வெள்ளி, 26 ஜூன், 2015

அம்மாவின் இறுதிப் பயணம் .



முன் குறிப்பு . எங்கள் அம்மாவின் இறுதி நாள்  அன்று நிகழ்ந்த மறக்க முடியாத சில விசயங்களைப் பதிவு செய்து இருக்கிறேன். நேற்று 25.06.2015 அம்மாவின் நினைவு நாள் . இணையப் பக்கம் வாசிப்பவர்கள் சோகங்களைத் தாங்கிவரும் பதிவுகளைப் பிடிக்காதவர்கள் உண்டு .அவர்களிடம் முதன் முறையாக இந்தப் பதிவிடல் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் .



        அப்போதெல்லாம் எனக்கு அலைபேசி அழைப்பு இரவு பத்து மணிக்கு மேல் வந்தால் ஒரு விதப் பயத்துடன் எடுக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு இருந்தது .தந்தைக்கு மாரடைப்பு வந்த பிறகு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்ததில் நான்கு இடத்தில் அடைப்பு அதில் இரண்டு 90 சதவிதத்திற்கு மேல் இருந்ததும் , வேறு சில உடல் காரணங்களால் உடனே அறுவைச் சிகிச்சைச் செய்ய முடியாத நேரம் அது.அவரைத் தொடர்ந்து அம்மாவிற்கு உள்மூலம் சம்பந்தமாகத் தொடர் ரத்த இழப்பு உடல் பலவீனம் . இருவரும் பல வீனமான நிலையில் இருந்தார்கள் உணவும் மருந்தும் சொந்த அண்ணி அரசு மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிவதால் அவர்கள் மேற்பார்வையில் இருந்தது .

கடந்த ஆண்டு 25 ஜூன் அதிகாலை 4 மணிச் சுமாருக்கு அண்ணனிடமிருந்து ஃபோன் வந்தது . பதறித்தான் எடுத்தேன் . அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமிருப்பதால் ஐசியுவில் வைத்து இருக்கிறார்காள் .கூடவே தங்கி இருப்பதற்கேற்ப உன் மனைவியையும் அழைத்து வந்து விடு என்றார் . ஃபோனை வைத்து விட்டேன் ஆனால் ஏதோ ஒரு வெற்றிடம் மனதில் நிரம்ப, மீண்டும் அவரை ஃபோனில் கூப்பிட்டு எப்படி இருக்கிறார்கள் என்றேன் .அவர் ஏதோ சொன்னார் .ஆனால் எனக்குக் கேட்டது அல்லது புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான்.கிளம்பிவா என்பதுதான் அது .


          திண்டுக்கல்லில், நேரே ஜி.ஹெச்சுக்கே போய் விட்டோம் .என் வாழ்வில் அப்படி ஒரு நிலையில் அம்மாவைப் பார்ப்பது முதன் முறை எனக்கு .
உடல் நிலை முடியாத நிலையில் கூட எங்கள் ஐவருக்கும் உணவுச் சமைத்து விட்டுத்தான் ஒய்வெடுப்பது அம்மாவின் வழக்கம் .சொந்த ஊரில் விசேசம் என்றாலும் அன்று முழுவதற்குமான உணவு இருக்கும் .அதிகபட்சம் போன ஒரே நாளில் திரும்பி விடுவது அவர்கள் வாடிக்கை.அப்படிப் பட்ட அம்மாவை ஒருபக்கம் மூச்சுத்திறணலுக்கான ஆக்சிஜன் டுயூப் ,மறு புறம் இதயதுடிப்புக் கண்காணிப்புக் கருவிகள் ,குளுக்கோஸ் ஏற்றும் டுயூப் என்ற பல இணைப்புகளின் நடுவில் போராடிக் கொண்டு இருந்தும் உட்கார் என்று நிலைக்க முடியாத கண்களுடன் தான் படுத்து இருந்த பெட்டைக் காட்டினார்கள்.அது புரியவில்லை என்பதால் சிரமப்பட்டுச் சைகை செய்தார்கள் .எனக்கு என் பையனை அருகே அனுப்பச் சைகை செய்தார்கள் .அனுப்பினேன் .அவன் கைப் பற்றும் போது கண்ணீர் வழிந்தது. எனக்கு அங்கு இருக்கவும் முடியவில்லை இடத்தை விட்டு நீங்கவும் மனமில்லை.என் வெறித்த பார்வை என்னை மெல்லப் பலவீனப்படுத்தத் தொடங்கியது .கால்கள் நடுங்கியது .

