வியாழன், 2 ஜூலை, 2015

பாண்டிச்சேரியின் கலாட்டா கச்சேரி


ஒவ்வொருவருக்கு வாழும் ஊர்த் தவிர வேறு ஒரு ஊர் மேல் கண் இருக்கும் அதில் எனக்குப் புதுவையும் ஒன்று .வெகு நாளாய் இங்கு வாழ வேண்டும் என்ற ஆசையும் கனவும் துரத்தியது .ஒருவேளை திண்டுக்கல் போன்ற தண்ணிப் பஞ்சம் நிலவும் ஊரிலிருந்து வந்ததால் கண்ணுக்கு எட்டும் தூரம் அங்குக் கடல் பார்த்த மயக்கமா ? தெரியவில்லை .

                  வெகு நாளாய் எனக்கு இந்த விசயத்தில் ஒரு சந்தேகம் கூடப் பிறந்தது போல எனக்கு வந்து , வந்து போகிறது.அது நாம் ஒவ்வொருவரும் எந்த ஊரில் வாழ வேண்டும் என்பதை அந்த ஊர் முடிவுச் செய்கிறதா? இல்லை நம் எண்ணம் முடிவு செய்கிறதா? இதெல்லாத்தையும் தாண்டி விதி என்று பிறப்பதற்கு முன் மண்டைக்குள் எழுதிய புரியாத சமாச்சாரம்தான் காரணமா ? தெரியவில்லை .அடுத்த ஜென்மத்தில் திபெத்தின் - டியூஸ்டே லாப்சாங் ராம்பாவைப் ( Tuesday Lobsang Rampa) பார்த்தால் விசாரிக்க வேண்டும் ..

                   இதாவது பரவாயில்லை எங்குப் போனாலும் இந்தப் பழகின பசங்கத் தொல்லை இருக்கே அது மட்டும் - விடாதுக் கருப்பு மாதிரித் தொடாமல் விட மாட்டேன்கிறது . என் நண்பரின் உடல் நலம் கருதிப் புதுவையில் சில ஆண்டுகள் தங்க வேண்டிய ( தியாக ) சூழ்நிலையால் அங்குள்ள பிவிசிப் பைப் தயாரிக்கும் கம்பெனிக்கு வேலை ஏற்பாடு செய்து இருந்தேன் .இந்த வேலையை அங்கு ஏற்கனவே தங்கிப் பணிபுரியும் ஒருவர் நண்பர் முயற்சி மூலம் நடந்து இருந்தது .ஆனால் அங்குப் போன பின் சொந்தமாய்த் தொழில் செய்யும் ஆர்வம் வந்து , அங்கு வாழ்ந்த இரண்டாண்டுக்குப் பின் ஒரு சூழலில் சிக்கி ,சின்னாபின்னப்பட்டு ஒருமாதம் முழுதும் ஒரு வேளை சாப்பாட்டுடன் அங்கேயே இருக்கணும் என்ற கொள்கையே பிரதானமாய் இருந்து ,சிறு பிள்ளைகள் செய்யும் வெள்ளாமை வீடு வந்து சேராதக் கதைப் போல நடந்ததை வேறு பதிவில் பேசவேண்டும் .

அதனால் நம்மப் பசங்க ( ஃப்ரண்சோட ஃப்ரண்ட்ஸ்தான் பசங்க ! ) ஒரு புது வருசம் கொண்டாட ஆசைப்பட்டுப் புதுச்சேரி வந்து அடித்த கூத்தை ! மட்டும் இங்கே சொல்லப் போகிறேன் .


