமும் விட்டுத்தராத் தன்மை எழுத்திலும் அப்படியே இருக்கிறது . நுணுக்கமான பொருள் செறிவுடன் , மனிதாபிமான இழையோட்டத்துடன் இந்த நூலின் மூலம் சுமார் 89 பக்கங்களில் ( மொத்தப் பக்கம் 96 ) ஒரு மேடைப்பாடம் நடத்தியிருக்கிறார்.


ஆண்கள் நிற்க ...

இருபது தலைப்புகளில் அவர் படைத்த கட்டுரைகளில் பெரும்பகுதி ஆணாதிக்க விருட்சத்தின் வேர்களில் சுடு நீரை ஊற்றும் முயற்சியாகவே இருக்கிறது ! கட்டுரை 1,2,7,13,19 கணவர்களால் பாராட்டப்படாத பெண்கள் பற்றி
”வீடு பாராட்டாவிட்டாலும் , நேசிக்கிறது”என்ற தலைப்பில் பேசும் கட்டுரையில் சின்னச் சின்னப் பாராட்டுகளுக்கு ஏங்கும் பெண்களுக்கான பரிந்துரைத்துப் பேசும் அவர் “அங்கீகாரத்துக்கான ஏக்கம் ஆண்களின் குரோமோசோம்களை விடப் பெண்கள் குரோமோசோம்களில் அதிகம் என்று விஞ்ஞானம் சொல்கிறதாம்” (பக்.10). இது கிடைக்காதபட்சத்தில் ஏற்படும் அபாயங்கள் பற்றியும் பேசுகிறார் .

மேலும் “கயமை”என்ற கட்டுரையில் பெண்களைச் சமூகமே ஒருவித பயன்படும் பொருளாகப் பார்க்கிறது .எல்லா விளம்பர பொருள்களிலும் பெண்களே காட்சி பொருளாவதாகச் சொல்வதோடு ,அதிலும் திரைப்பாடல்களில் பெண்களை “மார்க்கெட் தோறும் கொட்டிக்கிடக்கும் காய்கறிகளோடு பெண் உடலைச் சம்பந்தப்படுத்தும் கருத்து நிறைந்த சினிமாப் பாடல்கள்” (பக்.14) என்ற நிலைதான் இன்று நிலவுவதாக விரக்தியில் பதிவிடுகிறார்.

சமூகத்தின் எல்லா விமர்சனப் பார்வைகளும் பெண் மீதே வைக்கப்படும் முட்டாள்தனம்பற்றியும் ,இளம் பெண்களை உடைகளிலும் நடைகளையும் கண்டிக்கும் சமூகத்தைத் தனது எழுத்து மூலம் கோபமாகப் பார்கிறார்,பணியிடங்களில் சக ஆண்கள் பெண்களுக்குக் கொடுக்கும் ‘பாலியல் சீண்டல்கள்’ பற்றிக் கொந்தளிக்கிறார். முடிவாகப் பெண்களின் வாழ்வே போராட்டம் இருந்தாலும் ஆண்கள் வாழ்வில் நடந்த அத்தைனையும் சாதனை என்று மட்டும் பதிவிடப்படுவதாக ஆதங்கப்படுகிறார்.


பெண்கள் கவனிக்க ...

”என்னைப் பெண்ணாக்கிய இயற்கைதான் எத்தனை கருணையுடையது !” என்று பெருமைப்படும் பாரதி பாஸ்கர் பெண்களுக்கெனெ நிறைய அக்கறையைக் கொட்டிக் கொட்டி எழுதிய கட்டுரைகள் 4,6,9,10,14,16,17 போன்றவை. சின்ன,சின்ன மனச்சுமைகளை அவர்கள் தூக்கிச் சுமப்பது ,விட்டில் குழந்தைகள் முதியோர்களிடம் நாம் சின்னச் சின்ன விசாரிப்புகளை அவர்கள் மேல் அக்கறையாக நீளும் ஒரு கையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார்! அழகு என்ற பெண்களின் கற்பனையான மன பிம்பம் ! கரைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறார்..