பெரிய டாக்டர் வர்றாங்கக் கூட்டம் போடாதீங்க ,கவிதா சிஸ்டர் சொந்தமெல்லாம் கொஞ்சம் வெளியே நில்லுங்க அப்புறம் எங்கள டாக்டர் திட்டுவாங்க .
அங்கு உள்ளே பணிபுரியும் ஹெல்ப்பர்ஸ் சத்தம் போட ,அண்ணன் மகளை மட்டும் அம்மா அருகில் விட்டு விட்டு வெளியே வந்தோம் .

         மனைவியை அழைத்துக் கொண்டு எதிரே உள்ள ஹோட்டலில் உணவுச் சாப்பிட வைத்து விட்டு என் பையனுடன் திருப்பூர்த் திரும்பலாம் என மருத்துவமனைக்குக் கீழ் தளம் வந்தேன் .அதற்குச் சில வாரங்களுக்கு முன் இதே ஒரு வாரம் இரத்தக் குறைவு காரணமாக ஜி.ஹெச்சில் அம்மாவைச் சேர்த்து இருந்தபோது மனைவி ஒருவாரம் உடன் இருந்து திரும்பி இருந்ததால் அவர்களுக்குப் பழக்கம் ஜி.ஹெச் .அரைகுறை மனதுடன் உணவு சாப்பிட்டோம் .மீண்டும் மேலே வந்தோம் .ஜன்னல் வழியாகப் பார்த்தால் ஒருக்களித்த நிலையில் முகம் திரும்பி, படுத்து இருந்தார்கள் .உடன் இருந்த அண்ணண் பெண்ணைக் கேட்டோம் .டாக்டர் வந்தார் ஏதோ ஓர் இன்ஞ்செக்சன் குளுக்கோசுடன் போட்டார்ப் போடுவதற்கு முன் ( சித்தியை ) நர்ஸ் அண்ணியிடம் ஃபோன் பண்ணிப் பேசினார் இப்பப் பத்து நிமிசமாத்தான் தூங்கறாங்க என்றாள். .பார்க்கும் நேரம் முடிந்த நிலையில் , உடன் இருப்பவரைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக அறிவுறுத்தினார்கள் .நான் ஊருக்குத் திரும்புவதால் ஒருமுறை மீண்டும் அம்மாவைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று உள்ளே அம்மா பெட் அருகே போனேன் .அங்கு ஏதோ ஓர் அமானுஸ்யம் கலந்த ஒரு வெறுமை இருந்தது .இதயத் துடிப்பு மானிட்டரை எதேச்சையாய்ப் பார்த்தேன் .அதில் வெறும் நேரான கோடு போய்க் கொண்டு இருந்தது.அங்கு அதற்கு அடுத்த அறையில் இருந்த நர்ஸ் கூப்பிட அண்ணன் பெண்ணிடம் சொல்லி அழைத்தேன் .வந்த நர்ஸ் மானிட்டரைக் காட்டியவுடன் பதஷ்டமானாள் .வெளியே ஓடினாள் எனக்கு ஏதோ ஓர் அசம்பாவிதம் நிகழப் போவது போல இருக்க அம்மா ,அம்மா என்று மனம் பிதற்றியது .
யாரோ ஒரு டாக்டருடன் திரும்பவந்த அந்த நர்ஸ் ஏதோ மற்ற நர்ஸ்களையும் அவரசரமாக உடன் அழைத்துக்கொண்டாள் , அதற்குள் எங்களை வெளியேற்றினார்கள் அங்கு இதயத்திற்கு ஷாக் கொடுக்கும் முயற்சி நடந்தது .பல முறை அந்த முயற்சிக்குப் பிறகு அதையும் நிறுத்தி விட்டு டாக்டர் நர்ஸைப் பார்த்தார் . ஏதோ சொல்லி விட்டு மெல்ல வெளியேறினார் .இன்னும் சில நர்ஸ்கள் வந்து அம்மாவிடம் இருந்த இணைப்புகளை அகற்றத் தொடங்கினார்கள் .