புதுவருடத்திற்கு முதல் நாள் இரண்டு ஃபிரண்ட்ஸ் வருவதாகப் பேச்சு .நாங்கள் தங்கி இருக்க அங்கு ஒரு வீடு பிடித்து இருந்தோம் .வருபவர்களை அங்குத் தங்கவைத்து மற்ற கொண்டாட்டத்தைத் தொடங்கி மெல்ல வெளியில் போய்க் கொள்வோம் என யோசித்து வைத்து இருந்தோம் எங்கள் வீட்டு ஓனர் அங்குள்ள AFT - Anglo French Textiles மில்லில் ஒரு கட்சிச் சார்பு யூனியன் லீடர் .பேச்சுலர் என்றால் அங்கு வீடு தரத் தயங்குவார்கள்.நண்பரின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்து ( ஏமாந்துதான் ) அந்த வீட்டை வாடகைக்குத் தந்து இருக்கிறார்.

பஸ் ஸ்டாண்ட் போய் வரவேற்கப் போன போதுதான் தெரிந்தது அந்த வரவேண்டிய ரெண்டுப் பேரோட பக்கிப் பசங்க, ஆறு பேர் மொத்தமாய் வந்து இறங்குகிறார்கள் . இவர்களை எங்கள் வீடு தாங்காது . பக்கத்தில் உள்ள லாட்ஜில் (புதுவருடப் புக்கிங்கால்) மிகச் சிரமப்பட்டுச் சிபாரிசையெல்லாம் பயன் படுத்தி ஒரு டபுள் ரூம் புக் பண்ணி ’வாங்க வேண்டியதெல்லாம்’ வர வைத்துக் கொண்டாட்டதைத் துவங்கினால், பசங்கத் திண்டுக்கல் KKM நன்னாரிச் சர்பத் மாதிரி நினைச்சுகிட்டு அப்போது புதுவையில் புதுசாத் தயாராகி வெளியான கோக் மிக்ஸ்டு, ”கரிபா ரம்மை” கொட்டிச் சாய்த்து அளவில்லாமல் ஊற்றி வயிற்றை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள் .எனக்கு அப்போதுதான் ஒரு விசயம் புத்திக்கு உறைத்தது. அட நம்ம ஊர் ஹாட் ட்ரிங்ஸ் விசயம் வேறு அங்குச் சப்ளை இல்லாத இந்த மாதிரி ட்டிரிங்ஸ் ஆல்கஹால் அளவு வேறு .அளவா எடுத்துக்கலைன்னா ஒன்னு வாந்தி எடுத்து ஹேங் ஓவர் .இல்லைன்னா நிதானமில்லாம ஆளைக் கவிழ்த்து விடுமே ? அப்புறம் புது வருசம் கொண்டாடிய மாதிரிதான் .அதிலிருந்து காப்பாற்ற எல்லோருக்கும் அதே கரிபா ரம் கலரில் இருக்கும் கோக்கை அதே பாட்டிலில் ஊற்றிக் கொடுத்துச் சமாளித்தோம் .அப்படியும் சிலபேர் இரவு பதினோறு மணிக்குப் பீச்சுக்குச் சென்ற போது ’உவ்வே’ எடுக்கத்தான் செய்தார்கள் .

ஒருவழியாய்ச் சமாளித்து ரூமில் படுக்க வைத்து விட்டு .அதிகாலை மூன்று மணிக்கு எங்கள் ரூம் செல்லப் போன போதுதான் ஞாபகம் வந்தது மெயின் கேட் சாவி எடுத்து வரவில்லை.ஏறிக் குதிக்கக் கவுரவத்தடை மட்டுமல்ல அங்குள்ள பல வீடுகளில் புதுவருடத்தை வரவேற்கும் கலர்க் கோளங்கள் ஜோராகப் போடப்பட்டுக் கொண்டு இருந்ததும் இன்னொரு காரணம். .வேறு வழியில்லை . காலிங் பெல்லை அழுத்த (நல்ல வேளை ) தூக்க அசதியில் வெளியே வந்தது வீட்டு ஓனர் அம்மா !