”அக்னி மூளையின் அறை … பெண்களுக்கெல்லாம் சிறை ! “ என்ற பதிவில் “திரும்பத் திரும்ப நிகழும் சமையல் வேலை கையில் அள்ளிய நிதி நீர் போல நம் கண் முன்னே நம் வாழ்வின் நேரத்தை எல்லாம் நம்மிடமிருந்து ஒழுகச் செய்கிறது” என்று கவித்துவமானப் பார்வையில் தன் வேதனையைப் பகிற்கிறார்.வீட்டின் நிதி நிலமையில் பெண்களின் அறியாமை பற்றிப் பேசும் அவர் ,

” பிரியாத நட்பென்னும் பெரு வரம் வாய்க்குமோ?” என்ற பதிவில் பெண்கள் தங்கள் நட்பை ,வாழ்ந்த இடத்தை இழக்கும் சோகத்தை “பெரு நதியில் விழுந்த மரம் போன்றது பெண்களின் வாழ்வு நதியின் பயணத்தை ஒன்றாகவே தொடங்கிய பல மரங்களில் ஒவ்வொன்றின் பயணமும் வேறு வேறாகிப் போவது போல ..என்று மனம் கசிகிறார்.

இரண்டாவது குழந்தைகள் வளர்ப்பினைப் பற்றிய தன்னுடைய பார்வையை 3,8,12,15 பதிவுகளில் மிகத் தீர்க்கமாகப் பதித்துள்ளார் .”அதிலும் வலி நிரம்பிய இழப்புகள்… வராமல் இருக்கக் கடவோம் ”.என்ற கட்டுரையில் ”குழந்தைகள் பிறந்தவுடன் அதை வளர்க்கும் திறமையை இயற்கைத் தமக்கு உடனடியாக வழங்கி விடுகிறது என்று எல்லாப் பெற்றோறுமே நம்புகிறோம் ! என்ற தவறை உணர்த்துகிறார் .

மேலும் பெற்றோர்கள் எப்படி ஆதரவாக நடந்து கொள்ளா வேண்டும் என்று “மௌன வாழ்த்து” என்ற கட்டுரையில்,
வீட்டுப் பெண்களிடம் அம்மாக்களின் குரல் எடுபடாமல் போனதற்கான காரணத்தைப் பேசுகிறார் இங்கு .” பிடிக்காததைப் பெண் செய்யும்போது உடனே கத்தி ஆர்பாட்டம் செய்து என் பேச்சை இந்த வீட்ல யாரு கேக்கிறாங்க வில் முடிக்கும் அம்மாக்கள் இங்கு ஜெயிக்கவே முடியாது .ஆறப்போட்டுத் தனியாகப் பேசி ,நீ சாதிக்கப் பிறந்தவள் என்று நினைவூட்டினால் மட்டுமே இந்தத் தலைமுறை பெண் குஅந்தைகளை வழி நடத்தல் சாத்தியம்” என்று இந்தக்கால அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறார்.


இருபாலம் கடக்க...

இருபாலருக்கும் பொதுவாக அவர் பேசப்படும் கட்டுரைகள் 5,11,17 திருமணம் அன் பின் கணவன் மனைவிக்கு இடையே தொலைந்து போகும் காதலை அனுசரணையை ஆராய்கிறார். அடுத்து ஆண்களை விமர்சிக்கும் அவர் பார்வையைலிருந்து விலகி அல்லது பாவம் விடுங்கப்பா என்ற ரீதியில் முடிவாக ”பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான் என்ற கட்டுரையில் “பெண்களின் அக உணர்வில் ஒரு நாளும் ஆண் அவளுக்குப் போட்டியே அல்ல.இன்னொரு பெண்தான்”மன நல மருத்துவத் தோழி சொன்னதைப் பகிர்கிறார்.

மேலும் எதற்கெடுத்தாலும் பிரச்சனை, பிரச்சனை என்ற இருபாலருக்கும் ”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்”என்ற கட்டுரையில், 37 ஞாயிற்றுக் கிழமை செய்யாமல் தள்ளிப்போன கைப் பையையும் வீட்டு குளிர் சாதனப்பெட்டியையும் சுத்தம் செய்யும் வேலையைப் பற்றிய தனது மனப் போராட்டத்தையும் இப்படி நாம் மனதுக்குள் சேர்த்து வைத்து இருக்கும் தேவை இல்லாத விசயங்களைப் போக்க ஜப்பானிய .”ஷட் அப் அண்ட் மூவ் ஆன்” முறைப்படி ”மனசுக்குள் இருக்கும் கசடுகளை அப்படியே தள்ளி யாரிடமும் ஏன் நமக்குள்ளே கூட அதைப்பற்றிப் பேசாமல் புலம்பாமல் அடுத்த வேலை பார்க்கும் முயற்சிதான் இது” என்று ஒப்பிடுகிறார் !



என்னைப் பாதித்த இரண்டு கட்டுரைகள் 18,20 .