          என்னால் என் புத்திக்குள் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்துக் கொண்டாலும் மனம் எதையோ ஏற்றுக் கொள்ள மறுத்தது .உடைந்துப் போனேன் .

எல்லோரும் அழுவதையும் பார்த்துக் கொண்டு இருந்த பையன் பாட்டிக்கு என்ன ஆச்சுப்பா ? என்றான்.எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

   எங்களைத் தேற்றிக்கொள்ளக் கூட நேரமில்லை அதற்குள் அண்ணி வந்து நாம் உடனே அவர்களை ஆம்புலன்சில் கொண்டு போகவேண்டும் இல்லையென்றால் பிரேதப் பரிசோதனை அது , இதுவென்று என்று அலைகழித்து விடுவார்கள் என்றார் .
என்னைப் பெரிய அண்ணன் கூப்பிட்டு , நீ , உன் வீட்டுக்கார அம்மாவை அழைத்துக் கொண்டு போய் அப்பாவிடம் சொல்லி அங்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் நாங்கள் உடனே இங்குச் செய்ய வேண்டியதைச் செய்கிறோம் என்றார்.

     அவர் வண்டிச் சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்து வண்டியை நகர்த்தும் போதுதான் எனக்குள் சரெலென்று கத்தியைச் செருகியது போல ஒரு கேள்வி வந்தது .அப்பாவிடம் என்ன சொல்வது ? 58 வருடம் கூட வாழ்ந்த உங்கள் மனைவியை ஆம்புலன்சில் கொண்டு வருகிறார்கள் அப்பா என்று எப்படிச் சொல்வது ?
மனைவியைக் கேட்டேன் .நான் சொல்கிறேன் நீங்க வண்டியை எடுங்க என்றாள் .

         பாதி வழிப் போகும் போது என்னால் வண்டி ஓட்ட முடியவில்லை .அம்மா இனி இல்லை என்பதை மனம் ஏற்றுக்கொள்ளாமல் தவித்தது .சில இடங்களில் நிறுத்தி அசுவாசப்படுத்திக் கொண்டேன்.பையன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அப்போது கேட்ட கேள்விக்கு நான் இன்னும் பதில் சொல்லவே இல்லை .எப்படிச் சொல்வது இரண்டு வருடதிற்கு இங்குத் திருப்பூர் வந்த அம்மா அப்பாவிற்குத் தெரியாமல் வேண்டாம் என்றும் மறுத்தும் கையில் சுருட்டிய பணத்தைக் கொடுத்துவிட்டுப் பத்திரமா வச்சுக்க ,எனக்கு எதாவது ஒன்னுன்னா எங்கேயும் அலையாதே என்று சொன்ன அம்மா இப்போது இல்லை என்றும் திரும்பி வரமாட்டர்கள் என்பதையும் எப்படிச் சொல்வது ?