                               அந்த அம்மாவிடம் ,என்னம்மா நீங்க கோளம் போடலையான்னுக் கேள்வியில் சமாளிக்க  முயற்சி செய்து தோற்றுப் போனேன் ,பதில் சொல்லாமல் அந்த அம்மாள் முறைத்துப் பார்ததைப் பார்த்தால் வீட்டை இப்போதே காலிப் பண்ணச் சொல்லும் சாத்தியம் அதிகம் இருப்பது போலப் பட்டதால் , உள்ளே போன உடனே கதவைச் சாத்தி ,லைட்டை நிறுத்தி விட்டேன். 

   காலை மூன்று இடம் அவர்களை அழைத்துப் போகத் திட்டமிட்டோம் .ஒன்று ஆரோவில் .இரண்டாவது நோணாங் குப்பம் - போட் ஹவுஸ் ,இறுதியாக அரவிந் ஆசிரமம். இதற்கு உதவியாக அங்கு எங்களைக் குடும்பத்தில் ஒருவர் போலப் பார்த்துக் கொள்ளும் நண்பரை எங்களுடன் துணைக்கு அழைத்துக் கொண்டோம் . காரணம் போட் ஹவுசில் ” கயாக்ஸ்”( Kayaks) ரகப் போட் வாடகைக்கு எடுக்க அவர் உதவி மிக அவசியமாக இருக்கும். அந்தப் போட் ஓட்டுவதை விட வாடகைக்கு எடுப்பது அவ்வளவு சிரமம்.

அப்போதுதான் வந்து இருந்த ஃப்ரண்டோட ஃப்ரண்ட் ( பசங்களில் ஒருத்தன் ) அந்த நட்புக் கட்டுச் சோற்றுக்குள் இரண்டு பெரிச்சாலியைக் கட்டிக் கொண்டு வந்த விசயம் புரிந்தது .என் நண்பரை மட்டும் அழைத்துக் அவன் மெல்ல ரகசியம் பேசினான். என்ன விசயம் என்று நண்பரிடம் கேட்டேன் அப்புறம் சொல்கிறேன் என்றார் .

கயாக்ஸ் ரகப் போட்டுக்கு எப்போதும் லைஃப் ஜாக்கெட் அவசியம் கொடுப்பார்கள். கடலோடு நேரடியாகத் தொடர்புடைய அந்தப் போட் ஹவுசில் சில சொல்லப் படாத அபாயங்கள் இருப்பதால் நீரில் குதித்து நீந்த அனுமதியில்லை இதெல்லாம் சொல்லிவிட்டுப் போட் கொடுத்து விட்டு ஓட்டத் தெரியுமா என்பதையும் கவனித்தார்கள் .அதனால் அதில் தேர்ச்சிப் பெற்ற புதுவை நண்பரைக் கிளப்பச் சொல்லி விட்டு நாங்கள் பெடல் போட் எடுத்துக்கொண்டு பின் தொடர்ந்தோம் .வந்த பக்கி ஒன்று நீச்சல் தெரியும் என்ற தெனாவெட்டில் நீரில் குதிக்க , எப்படியோ கரையிலிருந்து கவனித்த போட் ஹவுஸ் நிர்வாகம் மோட்டார்ப் போட்டில் வந்து எச்சரிக்கைச் செய்து, மேலேற செய்ததோடு இனியும் மீறினால், படகு உடனே கரைக்குத் திருப்பப் படும் என்று ஸ்மக்ளிங் கேங்கைச் சொல்வது போலக் கடுமையாக எச்சரித்தார்கள்.புதுவை நண்பர் என்னை முறைத்துப் பார்த்தார் .நான் வழக்கம் போல எந்தச் சர்க்கசுக்குச் சம்பந்தமில்லாத கோமாளி மாதிரி ஒரு சிரிப்புச் சிரித்துச் சமாளித்தேன்.வேறு என்ன செய்யக் குரங்குக்கு வாழ்க்கைப் பட்ட பிறகு பேன் பார்க்கத் தலையைக் கொடுக்க முடியாது என்றாச் சொல்ல முடியும் ?