”அச்சம் தவிர்” என்ற கட்டுரையில் கண் பார்வைப் பறிக்கப்பட்ட யமுனா என்ற பெண்ணோடு ஏற்பட்ட நட்பையும் அவளைப் பார்த்து வியந்த தன்மைகளைப் பதிவு செய்யும் போது தன் வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் அந்தப் பெண்ணின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பாரதி பாஸ்கர் விவரிக்கும் போது கண்களில் நீ கசிகிறது ..

’அடுத்து அவர் தனது முன்னுரையில் ஓர் எழுத்தாளனின் எழுத்தனுபவம் எத்தனை மகத்தானது ’ என்று பேசும்போது உடல் நலமற்ற தன் அம்மாவை 2010 தீபாவளியன்றுப் பார்த்து விட்டு வந்து, அன்று இரவே எழுதி முடித்து அச்சுக்கு அனுப்பிய ”நேரில் நின்று … பேசும் தெய்வம் “ என்ற கட்டுரை எழுதிய இரண்டு நாளில் என் அம்மா உலக வாழ்க்கைப் பயணத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டார் என்று எழுதி விட்டு ”அன்றுதான் உணர்ந்தேன் அந்தக் கட்டுரை தன்னைத்தானே எழுதிக்கொண்டது என்று சொல்ல வேண்டும் என்கிறார் தனது மீளாத் துயரத்தைப் பதிவு செய்யும் கட்டுரை மிக உருக்கமானது .


முடிவுரை . 

நிறைய இடங்களில் பெண்களுக்காக மட்டும் பேசும் இந்நூல் ஆசிரியர் பாரதி பாஸ்கர் ஒவ்வொரு கட்டுரையையும் ஒரு கவித்துவத்துடன் பதிவிடுகிறார் .அவரின் ஆண்கள் பற்றிய கோபம் மேடைகளில் கொப்பளிப்பது போல இங்குச் சிதறிப் பரவினாலும் அவருக்குள் ஒரு பொதுப்பார்வை இருக்கிறது .பெண்ணாய் இருப்பதால் பெண் சமூகம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்ற எல்லைகளைத் தாண்டியிருக்கிறார்.அதுதான் சமூக அக்கறை கொண்டவர்களின் உண்மையான முகம்..

புதன், 16 மார்ச், 2016

அன்னை தெரேசா புனிதர் ஆனார் !


கடைசிவரைக் குழந்தையுள்ளத்தோடு வாழ்ந்த அன்னை தெரேசா

              இன்று என்  முகநூலில் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997) படத்தைத் தாங்க பெருமைப்படுகிறது . 

               அன்னை தெரசாவுக்குப் புனிதர் பட்டம் வழங்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். செப்., 4ம் தேதி , அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை அறிந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது . அவர் ஆத்மா உலகை விட்டு பிரிந்து 19 ஆண்டுகாலம் ஆகியும் இன்றும் அன்பு என்ற சொல்லுக்கு அன்னை தெரேசாதான் என்று மனிதர்கள் மனத்தில் மரித்துப் போகாத உதாரணமாக அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ! அவர் இந்தப் பட்டத்தைப் பெறும் தகுதிக்கான ஆய்விலா இவ்வளவு காலம் இருந்தார் ? 

 கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தில்,அற்புதங்களை நிகழ்த்தியவர்களுக்குத்தான் புனிதர் பட்டம் தரப்படுகிறது .இது பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்படுகிறது. “புனிதர்” என்ற வார்த்தையின் பொருள் விளக்கம் காண மூலமொழிச் சொற்கள் மூலம் சொல் விளக்கம் காண முயல்வதே சிறந்தது. புனிதம் அல்லது புனிதர் என்பதை எபிரேய மொழியில் “குவதோஸ்” என்றும் கிரேக்க மொழியில் “ஆகியோன்” என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு “பிரித்தெடுக்கப்பட்ட” அல்லது “வேறுபடுத்தப்பட்ட” என்று வார்த்தையளவில் பொருள்கொள்ள முடியும் இதுவரை, 3,000க்கும் மேற்பட்டவர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது. 


         தனது வாழ்கையே அன்பின் வரலாறாக வாழ்ந்த அந்தத் தூய ஆத்மாவுக்கு இந்தப்பட்டம் ஏன் இவ்வளவு காலம் கடந்து வந்து இருக்கிறது என்பது கேட்க நமக்கு உரிமை இல்லை அதைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவச் சபைதான் முடிவு செய்யும் அது.  

           உலகம் முழுவதும் மொத்தம் 123 நாடுகளில் நான்காயிரம் தன்னார்வு தொண்டர்களோடு கூடிய 600 சேவை மையங்கள் உருவாக்கப்பட்டு அவர் பெயரில் செயல்படும் போது இன்னும் என்ன தகுதியை எதிர்பார்கிறார்கள் ? இந்தப் பட்டத்தைப் பெற அன்னை தெரேசாவுக்கு என்ன தகுதி தேவைப்பட்டது ?