      அப்பாவிடம் சொல்வதற்கு முன் எப்படிச் சொல்வது என்று எனக்குள் பலவிதமாகசொல்லிப் பார்த்தேன் எதுவும் எனக்குச் சமாதனமாகவில்லை .
பார்த்தவுடன் வாப்பா எப்ப வந்தீங்க ? நேரா ஆஸ்பத்ரிப் போயிட்டு வற்றீங்களா என்று அவரே கேட்டார் . சொன்னேன் .அம்மாவுக்கு ரொம்ப முடியலைப்பா .ஆஸ்பத்ரியிலக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க .
என்னை நிமிர்ந்து ஒரு தரம் பார்த்தார் .அவருக்குப் புரிந்து விட்டது .அவர் அப்பா ஆச்சே ? சில நிமிடம் மவுனமாக இருந்தார் .போயிட்டியா என்னை விட்டுட்டு என்பது போல இருந்தது அந்த வெறுமை நிறைந்த பார்வையில் .சரி ஆகறதைப் பாருங்க என்றார் அமைதியாக .என்னால் அந்த நிமிடத்தில் இந்த உலகத்தின் எல்லா நிகழ்வின் மேலும் கோபமாய் வந்தது .அவர்களை இருவரையும் பிரித்துப் பார்க்கும் சக்தி என்னுள் இல்லை .

          வாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்தது . ஃபிரீசர் பாக்ஸ் வரத் தாமதமானதால் அம்மாவை ஆம்புலன்சிலிருந்து எடுக்கவில்லை வைத்து இருந்தோம்.அப்பா வெளியே வரவில்லை .நாங்கள் பயத்தில் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தோம் .வெகு நேரம் குனிந்த தலையுடன் அமர்ந்து இருந்தார் .எனக்கு அப்போது சட்டெனெ நினைவுக்கு வந்தவர் அப்பாவின் நெருங்கிய நண்பர் .அவருக்கு அம்மா மருத்துவமனையில் சேர்த்தது மட்டும்தான் தெரியும் .அதற்கு நான் சொல்ல மறந்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.அப்பாவுக்கு எங்களை விட அவர் மாதிரி நண்பர் உடன் இருப்பது இப்போது மிக முக்கியம்  .எங்களிடம் இறக்கி வைக்க முடியாத சுமை அவர் வந்தல் குறையலாம் அவரிடம் போனில் கூப்பிட்டு சொல்லிவிட்டு  உடனே வரமுடியாவிட்டால் வண்டி அனுப்புகிறேன் என்றேன் .இல்லை உடனே வருகிறேன் என்றார்.


         வந்தார் .அவரைப் பார்த்தவுடன் அப்பா களங்கியது இன்னும் சில சமயத்தில் என் நினைவின் எழுந்து அறுக்கும்.அப்பாத் தன் தாய் ,தந்தை ,எங்களில் மூத்த அண்ணன் ஒருவர் இறந்தபோது கூடத் தளர்ந்து போனதை நாங்கள் பார்க்கவில்லை .எங்களுக்கு அம்மா மட்டும்தான் இல்லை இப்போது அவருக்கு வாழ்க்கையே இல்லை என்ற எண்ணம் வந்து விட்டது .
ஃபிரீசர்ப் பாகஸ் வந்தது .அம்மாவை அதற்குள் கிடத்தினோம் .வாசலில் நிழலுக்குச் சாமியான போட்டு ரெடியாக வைத்து இருந்தோம் .அப்பா வெளியே வந்தார் ஃபிரீசர்க் கண்ணாடி மேல் கை வைத்து அம்மாவைச் சில நிமிடம் பார்த்தார் .அதற்குப் பிறகு பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டார் .
எங்கள் உறவினர் மூலம் அம்மாவின் கண் தானம் பெற அரவிந்தக் கண் மருத்துவமனையிலிருந்து வந்து இருந்தார்கள்.அப்போதுதான் எனக்கும் தெரியும் .அப்பாவிடமும் அனுமதிக் கேட்டேன்.சரி என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டார் . நான் மட்டுமே அவர்கள் கூட இருந்தேன் .

விழி வெளிப்படலம் வெண்படலம் தாண்டி ஒரு சவ்வு ஒன்றை விலக்கிச் சின்னதாய்க் கரண்டி மாதிரி ஒரு குழியாய் ஒரு சாதனம் வைத்து ஒவ்வொரு கண்ணையும் தோண்டி எடுத்து ஒரு சின்னக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டார்கள் .பிறகு மெல்ல நரம்பால் சுற்றித் தையல் போட்டார்கள் வந்த டாக்டருக்கு உதவியாக இரண்டு பெண்கள் இருந்தார்கள் அவர்கள் கண்களை அகற்றும் வரை அம்மாவின் உடலைச் சுற்றித் துணி மறைத்துப் பிடித்துக் கொண்டதில் அவர்களுடன் நானும் ஒருவன் .கண் தானம் சிறந்த விசயம்தான் ஆனால் அதைப் பார்க்கும் வலி மிகப் பெரியது.
என் நண்பர்கள் எல்லோரும் வந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் .அது எனக்கே தெரியாது .அரசு எரியூட்டும் நிலையத்தில் நேரம் வாங்குவதிலிருந்து ,’காரியம்’ செய்யும் மருத்துவக் குலம் சார்ந்தவரை அழைத்துவருவது ,வருபவர்களுக்கு உணவு ஏற்பாடு,நீர்க் குடம் எடுக்க ஏரியா ஏரியாவாகக் கிணறு ,கைப் பம்பு எதுவும் கிடைக்காமல் யாரோ ஒருவரிடம் அனுமதிக் கேட்டு ஓஸ் பைப் போட்டு அடுத்தத் தெருவில் தயார் படுத்தியது இன்னும் எனக்குத் தெரியாத பல வேலைகளை என் சகோதர்களுக்குக் கூடத் தராமல் தாங்களே முன் நின்று, செய்து கொண்டு இருந்தார்கள் . எங்களைப் போல அவர்கள் எல்லோரும் அம்மாவின் கையால் உணவுச் சாப்பிட்டவர்கள் .அம்மாவை உடலை வழியனுப்ப அவர்களே எனக்குத் தூணாய் நின்றது யாரோ என்னை ஒரு பக்கம் நிலழாய்த் தாங்கியது போல இருந்தது .
எனக்கு அங்கு நடக்கும் எல்லா விசயங்களையும் நான் பார்ப்பது போல என்னை யாரோ பார்ப்பதாகப் பல முறை உணர முடிந்தது .அந்த ஊசலாட்ட சிந்தனைத் தவிர்க்க முடியாமல் என் வாழ்வு முழுவதும் தொடர்கிறது

     வந்த சொந்தப் பந்தத்தில் யாரோவெல்லாம் என் உள்ளங்கை நீட்டி அந்தத் துயரத்தைப் பறிமாறிக் கொள்ளும் செயலின் போதும், அமைதியாய் இருக்கும் வீட்டில் , திடீரெனெ அப்போதைக்கு வந்த பெண்களுடன் , கூடி அழும்போதும் என்ன ஆச்சு இங்கு என்று நினைவுகளின் நழுவல்களைத் தொலைத்து அடிக்கடி மீட்டுக்கொண்டு தவிக்க நேர்ந்தது.அம்மா இனி இல்லை ,இதோடு முடிந்து விட்டது என்பது எங்கோ உள் ரணமாய் விடாமல் வலித்தது கொண்டே இருந்தது.


நேரம் குறிக்கப்பட்டது .
அம்மா எங்கள் எல்லோரையும் விட்டு நிரந்தமாகப் பிரிந்துச் செல்வதற்காகக் குறிக்கப்பட்டதான் நேரம் அது.
அதற்கான செய்முறைகள் நிறைவேறத் தொடங்கியது .அதில் ஒன்று அங்கு நீரைப் பயன் படுத்திச் செய்யும் அனைத்து வார்த்தைகளிலும் காசி ,காசி என்று சொன்னார்கள் அது பொதுவாகச் சகல இடத்து நீரினால் செய்யும் காரியங்களுக்குச் சொல்வது வழக்கம் ஆனால் அங்குப் பயன் படுத்தப்பட்ட நீர் ,அதற்குச் சில வாரங்களுக்கு முன் மாமனார்க் காசிச் சென்ற போது எடுத்து வந்த காசித் தீர்த்தமே அங்குப் பயன்படுத்தப் பட்டது .அம்மா போகும் போதும் அதிருஷ்டசாலிதான் என்று அங்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டது எனக்கு என்னவோ செய்தது .போகாமல் இருப்பவர்கள் ?
அம்மாவின் இறுதி மரியாதைப் பயணம் தொடங்கியது .! திண்டுக்கல் அறிவுத்திருக்கோவிலைக் கடந்து ரயில்வே பாலம் தாண்டி ஹவுசிங்போர்டு வீடுகளைத் தாண்டிப் பைப்பாஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டும் நிலையத்தில் முன் பகுதியில் அம்மாவின் உடல் கிடத்தப்பட்டது வைக்கப்பட்டது.இறுதிச் செய்முறைக்காக.பெரிய அண்ணன் செய்தார் .உள்ளே எடுத்துச் சென்று இரண்டு தண்டவாளம் போன்ற அமைப்பில் கட்டைகள் அடுக்கி அதில் மேல் அம்மாவின் உடல் கிடத்திவிட்டு உடலை எரிக்கும் ஃபர்னேஸ் கதவு உயந்தது .யாரோ இருவர் பலம் கொண்ட மட்டும் அதனுள்ளே தள்ளிக் கதவை இறக்கினார்கள் .
எல்லாம் .முடிந்து விட்டது . அடுத்த நாள் அமாராவதி என்று லேபிள் ஒட்டப்பட்ட
           
           ஒரு மண் கலயத்தைத் தந்தார்கள் .அதற்கும் சில சிரார்தங்களைச் செய்து அதை எடுத்துக் கொண்டு கொடுமுடி ஆற்றில் விட்டுவிட்டு வந்தோம். நான்காம் நாள் திருப்பூர்த் திரும்பிய போது, பக்கத்து வீட்டில் அம்மாவின் மரணம் பற்றி விசாரித்து விட்டு எனக்கு வந்த அகலாமான ஒரு கூரியர் கவர் கொடுத்தார்கள்
 .

           வீட்டுக்குள் சென்று  கவரைப் பிரித்தேன்.அரவிந்த் கண் மருத்துவமனையிலிருந்து - அம்மாவிடம் பெற்ற கண்ணுக்கான  ’கண்தானப் பாராட்டுச் சான்றிதழ்’  அது.

வாழும் போது இந்த உலகத்தில் படிக்காததால்  எங்கள் அம்மா எந்த சான்றிதழும் பெற்றதில்லை ஆனால்  இறந்த பிறகு இரண்டு  சான்றிதழ் கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் அதில் இதுவும் ஒன்று.( இன்னொன்று இறப்புச் சான்றிதழ் ).

வாழ்ந்த அடையாளம் .

இருக்கும் வரை அம்மா எங்கள் எல்லோரையும் வாழவைத்தார்கள் .இறந்த பிறகும் யாருடைய வாழ்விலோ ஒளி கொடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இப்போதும்…

எந்த அம்மாக்களுக்கும், எப்போதும் சாவில்லை …




3 கருத்துகள்:

  1. இன்று மகன் உலகம் முழுக்க எழுத்தின் வாயிலாக சென்று கொண்டு இருக்கின்றார் என்பதை அவரது ஆன்மா உணர்ந்து மகிழ்ச்சி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் தாயாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக என் பிரார்த்தனைகள் சகோதரரே.

    பதிலளிநீக்கு
  3. மனம் கனத்துப் போனது! அனைவருக்குமே அம்மாவின் இழப்பு தாங்க முடியாத ஒன்றுதான்!

    பதிலளிநீக்கு