ஒரு வழியாய் மதியம் மூன்று மணிக்குத் தண்ணீரில் இருந்த கண்டத்திலிருந்து தப்பித்து, மீண்டு , புதுவை லாட்ஜ் ரூம் வந்தோம் . அடுத்த ப்ளான் பற்றி நண்பரும் புது நண்பரும் கிசுகிசுத்து விட்டு என்னை வா என்று அழைத்துக் கொண்டு புதுவை நண்பர் வெளியே வந்தார் .எங்கப் போறோம் என்றேன் .உங்க பசங்க இங்க நடக்கிற காபரே டான்ஸ் பார்க்கணுமாம் புக் பண்ணி விட்டு வருவோம் வா என்றார்ச் சிரித்துக் கொண்டே .எனக்குப் பக்கென்றது .அது இங்கு நடப்பதை நானே வந்த இரண்டாவது வருடம்தான் கேள்வி பட்டேன் .ஆனால் இந்தப் பக்கிப் பண்ணாடைகள் முதல் தடவை வருவதற்கு முன்னாலேயே தெரிந்துத் திட்டமிட்டு வந்து இருக்குக.அடப்பாவிகளா !


மாலை ஐந்தரைக்கு மணிக்கு முதல் ஷோ.நான்குப் பக்கிகள் கிளம்ப எனக்கு ஏற்கனவே ஒரு பயம் இருந்ததால் அங்குப் போய் ஏதாவது கலாட்டா பண்ணி அடி வாங்கி விடக்கூடாது என்பதற்காகவும் , ’இந்த மாதிரி’ விசயத்திற்குக் கிளம்பும் போது கடைசி நேரத்தில் நானும் வருகிறேன் என்று சில தருமன் கூடத் துச்சாதனாவது நடைமுறை சகஜம் என்பதால் ஐந்து டிக்கெட் வாங்கச் சொன்னேன் .அது வாங்கும் போது புதுவை நண்பர் சந்தேகத்தோடு நீயுமாப் புரூட்டஸ் ? என்ற பார்வையில் பார்க்க , ( நான் பின்னாளில் பெரிய பதவிக்கு வரும் போது எதிர்கட்சிகள் இதைப் பெரிய பிரச்சனையாக எழுப்பலாம் என்ற காரணத்தால் ) அவசரமாக மறுப்பு அளித்தேன்.புதுவையின் இன்னொரு நண்பர் பல தடவை அங்குப் போனவர் .நாங்கள் இப்போது தங்கி இருக்கும் லாட்ஜ் மானேஜரும் கூட .அதனால் அவரைக் கூட அனுப்ப என்றேன் .அவர் லாட்ஜ் மேனேஜர் என்பதால் புதுவைப் போலிசும் மேற்படி ஷோ நடக்கும் ஹோட்டலில் நண்பர்களும் உண்டு என்ற என் சிபிஐ ரேஞ்சுக்குப் பாதுகாப்பு வளையத்தை விளக்கிச் சொன்னேன் நண்பரிடம் .மேலும் அவர்தான் இந்த ஆண்டு எனக்கு அங்கு இது நடப்பதாகச் இந்தத் தகவலை( மிகத் தாமதமாகச் ) சொன்னவர் .!


 ஒருவழியாய் அந்த இரண்டு மணி நேரக் காட்சிக்கு அனுப்பிவிட்டு நாங்கள் பீச் போனோம் .இந்தியாவிலேயே அனேகமாகக் காந்தியும் நேருவும் நேரெதிராகச் சிலை வடிவில் (இப்போதும் )நிற்கும் ஒரே இடம் புதுவையாகத்தான் இருக்கும் . அங்குச் சட்டச் சபைக்கும் உயர்நிலைக் காவல் அலுவலகதிற்கும் இடையில் உள்ள ஒரு ஃபிரென்ஞ் புண்ணியவான் 99 வருடம் ’பார்’ நடத்த மட்டுமே நடக்க எழுதி வைத்த ’குவாலித்தே’ (Qualithe ) கடைக்குப் போய் ஊரிலிருந்து வந்து இருப்பவர்கள் வசம் ஊருக்குக் ’மேற்படிகளை’ கொடுத்து விடத் திண்டுக்கல்லில் சில கிடைக்காத அயிட்டங்களை வாங்கிக் கொண்டு வரும் வழியில் , வந்து இருப்பவர்கள் திரும்பிச் செல்லப் புதுவைப் போக்கு வரத்துக் கழகத்தில் (நேரடியாகத் திண்டுக்கல் போய் இறங்க) முன் பதிவு செய்து விட்டு வந்தோம்.