              அதற்கு நாம் புனிதர் தேர்வு எப்படி நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒருவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின், அவருக்குப் புனிதர் பட்டத்துக்குத் தேர்வு செய்வதற்கான வேலைகள் துவங்குகிறது. 

1. கத்தோலிக்கத் திருச்சபையால் புனிதர் பட்டம் அளிக்கப்படுவதற்கான நான்கு நிலைகளில், முதல் நிலை, 'இறை ஊழியர்' என அழைக்கப்படுவதைக் குறிக்கும். குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களால் புனிதர் என நம்பப்படுவோரை, திருச்சபையால் ஏற்றுக் கொள்வதற்காக அளிக்கப்படும் முதல் பட்டமாக இது கருதப்படுகிறது. 

2. பிஷப்பால் நியமிக்கப்பட்ட குழு, இறந்த நபரின் வாழ்க்கையை ஆய்வு செய்து, அவர் நற்பண்புகளை உடையவர் எனப் பரிந்துரை செய்ய வேண்டும். இதன்பின், அவருக்கு, 'வணக்கத்திற்குரியவர்' என்ற பட்டம் வழங்கப்படும். 

3. கிறிஸ்தவ நம்பிக்கையைப் பின்பற்றி, சிறப்பான முறையில் வாழ்ந்து மறைந்த ஒருவர், வானுலகில் இருக்கிறார் என்றும், மற்றவர்களின் நலனுக்காகக் கடவுளிடம் பரிந்து பேசும் சக்தி பெற்றவராக உள்ளார் என்பதை உறுதி செய்து, அதற்காக, அருளாளர் (முக்திப் பேறு) பட்டம் வழங்கப்படும். 

4. இந்த மூன்று நிலைகளும் முடிந்து, நான்காவது நிலையை எட்டிய பின், 'புனிதர்' பட்டம் வழங்கப்படும். இறந்த ஒரு மனிதர், அங்கீகரிக்கப்பட்ட புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை இது குறிக்கும். 


புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் ஒருவர் இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. அற்புதம் இந்த உலகின் எந்த ஒரு இடத்தில் வேண்டுமானாலும் நிகழ்ந்து இருக்கலாம் .ஆனால் அந்த நாட்டின் திருச்சபை அதை அங்கீகரித்துச் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, நடந்த இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, அந்தச் செய்தி அனுப்பப்பட்டு இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். 

அப்படி நடந்த முதல் சம்பவம் கடந்த 1998ல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த, பழங்குடிப் பெண் மோனிகாவை இறந்த பிறகும் அவரை நினைத்துப் பிரார்தனை செய்து பலன் பெறுவதை அல்லது குணமடைவதை அற்புதம் (Miracle) என்கிறது கத்தோலிக்கத் திருச்சபை. குணமடையச் செய்து அற்புதம் நிகழ்த்தினார். 

இரண்டாவதாக , 2008ல், 35 வயது பிரேசிலைச் சேர்ந்த மூளை மூளையில் உருவாகிய கட்டியால் கோமா நிலைக்குப் போன ஒரு நபருக்காக அவரது மனைவி தெரேசாவைப் பிரார்தனை செதுகொண்டதன் மூலம் அந்தக் கட்டு கரைந்து குணமடைந்து விட்ட, இரண்டாவது அற்புதத்தை நிகழ்த்தியதாகவும் கூறி, அவருக்குப் புனிதர் பட்டம் வழங்க, இப்போது போ பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்து உள்ளார். 

இதுவரை அன்னைத் தெரேசாவுக்குப் பெற்ற விருதுகள் . 


1962 – பத்ம ஸ்ரீ விருது 
1971 – 23வது போப் ஜான் அமைதி விருது 
1971 – குட் சமரிட்டன் விருது 
1971 – கென்னடி விருது 
1972 – சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது 
1973 – டெம் பிள்டன் விருது 
1977 – இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1979 – அமைதிக்கான நோபல் பரிசு 
1982 – பெல்ஜியம் நாட்டுப் பல்கலைக்கழகம் வழங்கிய டாக்டர் பட்டம் 
1985 – சுதந்திரத்துக்கான பிரிசிடென்ஷியல் விருது 
1996 – அமெரிக்காவின் கெளரவப் பிரஜை .

           ஆரம்ப காலங்களில் ஒரு முறை அன்னை தெரேசா அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, தெரு தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள், ஒரு கடைக்கு முன் சென்று நின்று யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தார். அந்தக் கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெரேசாவை கோபமாக பார்த்து விட்டு ‘”தெரேசா நீட்டிய கையில் எச்சிலைத் துப்பினார்”. அப்போது சற்றும் மனம் தளராமல் “மிக்க நன்றி!!! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்” அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிப்புத்தன்மை உடைய பெண்ணை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன்” என்று கூறி விட்டு நொடிப் பொழுதில் கல்லாப்பெட்டியில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரேசா நீட்டிய இரு கைகளிலும் வைத்து விட்டார். 



                அன்னை தெரேசாவுக்கு அவர் வாழ்ந்த மதம் தரும் உயரிய அங்கீகாரம் அது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அன்பையும் கருணையையும் வாழும்போதே இறைவனனின் வரமாகப் பெற்று வாழ்ந்தவர் அன்னை தெரேசா . மனித குலம் அவரை மறக்கும் போது இந்த உலகின் கடைசி மனிதன் இறந்து விட்டான் என்பதை காலம் தன் பதிவேட்டில் குறித்துக்கொள்ளும். 



செவ்வாய், 8 மார்ச், 2016

காலம்தான் (முதற்) கடவுள் !



போன வாரம் எனது பையன் பயிழும் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது .

”தயவு செய்து பள்ளிக்கூட வாசல் முன் வாகனங்களை நிறுத்தி, குழந்தைகளை இறக்கிவிடுவதன் மூலம் மற்றவர்களுக்கு இடையூறு தராதீர்கள் ” 



                              நம் வீட்டில் நேர நிர்வாகம் சரியாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நம் வீட்டின் குழந்தைகளைப் பள்ளிக்கு கிளப்பி விடும் கடைசி அரை மணி நேர உச்ச பட்சக் கூத்துக்களைப் பார்த்தாலே போதும் .பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அப்பா சட்டை மாட்டி விட்டுக்கொண்டே இருக்கும் போது அம்மா உணவு ஊட்டுவதுவும் (அப்படிச் சொல்லக்கூடாது திணிப்பதுவும்) நடந்து கொண்டே இருக்கும்போது ஒருபக்கம் மாட்ட வேண்டிய ’டை ,பல்ட்டை ‘ தேடுவதுவும் ஒரு பக்கம் ’சூ ,சாக்ஸ்’ ஒரு ஆள் மாட்ட இன்னொரு பக்கம் சூ காலில் மாட்ட மறுக்கும் போதுதான் நேற்று போட்ட சூ ரோப்பே தளர்த்தவில்லை  அப்படியே இருக்கும் என்பதை அப்போதுதான் கவனிப்போம் எல்லாம் மாட்டிக்  கொண்டு பள்ளி பேருந்துக்கோ,ஆட்டோவுக்கோ அள்ளிப்போட்டு அனுப்பிவிட்டு, வீட்டுக்குள் அப்பாடா என்று நுழைந்தால் மேஜைமேல் போன வாரம் வாங்கிய புது ”லன்ஞ் பாக்ஸ்” கொடுத்து விட மறந்து போனது டிவிக்கு பக்கத்தில் மேசை மேல் நின்றுகொண்டு நம்மைப் பார்த்துச் அது கூடச் சிரிக்கும்.இதை விடச் சில சமயம் இரவு வரும் ஏழாம் உயிர் தொடரைக் கூடப் பார்க்காமல் தியாகம் செய்துவிட்டு செய்துகொடுத்த ’ப்ராஜெக்ட்’அந்தக் குழந்தையின் படிக்கும் மேஜை மேல் ஸ்கூல் பேக்கிற்குள் வைக்க மறந்து தேமே என்று கிடக்கும்  .என வீட்டில் போன வாரம், வியாழக் கிழமை மட்டும் அணிய வேண்டிய பள்ளிச்சீருடை அணிந்து கொள்ள மறந்து பள்ளிக்கூட வாசல் வரை போய் திரும்பி வந்து மாற்றிக்கொண்டு போனோம்.(நல்ல வேளை எங்கள் அனுபவத்தில் பட்ட பாடத்தில் பள்ளிக்கு அடுத்தத் தெருவுக்குக் குடியேறியே விட்டோம் .அதனால் நேரமும் தூரமும் வாய்ப்பு இருந்தது என்பது வேறு விசயம்) இப்படித் தினமும் அல்லோல் படும் பெற்றோர்கள் தங்கள் அவசரங்களைப் பள்ளி வாசலில் கூடப் ’பளிச்செனெக்’ காட்டியதன் விளைவுதான் அந்தக் குறுஞ்செய்திப் பாடம் பெற்றோர்களுக்கு நடத்தப்படுகிறது .



                                      ஒரு பக்கம் அன்றைய போக்குவரத்து ஆட்டத்திற்கு ஆடி முடித்து, பள்ளிக்கூட வாசலில் கொண்டு வந்து விட்ட தாய்மார்களில் பலபேர் இரவு உடையில் இருப்பார்கள் அவசரத்தில் காலில் செருப்பு கூட இருக்காது . தந்தைமார்கள் இதை விட உச்சம். வீட்டில் கூடப் அணிந்து கொள்ள லாய்க்கில்லாத பெர்முடாஸ் அல்லது ட்ரவுசரோடு பந்தாவாக வந்து கடுப்பேத்துவார்கள்.சரி இது கூடப் பராவாயில்லை அதே கோலத்தில் அங்கு வந்து இருக்கும் இன்னொரு அவசர கோலத்தாரிடம் , என்ன விஜயகாந்த் ஒத்துக்கொண்டாராமே ? என்று அவர் வீட்டுப் பத்திரிக்கை அரசியல் விவாதத்தைத் தொடங்க பல்லுகூட விளக்காத அந்த பிரகஸ்பதி பதிலுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில என்ன போட்டு இருக்கானான்னா...? என்று தனது பாழாய்ப்போன நினைவுகளைப் பின்னோக்கி பிறாண்ட ஆரம்பித்து, அபத்தமான அரசியல் பேசி வெறுப்பேற்றுவார்கள் .இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டு இருப்பது இவர்களை விடத் தாமதமாகக் கொத்தாகக் தன் குழந்தையை அள்ளிக்கொண்டு அவசர அவசரமாக , பாதி ராத்திரியில் ஓடிப்போன பேயைப்போலப் பறந்து வரும் இன்னொரு அவசரப் பெற்றோருக்கு வழி விடாமல் சாலைகளை மறித்துக்கொண்டும் பள்ளிக்கூட வாசல்களுக்குக் குறுக்கே நின்றுகொண்டுதான் பேசிக்கொண்டு இருப்பார்கள் !


              ஒரே சமயம் இரண்டு பிள்ளைகளை வெவ்வேறு பள்ளிகளில் விட்டுச்செல்லும் அப்பாமார்கள் இன்னும் பாவம். ஒரு நண்பர் இப்படித்தான் அவசரத்தில் டூவிலரில் முன் பக்கம் உட்ர்கார்ந்து இருக்கும் பிள்ளையை பள்ளி மாற்றி இறக்கிவிட அது அழுதுகொண்டே, அப்பா நான் இந்த ஸ்கூல் இல்லப்பா என்று பரிதாபமாகச் சொல்ல எப்படியோ இறக்கி விட்ட்துகூட டென்சனில்லை அவருக்கு , .இதை அப்படியே மனதில் வைத்துக்கொண்ட அந்த வீட்டின் இரண்டாவதாகப்  பெண் குழந்தை அவர்கள் வீட்டு விசேசத்தில், எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் எங்கப்பா என்னை வேற ஸ்கூல்ல இறக்கி விடப்பார்த்தார் என்று சத்தமாகச் சொல்லி போட்டு உடைக்கும் பாருங்க,அப்போதுதான் நமக்கு  அரசின் வீட்டுக்கு ஒரு குழந்தை போதும் என்ற சுவர் விளம்பரத்தின் ’முக்கோணக் கட்டத்தின்’  அர்த்தம் முழுமையாகப் புரியும் 
ஒருபக்கம் நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று தினமும் இப்படி நம்ம வீட்ல நடக்குதே இதைக் குறைச்சுக்கிறதுக்கு வழியே இல்லையான்னு மெல்ல ஒவ்வொரு வீட்டுகுள்ளேயும் எட்டிப்பார்த்துக் காரணம் ஆராயப் போனால் அதிகப் பட்ச வீடுகள் சொல்லும் ஒரே காரணம் சீக்கிரம் குழந்தைகள் தூங்க மாட்டேன்கிறார்கள் தூங்கினாத்தானே காலையில சீக்கிரம் கிளம்ப முடியும் என்கிறார்கள். சரி உங்க வீட்டில் எல்லாரும் தூங்கும் நேரம் எது ?  என்றால் இரவு பத்துக்கு மேல் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள் சொல்கிறார்.அப்பா எதாவது விவாதமோ செய்தியோ பார்க்கவும் அம்மா நாடக தொடர் பார்க்கவும் , பாட்டிமாரோ தாத்தாமாரோ (ஒருவேளை வீட்டில் இன்னும் வைத்து இருந்தால் ? ) ’சங்கரா’ டிவி நிகழ்சி என் ஆக மொத்தத்தில் பார்த்து முடியப் பத்தரைக்கு மேல் ஆகிவிடுவதுவும் ஒரு காரணம் ! மனிதன் தனது பொழுதுபோக்கிற்காகக் கண்டுபிடித்த சில சாதனங்கள் அவன் வாழ்வின் கோலத்தை மெல்ல மாற்றிக்கொண்டே வருகிறது . 


                         மனிதனுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய கொடை மெலடோன் (melatonin) என்ற திரவம் .இயற்கை, தூக்கத்தின் மூலம் மூளைக்கும், உடலுக்கும் ஓய்வு எனும் மருந்துதான் அது .அதிக நேரம் தொலைக்காட்சிப் பார்ப்பதால், ஐபேடு,மொபைல் போன்ற கருவிகள் பயன்படுத்துவதால் மெலடோனின் சுரப்புக் கொஞ்சம் கொஞ்சமாகத் தடுக்கப்படுகிறது ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளியாகும் ஒளியானது போட்டான்கள் ஸ்ட்ரீம்களை (stream of photons) உருவாக்குகின்றன,அந்தப் போட்டான்கள் ஸ்ட்ரீம்கள், மனித மூளைக்குள் நடக்கும் மெலடோனின் (melatonin) சுரப்பை தடுக்கும். தடுக்கப்பட்டால் அது நமது உடலை பகல் முழுதும் சோர்வு நிலையில் வைத்திருக்கும். அதேபோன்று தொடர்ந்து நீடிக்கும் போது மனிதர்களின் உறக்க-விழிப்புச் சுழற்சி (sleep wake cycle) மொத்தமாகப் பெரியவர்களான நமக்கும், வளரும் பிள்ளைகளுக்கும் பதிப்புக்குக் காரணமாகிறது.விஞ்ஞானக் கருவிகள் மருந்து போல .தேவைக்குத் தகுந்த இடத்தில் அதைப் பயன்படுத்துவது எப்போதும் நல்லது தரும் அதைத் தவறாகப் பயன்படுத்தும்போதும் எதிர்விளைவுகளை இரட்டிப்பாகத்தரும் என்பதை மறக்கக் கூடாது. 

காலை அசதியாக எழுந்திருக்கும் அம்மாவால் எப்படி கவனமாக உணவு தயாரிக்க முடியும் நேற்று வாங்க மறந்த ஒரு பொருளால் அன்றைய காலை உணவு மாறிப்போகும் .அந்த அவசர உணவு பிள்ளைக்கு படிக்காது போகலாம் அதுக்கும் குடும்பத்தில் சண்டை தொடங்கும் நாங்களெல்லாம் அஞ்சும் பத்தும் பெத்தோம் இப்படியா வளர்த்தோம் ? என்று வீட்டு பெரியவர்கள் சுய தம்பட்டம் அடித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவார்கள் ! 



                          இந்தத் தூக்கமின்மைக் காலையில் விரைவாகப் படுக்கையை விட்டு எழ விடுவதுவும் இல்லை அப்படியே எந்திரிதால் சோர்வுக் கட்டி இழுக்க எந்தக் காரியமும் விளங்குவதுமில்லை . அதனால் உடற்பயிற்சிச் செய்வதில்லை இதில் சில பேர் இன்னும் கொஞ்சம் வில்லங்கம் பேசுவார்கள் .எங்க தாத்தால்லாம் தொன்னூறு வயசு வரைக்கும் எந்தப் பிரச்சனையும்மில்லை ஒரு உடற்பயிற்சியும் செய்ததும் இல்லை.மனுசன் கல்லு மாதிரி இருந்தார் என்பார்கள் .அதிலும் அவருக்குத் ( ஊருக்கு தெரிந்து ) இரண்டு மனைவிமார்கள் என்று கண்சிமிட்டிப் பெருமைப்படுவார்காள் .அந்தத் தாத்தா சித்ரகுப்தன் லெட்ஜரிலிருந்து கணக்கு முடித்து  நீக்கப்பட்டும் ஆத்ம சாந்தி அடையாமல் தெருவோர முருங்கை மரத்தில் இன்னும் தொங்கிக்கொண்டு அடுத்தவர்களை  பயமுறுத்திக்கொண்டு இருப்பது இது போலச் சிலரால்தான் என்பது உங்களுக்கு ஏன் ? என்று இப்போது புரியும் .

                                தாத்தா காலத்தில் அன்றாட உழைப்பின் மூலம் உடம்பின் எல்லாப் பாகமும் வேலை செய்ய வைத்தார்.அவர் உணவு இயற்கைச் சார்ந்ததாக அவர் வாழும் சூழலில் எந்த நேரத்தில் எந்த உணவுக் கிடைத்ததோ அதை உண்டார். அவருக்கு உணவே மருதாக இருந்தது .இயற்கைச் சார்ந்த வாழ்வியல் அவர்களுக்கு ஒரு சொத்தாகவே இருந்தது . அவரும் நாமும் ஒன்றாக முடியுமா? என் தாத்த வைத்து இருந்த உழவு மாடெல்லாம் அவரை விடவும் உயரமானது.கழப்பை என்னால் பத்து வயதிலும் நகட்டக்கூட முடியாது .எனவே நாம் நம் தாத்தாக்களைப் பற்றிப் பேசுவதும் அவருக்கு (தெரிந்து) வாக்கப்பட்ட இரண்டு பாட்டிமார்களைப் பற்றியும் பெருமூச்சுவிடுவது நமக்குச் சுட்டுப்போட்டலும் இப்போது ஒத்து வராது. 

          மனவேகம்தான் நம் அனைவரையும் மெல்லக்கொள்ளும் வியாதியாக மற்றிக்கொண்டே வருகிறது .மனதில் எதையாவது போடு நிரப்பிக்கொண்டே இருக்கிறோம் .வெவ்வேறு எண்ணங்கள் தொடர்பில்லாமல் கிளம்பி நம்மை அலைக்கழித்துகொண்டு இருக்கிறது.வீட்டுக்குள் நுழைந்தால் டிவி.வெளியில் வந்தால் செல்போன்,கம்யூட்டர் ,பத்திரிக்கை ,வெவ்வேறு நூதன மன அழுத்ததை விதைத்துக்கொண்டே இருக்கிறது.உணவில் அவசரம்,உறவில் அவசரம்,எல்லாமே எல்லா வருமானம் உள்ளோர்களிடமும் பரவி நிற்கிறது நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் நேரம் இல்லை என்று அபத்தமாக பேசி ஒரு கலாச்சாரம் உருவாக்க முயற்சிக்கிறோம்.இப்படி அழுத்தப்பட்ட மனநிலையில் எது நல்லது எது கெட்டது என்ற பிரித்துப்பார்க்கும் ஆறாவது அறிவு குன்றிப்போய் ”ப்ராய்லர்” கோளிகளாய் நாமும் நம் பிள்ளைகளும் வளர்ந்து வருகிறோம்!   



ஒருவரின் பிறந்த நேரம் முதல் இறந்த நேரம் வரை எல்லா இடத்திலும் காலம் முக்கியத்துவம் பெறும்போது அந்தக் காலத்தை எப்படிப் பயன்படுத்துவதும் நம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் செய்த புண்ணியம் அல்லது நம் பாவம் கூடவருகிறதோ இல்லையோ அல்லது வேறு எதுவும் நம் கூட வருகிறதோ இல்லையோ நம் நேரம் சாகும் வரை கூடவே வருகிறது .இதை எப்படி நாம் பயன்படுத்தினோம் என்பது வேறு விசயம் இனி வரும் தலைமுறைகளாவது அதை நல்ல முறையில் பயன்படுத்த பழக்கப்படுத்துவோம் .நாம் பள்ளிக்குக் கிளம்புகிறோம் என்ற பெயரில் தினமும் வீடுகளில் நடத்தும் மகாபாரத யுத்தங்களைத் தவிர்த்து நாம் காலத்திற்கு ஏற்ப அவர்களைத் திட்டமிட்டுப் பள்ளிக்குத் தயார் செய்வதுவும் அதை அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு செய்யவைப்பதுவும் இன்னும் நல்லது. பள்ளிக்கு ரிலாக்ஸாகப் போகும் பிள்ளைதான் பாடத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடியும் .எதிலும் ஈடுபாடுகாட்ட முடியும் . முக்கியமாக விளையாட்டில் உற்சாகமாகக் கலந்துகொள்ள முடியும் .இது அய்யாதுரைக் குழந்தை முதல்  ஐன்ஸ்டீன் குழந்தை வரை அனைவருக்கும் பொருந்தும்.அதனால் அன்பு,ஒழுக்கம் இதற்கு அடுத்துக் காலத்தைப் பயன்படுத்துவதை நாம் குழந்தைகளுக்குக் கடவுளாகச் சொல்லி வளர்த்தால் கல்வி எனும் சரஸ்வதியோ, லட்சுமியோ நம் வீட்டுக்கதவை தானே தேடி வந்து தட்டுவாள்...