            நாங்கள் போகும் முன்னரே அவர்கள் ஐவரும் லாட்ஜ் ரூமிற்கு இருந்தார்கள் .இந்த மாதிரித் தப்பு விசயங்களுக்கு முதலில் போய் வந்தவர்களை (ஒரு பொறாமையிலும்) உற்றுப் பார்ப்பது - போகாதவர்கள் வழக்கம் .அப்படி நான் பார்த்தப் போது பசங்க மத்தியில் ஒரு சுவாரசியம் இல்லை .ஏனென்று அவர்களுடன் கூடப்போன இன்னொரு புதுவை நண்பரைப் பார்த்தேன் .அவர் என் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டவர் போல ஒரு அபாயகரமான குறும்புப் புன்னைகையும், நமுட்டுச் சிரிப்புடன் விஷமமாகச் சிரித்தார் அது என்னவோ செய்தது எனக்குள்ளே .எதாவது அங்கும் ஏடாக் கூடாமா ?


அவரை வெளியில் அழைத்துக் கொண்டு வந்து என்னவென்று ஆவலாய் விசாரித்தேன் .முதலில் அடக்கி வைத்த சிரிப்பைக் கொட்டித் தீர்த்த அவர் மெல்லக் கேட்டார், உங்க ஊர்ல நீ மட்டும்தான் ஒரு மாதிரியா ? இல்லை எல்லாரும் இப்படித்தானா? 
நான் எதுவும் புரியவில்லை என்னைவிடச் சீனியர் அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பது போல (பாவனையாக) முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தேன் . 

அவரே தொடர்ந்தார். 
உள்ள ஷோ ஆரம்பித்த அரைமணியில உங்க பசங்க ரெண்டுப் பேர் வெளியிலப் போறேன்னு நிக்கறானுக .அப்படிப் போக அனுமதி இல்லைன்னுச் சொன்னதுக்கு அதுல ஒருத்த அழுதுட்டான் .எனக்கு ஒன்னும் புரியிலச் சரின்னு அங்க நம்ம மிசே (Monsieur) க்கிட்டச் சொல்லி வெளியிலக் கூட்டிட்டு வந்து என்னப்பான்னு விசாரிச்சா , 

சார் இங்க ஆடுறவங்கப் பாவம் சார் அவங்க கூடப் பிறந்தவங்க யாராவது பார்த்தா நம்ம வீட்டுப் பொண்ணு இப்படி ஆடிச் சம்பாதிக்கிதுன்னு தெரிஞ்சா எவ்வளவு மனசுக் கஷ்டப் படுவாங்க ? அதான் அழுகையா வந்துருச்சு அப்படின்றானுக என்றார். 


அவர்கள் எல்லோரும் பஸ் ஏறிப் போன பின்னும் பல மாதம் இதை வைத்தே என்னை எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிக் கிண்டலடிப்பார் .பல ஆண்டுகள் கழித்து நான் புதுவைக்கு ஒரு போன போதும் கூட அவர் அந்தப் பசங்க அப்போது அழுத மாதிரி நடித்துக் காண்பித்தார் . சுற்றி இருந்த எல்லோரும் சிரித்தார்கள் ! 
அவர்களோடு நானும் சிரித்தேன். 
ஆனால், 

அங்கு என் சிரிப்பின் காரணம் மற்றவர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக