சனி, 19 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் (கடிதம் ) - இரண்டாவது பகுதி

 பெண்களின் பார்வைக்கான அர்த்தம் முழுவதுமாக கண்டுபிடித்து விட்டால் மனிதனின்   உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளால் சொல்ல முடியும் சாத்தியம் அப்போதுதான் வரும் என்பதை அன்று அவள் பார்வையில்லிருந்துதான் நான் உணர்ந்துகொண்டேன் ” 

தேவன்
நாள் குறிப்பு  14-02-1989
.

            தேவன் தனது நாட்குறிப்பிலிருந்து   தனக்கு, உமாவுடனான தன் முதல் சந்திப்பை எழுதிருந்ததை இங்கு தந்து இருக்கிறேன் .சில சமயம் ஒன்று சேர்ந்த காதலை விட பிரிந்த காதலிலே அதிக அனுபவமிக்கதாகவும், ஆழமான செய்திகளை விட்டுச் சென்று இருக்கிறது. தேவனின் காதல் சந்திப்பு ....

             
 மார்கழி இதமான இதமான குளிர் நிறைந்த மாதம் . பூமி  சூரியனிடம் பொய்க் கோபம் கொண்டு வடக்குப்பக்கம் முகம் திருப்பிக்கொண்டு ஊடலுடனே  மிக அருகில் சுற்றிக்கொண்டு இருக்கும் காலம் இது .இந்த மாதிரி ஒரு மார்கழி மாதத்தில்தான் அவளை முதன் முறையாக சந்தித்தேன் . என் இளமை தனது நீண்ட நினைவு பயணத்திற்கு முன்னுரை எழுத  தொடங்கிய காலம் அதுதான் .

              அதிகாலை பனிக்குளிரில் வீட்டுக்கு அருகிலிருக்கும் முருகன் கோவிலின் ஜெயராம் அர்ச்சகருக்கு உதவி புரிந்து கொண்டு இருந்த காலம் அது .அந்த கோவிலின் உள்புறத்தின் கர்ப்ப கிரகத்தில் நின்ற நிலை  முருகனுகனுக்கும் எனக்கும் சில அடிதூரம் வரை என் சேவை இருக்கும் .நான் பிராமணன் இல்லாததால் என் எல்லைக்கோடு அவ்வளவுதான்.அந்த முருகனை நான் எப்போது பார்த்தாலும்  என்னைப் பார்த்து மட்டும் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பதாகவே தோணும்.அங்குதான் உமாவை முதல் முதலில் சந்தித்தேன் அவளுக்கு 11 வயது எனக்கு 14.

                 எத்தனைதான் காதல் விபத்துக்கள்  வாழ்க்கையில் சொல்லி வந்த காதல் அனுபவங்கள்  சொல்லாமல் வந்த காதல் அனுபவங்கள் என்று  இன்று வரை சந்தித்தாலும் முதன் முறையாக என் உடலில் உள்ள  72000 நாடிகளில் எனக்கு காதல் நாடியை அறிமுகப்படுத்தியது அவள்தான் .இத்தனைக்கும் அவளும் நானும் ஒருவரை ஒருவர் அந்த மார்கழி மாதத்திற்கு பிறகு பல முறை அதே கோவில் சந்தித்து கொண்டாலும் சிரித்ததுகூட இல்லை . ஆனால் முதல் முறையாக இருவரும் பேசிக்கொண்டது இப்போதும் நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது .

                 
     மார்கழி மாத கடைசி நாள் பூஜை பெண்கள் அதிகம் மதிப்பு தரும் நாள் .ஆண்டாளுக்கு நாரயணனைப்போல தனக்கும் இஷ்டப்பட்ட முகம் தெரியாத ஒரு காதல் கணவனுக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கும் கடைசி நாள்.கோவில் உள் வளாகத்தின் முன் பக்கத்தில்  சுமார் இருபது பெண்கள் மட்டுமே அமர்ந்து பூஜை செய்ய முடியும் .அதனால் மற்ற பெண்கள் கோவிலைச்சுற்றி அமர்ந்தும் வெளியே உள்ள பந்தலில் பூஜை செய்வார்கள் .அதனால் கோவில் முன் பகுதியில் முருகனை தரிசித்துகொண்டே பூஜை செய்யும் அந்த இடத்திற்கு கடைசி நாளில் போட்டி அதிகம்.அன்று கோவிலில் வேலை அதிகம் மண்டகப்படியாளார்கள் அதிகம் வருவார்கள். அன்றைய இலவச பூஜைப்பொருள் இலவசமாக குவிந்து விடும் .மற்றைய நாளில் அவரவர்களே விளக்கு பூஜைக்கான பொருள் கொண்டு வருவார்கள் ஆனால் கடைசி நாளில் .விளக்குக்கு ஊற்றப்படும் எண்ணை முதல் திரி பழம் தாம்பூல பொருள்கள் அனைத்தும் இலவசம் .அன்றைய விளக்கு பூஜைக்கான நல்லலெண்ணை செலவு முழுவதுவும் என் வீட்டில் அம்மா ஏற்றுக்கொள்வார்கள் .

முன்னமே நான் சொன்னது போல அன்று முன் வரிசையில் இடம் பிடிக்க
போட்டா போட்டி இருப்பதால்  பூஜை ஆரம்பிக்கும் அதிகாலை 5 மணிக்கும் முன் கோவிலின் வெளிக்கதவை  பூட்டி வைத்து இருப்போம்.அன்று நான் கோவிலுக்கு 3 மணிக்கே போய்விட்டேன் . நான் மடப்பள்ளியில் பஞ்சாமிர்தம் தயார் செய்ய நாட்டுச்சக்கரையை அண்டாவுக்குள் கொட்டிக்கொண்டு இருந்தேன் . சுமார் 3.30 இருக்கும் யாரோ வெளியேயுள்ள இரும்புக்கதவை கதவை ஆட்டுவது போல சத்தம் கேட்டது கூடவே சாமி ,சாமி என்ற ஒரு பெண்ணுக்குரிய குரலும் கேட்டது.
 அர்ச்சகர் ,கிச்சப்பு ( எனக்கு அவர் வைத்த செல்லப்பெயர் அது ) யார்ன்னு ? பாரு என்றார் .
 அப்போது தெரியாது அப்படி ஒன்று நடக்கப்போகிறது என்று .ஆம் அங்கு அவள் தட்டியது கோவில் வாசல் கதவு இல்லை என் இளமையின் கதவை !
வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு உமா நின்று இருந்தாள் .
சாமி இல்லையா ? கேட்டாள்
உள்ள இருக்கார். 
கதவை திறந்து விடுங்கள் எனக்கு முன் பக்கம் கோளம் போட வேண்டும் என்றாள் .
எனக்கு புரிந்து விட்டது .
முன்னுரிமை பெற திருட்டு வழி .’அட்வான்ஸ் ரிசர்வேசன்’.
இல்லை சாமி இப்போது திறக்க கூடாது என்று சொல்லி இருக்கிறார். நாழரைக்கு மேல்தான் திறக்க சொல்லியிருக்கிறார் என்றேன் .
கோவில் வாசல் குழல் விளக்கில் அவள் முகம் ஏமாற்றம் அடைந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
மீண்டும் அவள்
 சாமி எப்போ வருவார் ? .
குரலில் ஏமாற்றம் சுரத்தை குறைத்து இருந்தது
உள்ளேதான் இருந்தார்.
இல்லை வெளியே போயிருக்கிறார்.
அவர் அப்படிதான் ஏற்கனவே சொல்லச் சொல்லியிருந்தார்.

அவள் எதுவும் சொல்லவில்லை.சட்டெனெ திரும்பி பிடியிறங்கி நடக்க தொடங்கினால்..
அது எனக்கு என்னவோ செய்தது !

ஏனோ தெரியவில்லை என்னை அறியாமல் பூட்டியிருந்த கதவு வழியாய்  பார்த்தேன் . நிலவு ஒளியிலும், சாலையோரத்து தெருவிளக்கின் வெளிச்சத்திலும், முழங்கால் வரை குட்டைப் பாவடை இடமும் வலமும் அசைய அவள் மெல்ல நடந்து போய்க்கொண்டு இருந்தது தெரிந்தது .

அது எனக்கு குமுத்தில் சுஜாதாவின் ’பிரிவோம் சந்தித்தோம்’தொடருக்கு ஜெ... வரைந்த , மதுமிதாவின் ஓவியத்தை ஞாபகப்படுத்தியது !
அவள் திரும்பி பார்ப்பாள் என்று மனது சொல்லியது .
தெரு முனை வரை அவள் போய் திரும்புவது வரை  தொடர்ந்து பார்த்தேன் . அவள் திரும்பி பார்க்கவேயில்லை .
  
நான் திரும்பி மடப்பள்ளியை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நான் திரும்பி வந்த பின்னும், எனக்கு என்னையே ஒரு புது உணர்வுக்குள் இழுத்தது.

வேலையில் என் கை செயல் பட்டுக்கொண்டு இருந்தாலும் மனம் அந்த குட்டைப்பாவாடையில் தொங்கிக்கொண்டு, நடந்து கொண்டே இருந்துகொண்டு இறங்க மறுத்தது.

அப்போது பளிச்சென்று ஒரு யோசனை தோணியது .உடனேயும் அதைச் செய்து விட்டேன்.

அது ...

மணி நாழரைக்கெல்லாம் கோவில் கதவைத்திறந்து விட்டோம் .அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளே வரக்காத்துக் கொண்டு இருந்தார்கள். அத்தனை பேரிலும் அவளை மட்டும் என் கண் தேடியது 
யாரோ என் தோளைத்தொட்டார்கள் .

தம்பி, இந்த இடத்தில்  யாரோ கோளம் போட்டு உமா என்று எழுதியிருக்கிறார்கள் ,அருவார்களா? 
கேட்டவர் தினமும் கோவிலுக்கு வரும் கோவில் ’ட்ரஸ்டியின்’ மருமகள் .
ஆமா அக்கா ,ஒருத்தங்க வந்து கோலம் போட்டு, சொல்லிட்டு போயிருக்கிறார் என்று பொய் சொன்னேன் .  
நாங்கள் வந்த பின்னால்தானே கதவு திறந்தீர்கள் என்று அவர் கேட்கவில்லை .
ஒரு வேளை இன்னொரு பொய் சொல்ல விடமால் எனக்கு அங்கு இருந்த முருகன் காப்பாற்றி விட்டார் போல ! 

ஒருவேளை அப்படிக் கேட்டு நின்று கொண்டு இருந்தால் அதற்குள் கோவிலுக்கு பின் புறம் இருக்கும் இடமும் பறி போய் ,பிறகு வாசலுக்கு வெளியே வந்து பந்தலுக்கு அடியில் பூஜை செய்ய வேண்டி நிலை வரலாம் என அவர் யோசித்து கேட்காமல் போயிருக்கலாம் !  
எதற்கும் பந்தலுக்கு வெளியே பார்ப்போம் என்று வெளியே வந்தேன்.
இரண்டாவது வரிசையில் பளிச்சென மஞ்சள் பட்டுப்பாவாடையில் உட்கார்ந்து இருந்தாள் . 

எப்படிச் சொல்வது ?
நல்ல வேளை ,அவளுக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் சின்னப்பெண் என்னை கவனித்தது.
சைகை செய்து பக்கத்திலிருக்கும் உமாவைக் காட்டிக் கூப்பிடச் சொன்னேன். 
நிமிர்ந்து பார்த்தவள் ,உடனே எழுந்து வந்தாள் . 
உள்ளே முதல் வரிசையில் கோவிலுக்குள் கைகாட்டி உங்களுக்காக இடம் போட்டு வைத்தேன் என்றேன் .
முதலில் அவளுக்கு புரியவில்லை . 
நீங்கதான் 4 மணிக்கே உள்ளே இடம் போட வந்தீர்களே என்று சொல்லி முடிப்பதற்குள் புரிந்து கொண்டாள் .
என் அந்த மிகப்பெரிய சேவைக்கு ஒரு நன்றி சொல்வாள் என்று எதிர்பார்த்தேன் .
ஆனால் அவள் உடனே திரும்பி தன்னிடம் போய் குத்து விளக்கை தூக்கி வந்து நான் சொன்ன இடத்தில் விளக்கை வைத்து விட்டு  உட்கார்ந்தாள் .
அந்த இடத்தில் கோவில் கோலப்பொடியில் சின்னதாய் அவள் பெயரை நான் எழுதிவைத்ததை பார்த்து இருப்பாளா ?
பூஜை முடித்த பின் ஏதாவது சொல்லிவிட்டுப் போவாள் என்று என்னை சமாதானப்படுத்திகொண்டு ,மறந்து போனேன் .  
ஆனால் பூஜை முடிந்த பின்னும் அவளைப் பார்க்க முடியவில்லை .


ட்டு வருடம் கழித்தபின்  ஒரு நாள் ..
என் நண்பரின் தங்கை, எனக்கு ஜூனியர்  . தமிழ் இரண்டாமாண்டு படித்துக்கொண்டு இருந்தார். எனது நூலகத்திலிருந்து அவருக்கு ’ரெஃபரென்ஸ்’  புத்தகம் கேட்டு இருந்தார். வாங்கிப்போக வரும்போது கூடவே ஒரு பெண்ணையும் கூட்டி வந்து எங்கள் காம்பவுண்டுகு வெளியே நிற்க வைத்துவிட்டு வந்து இருந்திருக்கிறார்.என்னிடம் சொல்லவில்லை.

(எனக்குத்தெரிந்து ஒரு பெண் ஒரு ஆணுடன் என்னதான் பழகியிருந்தாலும் தன்னை விட அழகான பெண்ணை தான் பழகிய ஆணுக்கு அறிமுகப்படுத்துவதேயில்லை. இது நம்பிக்கையின் வேறு கோணமா ? சுய பாதுக்காப்பா ? என்பது தெரியவில்லை !)

புத்தகம் வாங்கிவிட்டு நண்பரின் தங்கை  திரும்பி போகும் போது எதேச்சையாக உயரம் குறைவான எங்கள் கம்பவுண்டுக்கு வெளியே நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்தேன் .ஆனால் என்னைஅவள் பார்க்கவில்லை.
அந்த முகம் …

அந்த முகம் ....
வெகு நாளாய் என் நினைவின் ஆழத்தில் கிடந்த ஏதோ ஒரு  முகத்துடன் ஒத்துப்போவது போல இருந்தது !


மன்னிக்கவும்,
 மீண்டும் தொடர்கிறது.....

செவ்வாய், 1 டிசம்பர், 2015

உமாவின் களவு போன காதல் ( கடிதம் ) !


உலகில் ஆண்களை விடவும் பெண்கள்தான் காதல் கடிதங்கள் எழுதுபவர்களில் மிகப்பெரிய சமர்த்தர்களாக இன்னும் இருக்கிறார்கள் . நேரில் பேசுவதைப்போலத் தன் மன உணர்வுகளை அப்படியே எழுத்தின் மூலம் கொட்டித்தீர்த்து விடுகிறாகள்.இதில் மிகப்படித்த பெண்கள் படிக்காத பெண்கள் என்றெல்லாம் இல்லை எல்லோரும் தட்டி எறிகிறார்கள் .கல்யாணத்திற்கு முன் பெண்களால் எழுத்தப்படும் காதல் கடித்தங்களில்தான் ”ரொமான்ஸ்” அதிகம் வழிந்து ஓடுகிறது இதில் கி.மு 2200 ல் சுமேரிய நாட்டின் உயர்நிலைப் பாதிரியான இன்னானா முதல் இரவின்போது கணவனுக்காகக் கல்லால் செதுக்கப்பட்ட உலகின் முதல் காதல் (கவிதைக்) கடிதம் மட்டும் சேர்த்தியில்லை. 

நமக்கு வந்த காதல் கடிதங்களை விடவும் அடுத்தவர்களுக்கு வரும் காதல் கடிதங்கள்தான் உலகில் அதிகம் பேசப்படுகிறது.அமெரிக்காவின் அபிகெயில் ஆடம்ஸ் (Abigail Adams ) இங்கிலாந்தின் மேரி வோல்ஸ்டோன்க்ராஃப்ட் (Mary Wollstonecraft ) நெப்போலியன் (Napoleon Bonaparte ) முதல் ஜிம்மி ஹென் (Jimi Hendix ) வரை அனைத்துக் காதல் கடிதம் ரசங்களும் மிதக்கும் உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகள் எல்லோருக்கும் பிடிக்கத்தான் செய்கிறது .ஆனால் உங்கள் நண்பருக்கு வந்த காதல் கடிதம் படிக்க மனசு வருமா ? வராது எனக்கும் வரவில்லை.ஆனால் அந்த நண்பர் தேவன் விடவில்லை . 

நண்பர் தேவன் என்னை விடச் சில வயது மூத்தவர்.நிறைய படிப்பவர்.எழுதுபவர். மார்கழி மாத ஆண்டாளைத் தோழிகள் எழுப்புவதை மாற்றி அந்த நாரயணனே எழுப்புவதாகத் தனது காதலிக்காக யோசித்து ”மார்கழிப்பெண்ணே” என்ற கவிதை தொகுப்பை எழுதியவர் . நிறைய யோசிப்பவர்.நாங்கள் படித்த புத்தகம் பார்த்த திரைப்படம் எதிலுமே நாங்கள் பார்க்காத கோணத்தில் தன் பார்வையைப் பதிவு செய்பவர் .அவருக்கும் – உமா என்ற பெண்ணுக்குமானக் காதல் காலத்தில்தான் நான் உடன் இருந்திருக்கிறேன் . 

உமா முதல் இவர்கள் காதல் காலம் தொடங்கிய முதல் வருடத்தில் செமஸ்டர் லீவுக்குத் திண்டுக்கல்லு அருகில் இருக்கும் தனது பெரியப்பா ஊருக்குப் போய் 28 நாள் தங்கியிருந்தார் அப்போது தேவனுக்கு அங்கிருந்து எழுதிய கடிதங்கள் 23 (இது முதல் வருட செமஸ்டர் விடுமுறை மட்டும்தான் அடுத்த வருடம் எத்தனை என்பது எனக்கு ஞாபகம் இல்லை).ஒரு முறை அவர் வீடுக்குப் போனபோது மிகவும் கவனமாக ஒரு கோடு போடாத பேப்பரில் மிகக் கவனமாக ஒவ்வொரு வரியாக அடிக்கோடிட்டுப் படித்துக்கொண்டு இருந்தார்.என்ன என்று கேட்டு விட்டேன் .நான் செய்த மிகப்பபெரிய தவறு அதுதான் .மனிதர் படித்துகாட்டத் தொடங்கிவிட்டார்.. 

இது நாகரீகம் இல்லை அடுத்தவங்கக் குளியறைக்குள் எட்டிப்பார்ப்பது பொல என்று மறுத்த போது தேவன் விடவில்லை .இது என் குளியறைதான் என் நண்பன்தான் என்று சொல்லியிருந்தாக் கூடப் பரவாயில்லை . அவர் சொன்னப் பதில் அந்தப் பெண் உமா அவருக்கு எழுதிய கடித வரிகளை விடவும் ஒரு வித ரொமான்ஸாக இருந்தது. இது உனக்குப் படித்துக்காட்டும் போது எனக்கு ஒரு கவிதையைப் படிப்பது போலச் சுகமாக இருப்பதாக உணர்கிறேன்.இந்த உலகத்தில் எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சத்தமாக ஏதோ ஒரு மலை மீது ஏறி கத்துவது போல ஒரு கர்வமாக இருக்கிறது .இதனல் உமா மீது என் காதல் இன்னும் எனக்குள் இறுகுகிறது.என்றார்ப் பதில் சொல்லாமல் அந்தத் தவறை (அடுத்தவர் கடித்தை படிப்பதை ) கேட்டேன் ! 

ஒரு முறை அவருக்குக் கடிதம் தபாலில் வந்தபோது அவருடன் வீட்டிலிருந்தேன் .அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.வந்து இருந்த அந்தத் தபால் கவரை பிரிக்காமல்உள்ளங்கயில் வைத்து ஒரு முறை அதன் கனத்தைக் கண்மூடி உள்வாங்கினார்.சில நிமிடம்தான் வேறு எதுவும் யோசிக்காமல் அந்தக் கவரை தனது மேஜை ட்ராயரில் வைத்து மூடி வைத்து விட்டு என்னோடு வெளியே கிளம்பிவிட்டார்.எனக்குப் புரியவில்லை .கேட்டு விட்டேன் .ஒரு வேளை நான் இருப்பதால் படிக்கவில்லையா என்றதும் இல்லை வேறூ காரணம் என்று கண் சிமிட்டினார்.

அவள் என்ன எழுதியிருக்கிறாள் என்பதை என் மனம் தறிகெட்டுத் தவிப்பதோடு படித்தாள் அவள் என்ன சொல்லவந்தாள் என்பது புரியாதுப் போகலாம் .என்னுள் அந்த எதிர்பார்ப்புத் தீர்ந்துப் போன பிறகு ஓவ்வொரு வரியாய்ப் படிக்கும் போது மிகப்பெரிய சுகம் வருகிறது .அது மட்டுமல்ல என்ன எழுதியிருப்பாள் என்று அதைப் படிக்காமல் அந்தச் சுகமான வலியோடு சும்மா இருக்கும் பிடிவாதமாக இருப்பதும் ஒரு விதமான சுகம் என்றார். அது சரி இந்த அனுபவம் நமக்கு ஏற்பட்டால்தானே ? 

ஆனால் எனக்கும் ஒரு காதல் கடிதம் வந்தது நான் சில ஆண்டுகள் புதுவையில் இருந்த போது என் அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி ஒரு காதல் (!) கடிதம் எழுதியிருந்தாள் .அனேகமாக உலகத்தில் எழுதப்பட மிக மோசமான தமிழ் கொலைக்கடிதம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் ! இன்னானா   கணவனுக்காகச் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட காதல் ( கவிதை) கடிதத்தை வாசித்து விளங்கிக்கொள்ளவாவது 58 வருடங்கள் சுமேரிய மொழியில் நிபுணர்களான Muazzez Longso, Hatice ஆகியோருக்கு ஆகியிருக்கு.ஆனால் என்னால் அந்தக் கடித்தத்தைக் கடைசிவரைப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. பொதுவாக நமக்குப் பிடித்தவர்கள் எழுதிய கடிதங்களில் பிழைகள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள்.ஆனால் கடிதம் முழுதுமே பிழையாக இருந்தால் என்ன செய்வது ? அப்படியும் முயற்சிப் பண்ணி எழுத்துக்கூட்டிப் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் போது வீட்டு சொந்தக்காரர் ( House Owner ) பையன் ஒட்டுக்கேட்டுவிட்டு அவன் அக்காவிடம் சொல்லியிருக்கிறான் (அந்தப் பெண் சுமாராகத்தான் இருக்கும் ) ஒரு முறை நேரில் பார்த்தப் போது அங்கிள் உங்களுக்கு ’தமிள்’ வராதா என்று கேட்டது நக்கலாக .என் தலைவிதியை என்ன சொல்வது? 

சரி நான் அடுத்தவர் காதல் கடிதம் படித்த மோசமான பெருமையைப்பற்றிச் சொல்லவா இந்தப் பதிவுக்குள் வந்தேன் அதுவும் பதிவின் தலைப்புக்கும் நான் சொல்லிக்கொண்டு இருக்கும் விசயத்திற்கும் சம்பந்தமில்லாதது போலப் படுகிறதா ? இல்லை .

நண்பர் தேவனுக்கு உமா எழுதிய அத்தனை கடிதங்களும் ஒரு நாள் திருடு போய் விட்டது .திருடுப் போய் விட்டது என்பதை விடத் தேவனின் நெருங்கிய நண்பரால் திட்டமிட்டுக் களவாடப்பட்டு விட்டது ! 

 அது ஏன் என்பதைச் சொல்ல நேரம் போதவில்லை.அடுத்த பதிவில் தேவனின் அந்த நண்பர் ஏன் களவாடினார் என்பதைச் சொல்ல வருகிறேன் .     


செவ்வாய், 17 நவம்பர், 2015

என்றென்றும் அன்புடன் ,



அப்பாடா என்று புது அலுவலகம் வந்து உட்கார்ந்து விட்டோம் .அற்புதமான சூழலில் இன்னும் உற்சாகமாகப் புது விசயங்கள் எழுதுவதற்கு ஆர்வம் பிறக்கிறது.பொதுவாய்த் தேர்வுக்கு மிகக் கவனமாகப் படிக்கும் போதுதான் நிறையக் கவிதை எழுத ,கட்டுரை எழுதப் புத்திப் போகும்..அப்படித்தான் தொடர்ந்து வேலை இருக்கும் போது நிறையவிசயங்கள் வந்து போனது. 

குறிப்பாய் , 

நடனமாது மனது பற்றி.. 

கிருஷ்ணனின் குழந்தைப் பருவத்தைப் மட்டுமே விரும்பிய கவிஞர் சூர்தாசர் அருமையான ஒரு பக்திப் பாடலான ”பிரபு எந்தன் குறைகளைமனதிற்கொள்ளதே”என்றுத் தொடங்கும் பாடலை கேத்ரி மன்னரின் அரசச் சபையில் “அம்மா! என் கண்களைத் திறந்துவிட்டாய்? உலகில் யாரும் உயர்வும் இல்லை. தாழ்வும் இல்லை?“ என்று சுவாமி விவேகானந்தரை கண்ணீர் மல்கக் மன்னிப்பு கேட்க வைத்த அந்த நடனமாது மனது பற்றியும் , 

ஆண் - பெண் மனநிலை

உலகில் எப்போதும் சுவாரசியமாகவே இருக்கும் ஆண் - பெண் மனநிலைகளைப் பற்றிச் சமீபத்திய நீயா – நானாவின் அழகியல் பற்றிய ஆய்வும்,இயற்கையிலேயே 
ஆண்-பெண் மூளை அமைப்பை இந்தியாவைத் தவிர 45 நாடுகளுக்கு மேல் நேரடியாக ஆய்வு செய்து எழுதிய ஆலன் & பார்பரா பீஸ் கட்டுரைகளும் , 

மனதில் எண்ணம்


எங்கிருந்து மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படாத ரோண்டா பைரனின் ( Rhonda Byrne - The Secret ) ”ரகசியம்” ( அதன்தொடர்ச்சியாய் வந்த .சக்தி .மாயாஜாலம் போன்ற புத்தகங்கள் ) ஏன் விற்பனையில் சக்கைப் போடு போடுவதையும், 

ஊனமுற்ற மனம்

எங்கள் அம்மாவைத் தொடர்ந்து அப்பாவின் மறைவின் வலியை சுமக்கவும் முடியாமல் இறக்கி வைக்கவும் முடியாமல் ஊனமுற்ற மனதோடு உலவிக்கொண்டுஇருப்பதுவும் 

என எழுதப் பல விசயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது .. 

அதில் ஒன்று திருப்பூரில் எனக்கு இருக்கும் இரண்டு நண்பர்களில் இரண்டாமவர் ராஜதுரை .அவரின் கல்யாணம் பொள்ளாச்சியில் . 


இப்போது இருக்கும் என் கம்பெனியில் அவர் ’சீனியர் மெர்சண்டைசராக’ இருந்தவர் அவர். ஒட்டன்சத்திரம் அருகில்தான் அவருக்குச் சொந்த ஊர்.எதையும் ’டேக் இட் ஈசியாய்’ எடுத்துக்கொள்ளும் கொள்கையுடையவர் அவரை விட அவர் அப்பா மிகச் சுவாரசியமானவர் .விவசாயியாகப் பிறக்கவேண்டும் என்ற என் அடுத்த ஜென்ம ஆசையை இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு விவசாயி .அவர்கள் தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் கணக்கன் பட்டி .இரண்டு முறை அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறேன் .முற்றிலும் வேறு தனித்த ஓர் உலகமாகப் படும் இடம் .அங்குச்செல்ஃபோன் எப்போதாவது வேலை செய்யும் .வெகுதூரம் வண்டிப்பாதைதான்.மிகுந்த வயல் பரப்பு மட்டுமே என்பதால் அது நகர மன அழுதத்திலிருந்து வெகு தூரம் தள்ளிச் சென்ற மிக விடுதலைப் போல உணர்வைத் தரும் இதல்லாமால் அங்குக் காட்டு யானைகள் வந்து போகும் இடம் அவர்கள் தோட்டத்தைப் பலமுறை துவம்சம் செய்துஇருக்கிறது .ஒருமுறை நாங்கள் போன போது அதிகாலை நான்கு மணிக்கு யானையின் பிளிறல் பயமுறுத்த்த்தி இருக்கிறது ! .அவர் அப்பா சுவாரசியமானவர் என்று இங்குச் சொன்னதற்குக் காரணம் வேறு. 

கண்டப் பயலுகச் சகவாசம் !

முதல் முறை ஊருக்கு நண்பர் ஆதியுடன் கண்ணக்கன் பட்டி போயிருந்த போது வீட்டுக்கு அடுத்தச் சாலை வீட்டில் ராஜதுரையும் அவர் அப்பாவும் முழுப்பாட்டிலைக் காலி செய்து கொண்டு இருந்தார்கள் . குடிப்பது தவறுதான் ஆனால் அதை அப்பா ஊற்றித்தர அம்மா கறி சமைத்துத் தட்டில் சுடச் சுட படைப்பதுவும் இது வரை எந்த வீட்டிலும் நான் பார்த்தது இல்லை.இங்கு யார் போனாலும் அவருக்கும் ஒரு கோப்பைக் காத்து இருக்கும் .இதற்கு நண்பரின்அப்பா சொல்லும் கரணம் என்ன தெரியுமா?என்னுடன் அவன் குடிப்பதால் ஒரு பொறுப்பு வருவதாகவும் கண்டப் பயலுகச் சகவாசம் குறைவதாகவும்சொல்கிறார். சரிதான் ! 

பொள்ளாச்சிக்குக் குறைந்தது ஒன்னறை மணி நேரப் பயணம்.போகும் போது படிக்க ஒரு பாலகுமாரன் பழைய அலமாரியிலிருந்து எடுத்துக்கொண்டேன்.ஒரு வேளை நின்ற படியே பயணம் என்றால் அதற்கு ஹெட்ஃபோன் எடுத்துக்கொண்டு புஷ்பாத் தியேட்டர் நிறுத்தத்தில் மத்திய பேருந்துநிலையம் செல்ல நகரப் பேருந்ததில் ஏற முதல் படியில் கால் வைக்கிறேன் .உள்ளுகுள்ளிருந்து ஒரு கை என் தோளில் அழுத்தமான பிடிக் கவ்வியது.சுதாரிபதற்குள் யாரோ மனிதர் என்னைச் சரித்து விட்டு கீழே இறங்கினார்.உள்ளே ஏறிய பிறகுதான் தெரிந்தது என்னைத் தள்ளி விட்டு இறங்கியமனிதர் டாஸ்மாக் அனுதாபி போல !.அரசின் இந்த வருட இலக்கை அடைவதற்கு உதவக் காலை ஏழுமணிக்கே தொடங்கிவிட்டார் போல ! . 

டிக்கெட் எடுத்து விட்டுப் புத்தகத்தை எடுத்தேன் .பாலகுமாரனின் - ”என்றென்றும் அன்புடன்” பல்சுவை மாத இதழில் 1997ல் எழுதிய 155 பக்க நாவல்.பொதுவாகவே பாலாவின் கடிதங்களில் அவர் கையெழுத்துக்குக் கீழ் கற்றுக்கொண்ட இந்த என்றென்றும் அன்புடன் வரிதான் என் எல்லாக்கடிதங்களிலும் பாலாவிடம் கற்றுக்கொண்ட இன்றும் தொடர்கின்றன.ஒருக் கடிதம் முடியும் போது இந்த வசீகராமான வார்த்தையை வெட்கமில்லாமல்காப்பியடிக்கக் கற்றுக்கொண்டேன் நான் .அப்போதெல்லாம் என்னைப் பாலகுமாரனின் நிழல்போல நினைத்துக்கொண்ட காலம் ! அவர் எழுத்தை மறுபேச்சிலாமல் பின்பற்றும் தருணங்கள் அவை.இப்போது மீண்டும் அந்த நாவலைப் படிக்கிறேன்.அவரே அந்த நாவல் தன் சொந்தக் கதை என்பதாகச்சொல்லியிருப்பார். 

அடங்காத வெறி !
அந்தக் கதை சொன்ன இரண்டு விசயத்தை நினைத்தால் இன்னும் வியப்பாக இருக்கிறது .ஒன்று அவர் இரண்டாவது மனைவியை வீட்டுக்குள் கொண்டுவர எழுதும் கதைக் கோணத்தில் தன்னைத் தன் புத்தியைப் பல கோணத்தில் ஆய்வு செய்துகொண்ட நுட்பம்.(எனக்கு இந்தப் புத்தகம் எப்படி அப்போதுபுரிந்தது என்பது ஆச்சர்யமக இருக்கிறது ) அடுத்தது அவருக்கு இருந்த ராஜராஜசோழனின் வாழ்வில் மேல் இருந்த அடங்காத வெறி ! அதுவே 2010 ல் ஆறுபாகம் கொண்ட 2733 உடையார் நாவலின் ஆணிவேர் இதைத் தினமலர் இணைய இதழில் அவரே சொல்லியிருக்கிறார்


கேள்வி : சோழதேசம் மீது ஏன் இந்தப் பாசம்? 
பாலகுமாரன் பதில்”உண்மைதான். அதுக்குக் காரணம் இருக்கு. கிருஷ்ணன்ராமனைப் பத்தி நான் திரட்டுனத் தகவல்கள் மூலமா, ராஜராஜனைப் பத்தினநிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். ராஜராஜன் எப்படியிருப்பான்? பெரிய கொண்டை, ஒல்லி உடம்பு, மீசை, கொஞ்சூண்டு தாடி... இதுதான்ராஜராஜன்னு, ஓவியங்கள் அடையாளம் காமிச்சது. அவன் வடித்தக் கல்வெட்டுக்கள் மூலமா, அவனோட மனசைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். சோழதேசத்தின் மீது எனக்குக் காதல் வர, ராஜராஜனும் ஒரு காரணம். ஒவ்வொரு ஊராகப் போய், சோழர்கள் பத்தின விபரங்களைத் தேட ஆரம்பிச்சேன்.சேர்த்து வைச்சிருந்த பணத்தை எல்லாம் இதுக்காகவே செலவுப் பண்ணினேன். அப்பதான் புரிஞ்சது. சோழ தேசத்து மேல எனக்கு இருக்கறதுக் காதல்அல்ல...வெறி!” 
பாதி நாவல் படிப்பதற்குள் பொள்ளாச்சி வந்து விட்டேன். 


அப்போதுதான் ஓர் ஆர்வக்கோளாரில் ராஜதுரைக் கல்யாணப் பத்திரிக்கை வைக்கிறேன் என்று சொல்லியும் வேண்டாம் என்று வசனம் பேசியதன்பிரச்சனையைச் சந்தித்தேன் மண்டபத்தின் பெயர் என்ன எங்கு இருக்கிறது ? மாப்பிள்ளைக்கே தொடர்புக் கொண்டேன்.மறுமுனையின் மாப்பிள்ளைத் தோழர்ச் சரோ பேசினார் .தொழிற்பேட்டை அருகே உள்ள சரோஜினித் திருமண மஹால் எனக் கேளுங்கள் நடந்து வந்து விடலாம் என்றார்.எதற்கும்கேட்போம் என்று அருகிலிருந்த பேருந்து நடத்துனரைக் கேட்டேன் .எந்தத் தொழிற்பேட்டை உடுமலைப்பேட்டை சாலையில் இருப்பதா என்று பதிலுக்குப்பயமுறுத்தினார்.விவரம் சொன்னேன் .அதுவா அது உடுமலைச் சாலையில் மின்நகரம் நிறுத்தம் என்று கேளுங்கள் என்றார் .நடந்து போகலாமா என்றஎன்னைப்பார்த்துச் சிரித்தார்.மூன்றுக் கிலோ மீட்டர் நடந்தே போக வேண்டுதல் இருக்கா ? .அது சரி . சத்தமில்லாமல் நகரப் பேருந்தில்ஏறினேன்.மின்நகரம் தாண்டியும் நடத்துனர் எதுவும் பேசவில்லை .சந்தேகப்பட்டுக் கேட்டதற்கு அடுத்தம் நிறுத்தம் என்றார்.மண்டபம் பேரையேகாணோம்.அதற்குப் பதிலாக வால் புட்டிப் பெயிண்ட் விளம்பரம் மட்டுமே பெரிதாக இருந்தது .

பெண் தனியார் பள்ளியில் ஆசிரியை என்பதால் கல்யாண மண்டபதிற்குப் பதிலாகப் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து விட்ட உணர்வு வரவைத்துவிட்டார்கள் . சமீபத்திய தீபாவளி வெளியீடு ஆடைகள் புது மடிப்புக் கலையாமல் ஆசிரியைகள் வலம் வந்தார்கள் . மாப்பிள்ளை ராஜதுரையுடன் படம்எடுத்துக்கொள்ள மேடையேறியப் போது என்னைப் பெண்ணிடம் இவர் என் அப்பா மாதிரி என்றார்.அதற்கு அவர்கள் என்ன வயசு குறைவா தெரியுது என்றார் .அதற்கு என்ன பதில் சொன்னார்த் தெரியவில்லை ! 

அங்கு வந்த இன்னும் சில நண்பர்களுடன் சாப்பிடப் போனோம் . அங்குச் சில ஆசிரியர்கள் மாணவர்கள் .வயது மூத்தவர்கள் விரல் விட்டுஎண்ணிவிடலாம்.இளமைப்பட்டாலம் எங்கும் நிறைந்து இருந்தது.எதுச் சொன்னாலும் க்ளு க்ளுக் என்ற சிரிப்பு வெடிகள் அமர்க்களப்பட்டது.மொத்தம் 50இருக்கைகள் மட்டுமே இருந்ததால் ஏற்கனவே சாப்பிட்டவர்கள் இலை எடுப்பதற்குள் உட்கார வேண்டிய நிர்பந்தம். 
அங்கு சில ஆசிரியைகள் நான் பார்த்த உடனே இவர் அறிவியல் பாடம் எடுப்பவர் இவர் கணக்குப் பாடம் எடுப்பவர் இவர் வரலாறுப் பாடம் எடுப்பவர்என்றதும் உடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்த நண்பர் எப்படிச் சொல்கிறீர்கள் என்றார் ஆச்சர்யத்துடன் . காரணம் சொன்னதும் சாப்பிட்ட உணவு மண்டையில் புறையேறச் சிரித்தார். 

விடைபெற்றுப் பேருந்து ஏறியதுவும் மீண்டும் என்றென்றும் அன்புடன் பயணம் தொடர்ந்தது. வீடு வந்துதான் முற்றியது. 

அந்த நாவலில் வரும் ராகவனும் நானும் சில விசயத்தில் ஒரே குணம் போலத் தோன்றியது .ஆமாம் .இதுதானே பாலகுமாரன் வெற்றி. 

திங்கள், 12 அக்டோபர், 2015

பிஞ்சுக்கால்களின் முள் பயணங்கள் !



குழந்தைகளுக்குத் தவறான விசயங்களைக் கற்பிப்பதில் நம்மைவிடவும் புத்திசாலிகள் யாரும் இருக்க முடியாது .பால் குடி மாறாத போதே பள்ளிச்சேர்க்கை விண்ணப்பப் படிவம் நிரப்பி வைத்துக் கொள்கிறோம். வயசு மூன்றரை வருகிறதோ இல்லையோ விஜயதசமிக்கு “ அ “ போட, அழைத்துக் கொண்டு போய் அடைத்து விடுகிறோம்.அப்புறம் தொடர் ஓட்டம் ... முதலில் நல்ல மார்க் எடுத்தால்போதும் என்போம் .பிறகு வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்போம் அப்புறம் மாவட்ட ,மாநில அளவில் இப்படியே விக்கிரமாத்தியன் கதை போல  கட்டளைகள் நீண்டு கொண்டே போகிறது  அவர்களுக்குக் கொடுத்து அனுப்பும் மதியம் உணவை அமுக்கி அனுப்புவதை விட அவர்கள் புத்திக்குள் வழிய வழிய ஏன் வழிந்து வந்த பிறகும்அமுக்கிக் கொண்டு இருக்கிறோம் கேட்டால் நாங்கள் கஷ்டப்பட்டோம் எங்கள் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற புலம்பல் அதோடு மட்டுமில்லைஇன்னொரு பகவத்கீதைப் போல நாங்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறோம் அவனைப் படிக்க மட்டும்தானே சொல்லுகிறோம் என்ற புலம்பல்பட்டியல் நீள்கிறது ..பெற்றோர்களை உங்கள் படிப்பு என்ன என்றால் மூனாம் கிளாஸ் என்கிறார்கள் .உங்களைப்போல நிறம் இருக்க வேண்டும் ,கலர் இருக்க வேண்டும் ,பல்லு மூக்கு எல்லம் அப்படியே இருந்தால் சந்தோசப்படுவீர்கள் ஆனால் அறிவின் வளர்ச்சியில் ஐன்ஸ்டீன் போல இருக்க வேண்டும் என்றால் அந்தக் குழந்தை என்ன செய்வான் ?அப்படியே பார்த்தால் கூட ஐன்ஸ்டீன் கூடப் பள்ளியிலிருந்து ‘எதற்கும் லாயக்கில்லாத பிள்ளை’ என்றுவெளியேற்றப்பட்டவர்.

நண்பர் சுகுமாரிடம் பேசிக்கொண்டு இருந்த போது , நாம் பிள்ளைகளாக இருந்துதான் பெரியவர்கள் ஆனோம் .இது நாம் பெற்றோர் ஆன பிறகு  அடிக்கடி மறந்து போகிறது .குழந்தைளுக்குன்னு ஒரு உலகம் இருக்கு அதில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது .நாமெல்லாம் முடிந்த அளவுக்கு படித்தோம் இப்போ நாமும் ஒரு இடத்தில் இல்லையா ? அவர்களை தொந்தரவு படுத்தாமல் விட்டாலே அவன் வழியை தேர்வு செய்து விடுவார்கள். அப்போது போய் உதவினால் போதும்  என்றார். அது மிகவும் சரிதானே ?  இப்படி நாம் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மன அழுத்தம் கொடுக்கும் பட்டியல் நீண்டு கொண்டே போனால்  பின்னாளில் புதுவித நோயாளிகளாக இந்த சமூகத்தில் வலம் வருவார்கள் அவ்வளவுதான் நடக்கும் !

மதிப்பெண் பட்டியலில் ரேங்க் பார்த்துக் கையெழுத்தும் போடும் நாம் பையன் ஒழுக்கம் பற்றியோ ,உடல் நலம் பற்றியோ. என்றாவது அதில் குறிக்கப்பட்டு இருக்கிறதா என்று கவலைப்பட்டு இருப்போமா ? சக மாணவர்களுடன் அவர்கள்  வைத்து இருக்கும் நட்புணர்வு எப்படி இருக்கிறது என்று என்றாவது பார்த்து இருப்போமா ? அவர்கள் என்ன உணவு உண்ண வேண்டும் , எப்படி விளையாட வேண்டும் ,விளையாட்டில் அவர்கள் விருப்பம் எது ? எதாவது தெரியுமா ? நம் வீட்டில் ஒரு புது ஜீவன் வளர்கிறது ஆனால் அதற்கு அதன் விருப்பம் எது என்று தெரியாமல்.இது நல்லதா ?நம் காரணங்களை அவர்கள் மேல் திணித்து எதிர்மறை எண்ணங்களின் விதைகளை அவர்களுக்குள் ஆழமாக விதைப்பதன் மூலம் வாழ்வே கஷ்டம் என்ற மன உணர்விலேயே அவர்கள் முள் செடியாய் வளர்வது அழகா?

இது பத்தாதுன்னு இப்போது இன்னொரு அபாயம் பரவி வருகிறது யோகா என்ற பெயரைச் சொல்லித் தனியார் பள்ளிகளில் மிகப்பெரிய ஸ்டால் போடாத குறையாகக் கூவிக் கூவி வியாபாரம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். ஆயிரம்கொடு ,ஐநூறு கொடு என்று பிள்ளைகளை  நச்சத் தயார் செய்து அனுப்பிவைக்கிறார்கள்  .

போன வாரம் என் பையன் இப்படித்தான் யோகாவுக்கு நான் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறேன் .வெளியில் போட்டி வைத்து இருக்கிறார்கள் பணம் வேண்டும் என்றான் நாழாவது படிக்கும் என் பையன் பள்ளியில் பணம் கட்டப் போனால், பணத்தை வாங்கிய பிறகு  இந்த போட்டிக்கும்  எங்களுக்கும் எந்தச் சம்ப்ந்தமும் இல்லை.நீங்கள்தான் ஞாயிற்றுக்கிழமைக் குறிப்பிட்ட இடத்திற்குக் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்றார்கள்.

போட்டி நடக்கும் இடத்திற்கு  பையனைக் கூட்டிப் போனால் எந்த ஒரு சரியான நிர்வாக ஒருக்கிணைப்பும் இல்லை . ஒரே கும்பல் மொச்சுகிறது கும்பலுக்கிடையில் மூன்று மேடை அதில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்புவரை ஒரு மேடை .நான்கு முதல் எட்டாம் வகுப்பு , அடுத்து ஒன்பது முதல் பனிரெண்ட்டாம் வகுப்புவரை . ஒவ்வொருமேடையிலும் மூன்று நடுவர்கள் கையில் மதிப்பெண் போட்ட பிரிண்ட்டடுப் பேப்பரை நடுவர்கள்  தங்கள் மதிப்பெண்ணைத் தூக்கிக்காட்டுவார்கள் பக்கவாட்டில் அவர்கள் ஜூனியர்கள் ( மாஸ்ட்டர்களின் மாணவர்கள் ) குறித்துக் கொள்வார்கள் .மேடையை விட்டு இறங்கியவுடன் ஒரு மெடல் ,சான்றிதல் தருவார்கள்  வாங்கிய பணத்துக்கு மனசாட்சிக்கு பதில் சொல்ல ஆறில் ஒரு பங்குச் செலவுசெய்து விட்டார்கள் .தேர்வு செய்யப்பட்டவர்கள் பின்னர் அழைக்கப்படுவார்கள் என்றார்கள் ( ஒரு வேளை விவேக் பாணியில் ’பின்னே காணும்’ என்பது போலவா? தெரியவில்லை  )

யோகா என்ற பெயரில் யோகா மாஸ்டர்கள் அசோசியேசன் மற்றும் பள்ளிகள் மூலம் ’அன்கோ’ போட்டு யோகாவை வளர்ப்பதாக சொல்லி அவர்கள்தான்  அமோகமாக வளர்கிறார்கள் அதன் மூலம் வரும் தொகையைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இது பற்றி எனது பையனுக்குப் பிரத்தியோக யோகா வகுப்பு எடுக்கும் ஆசிரியரைக் கேட்டேன் . அது ஏமாற்று வேலை சார் .சம்பாதிக்க இது ஒரு புதுவழி .இனி இதெல்லாம் நம்பிப் பசங்களைக் கூட்டிட்டுப்போய்த் தான் தேர்வு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தை விதைக்காதீர்கள் என்று எச்சரித்தார் . (அவரும் அந்த அசோசியேசனில் ஒரு முக்கிய உறுபினர்தான்)

சரி அப்படியானால் யோகா வேண்டாமா என்ற உங்கள் கேள்விக்கு  ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதிலைப் படித்தேன்  இந்த மாதிரி விசப்பரிட்சைகளைத் தவிர்க்க இதை தெரிந்து கொள்ள வேண்டும் . ( நமது வாழ்வில் யோகா என்ன செய்கிறது என்பதான கேள்விக்கு அற்புதமான ஒரு புத்தகம் படித்து வருகிறேன் - விரைவில் அதையும் பதிவு செய்ய வேண்டும் )

கேள்வி: குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து யோகாசனங்கள் கற்றுக் கொடுக்கலாம்?


சத்குரு: எட்டு, ஒன்பது வயது வரை நாங்கள் குழந்தைகளுக்கு ஆசனங்கள் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்குப் பதினான்கு, பதினைந்துவயது ஆகும் வரை நாம் எல்லா ஆசனங்களையும் கற்றுக் கொடுப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, இன்று பள்ளிகளில் குழந்தைகளுக்கு எல்லாயோகாசனங்களையும் கற்றுத் தருகிறார்கள். பத்மாசனம் போன்ற ஆசனங்களையெல்லாம் குழந்தைகளுக்கு, அவர்களுடைய எலும்புகள் இன்னும்வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கற்றுக் கொடுத்தால், அவர்களுடைய கால்கள் வளைந்து போவதற்கு வாய்ப்புண்டு. அவர்கள் அதையெல்லாம்கற்றுக் கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட வயது ஆக வேண்டும். அவர்களுடைய எலும்புகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைய வேண்டும்.அதன்பின்தான், அவர்களுக்கு ஆசனங்கள் கற்றுக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஈஷா யோகாப் பயிற்சி வகுப்பை நாம் ஏழிலிருந்து பதினான்கு வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தினாலும், அதில் கற்றுத் தரப்படும் ஒன்றிரண்டு ஆசனங்கள் மிக, மிகஎளிமையானவை. ஆனால் உங்கள் குழந்தைகள் யோகாசனப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எல்லாஆசனங்களையும் கற்றுத் தர ஆரம்பித்தால், அவர்கள் வளைந்த கால்களுடன், சிதைந்த மூட்டுகளை உடையவர்களாக ஆகிவிடலாம். ஏனென்றால்குழந்தைகளுடைய எலும்புகள் இன்னும் வளர்ந்துக் கொண்டும், உருவாகிக் கொண்டும் இருக்கின்றன. அந்தச் சமயத்தில் அவற்றின் மேல் அதிகமானஅழுத்தம் கொடுத்தால், பிரச்சனைகள் ஏற்படலாம்.
( http://tamilblog.ishafoundation.org/kundaliniyai-parisothikka-ninaithal/)


சனி, 10 அக்டோபர், 2015

மருத்துவமனைகளும் இன்னொரு ஆலயங்களே !



ரொட்டித்துண்டு 5 ரூபாய் !

பிரசவ வலியுடன் தவித்த மனைவியை இரவு பத்து மணிக்கு மேல் அவசர அவசரமாக அப்போதைக்குக் கிடைத்த ஆம்னி வேனில் அழைத்துகொண்டு அந்தத் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை ( ஈ.எஸ்.ஐ - Employees' state Insurance Corporation of India ) நோக்கிப் போய்க்கொண்டு இருந்தோம்.மனைவியுடன் வந்த பாட்டி பனிக்குடத்திலிருந்து நீர் வரத்தொடங்கி விட்டது கொஞ்சம் வேகமாகப் போங்கள் என்று எச்சரிக்க இன்னும் வேகமெடுத்தோம் .ஆம்னி வேன் ஓட்டுனர் ஐம்பது வயதைக் கடந்தவர் என்பதால் வேறு எதுவும் சொல்ல எனக்குத் தோணவில்லை.புரிந்து கொண்டு செயல்பட்டார். 

பனிரெண்டு மணிச் சுமாருக்கு மருத்துவமனைப் போய் விட்டோம் .பதிவுச் சீட்டு வாங்கி வரச்சொன்னார்கள் .ஓடினோம் .பதிவுச் செய்யும் அறைக்குப் போகும் வாசல் கதவு மூடியிருந்தது.தட்டியபோது ’கோன் ‘ என்று ஹிந்தியில்  அதட்டலாய் ஒரு குரல் வந்தது.நல்ல வேளை என்னுடன் வந்த நண்பனுக்கு ஹிந்தி மாலத்தெரிந்ததால், சமாளித்துப் பதிவு செய்து அங்கிருந்துத் தப்பித்து மருத்துவமனைக்குள் ஓடவும்,எதிரே பாட்டி வரவும் சரியாக இருந்தது ... 

இங்கு  இரவுப் பணிக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டும்தான் இருக்காங்களாம்.அதனால் அவசரமாப் பார்க்கணுன்னா அரசுப் பொது மருத்துவமனைக்கு எழுதிக் கொடுக்கிறார்களாம் அதுவும் உடனே அறுவைச் சிகிச்சைக்குச் சம்மத்தித்தால் எழுதிக்கொடுப்பதாகச் சொல்கிறார்கள் என்ன செய்யலாம் ?என்று பதஷ்டமாய்க் கேட்டார்கள் மனைவியின் பாட்டி தர்மாம்பாள். அவர்கள் பேத்திமார்க்களோடு சேர்த்து நூற்றுக்கு மேற்பட்ட சுகப் பிரசவம் ஆவதற்குத் துணைப் போனவர்கள் .அதுமட்டுமல்ல வேறு வழியில்லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களின் அவஸ்தை நன்கு உணர்ந்தவர்கள் .எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை அவர்களிடமே ,என்ன செய்யலாம் என்றேன் .கொஞ்ச நேரம் பார்ப்போம் அவள் தைரியமா ( மனைவி ) இருக்கா,ஒரு வேளை வலி வந்தால் எழுதி வாங்கிட்டுப் போயிறலாம் ஆனால் அதற்குள் பக்கத்தில் கார் எதுவும் இருக்கான்னுப் பார்த்து வைக்கச் சொன்னார்கள். ( தர்மாம்பாள் பாட்டி பற்றிய இன்னொரு பதிவு http://myowndebate.blogspot.in/2013/03/blog-post_9.html இருக்கிறது. )

இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் வெளுத்தும் வாங்கும் காற்றும் ,அது இல்லாத வேளையில் தாக்கும் கொசுக் கூட்டதிற்குப் பதில் சொல்லுவதிலேயும் நேரம் கரைந்து கொண்டு இருந்தது .பாவம் . கூட வந்த நண்பன் சங்கர்தான் , அங்குக் கிடந்த ஏதோ ஒரு செய்தித் தாளை விரித்துச் சுருண்டுப் படுத்துக் கிடந்தான்.அலுவலகத்தில் அவனோடு சண்டை நிறைய இருக்கும் .ஆனால் தூங்கும் போது யாரைப்பார்த்தாலும் பாவமாக இருக்கத்தான் செய்கிறது .காலை ஆறு மணிக்குள் மூன்று முறைப் பாட்டி வெளியே வந்து உள்ளே வேலைப் பார்ப்பவர்களுக்காகக் காஃபி வாங்கிவரச் சொன்னார்கள்.அப்போதெல்லாம் மனைவி பற்றி விசாரித்தபோது  தூங்கிக் கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். 

காலை 10:20 க்கு குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம் .அந்தச் சந்தோசம் ஒரு நாள் நீடித்தது .அடுத்த நாள் மதியம் வரை குழந்தைச் சிறுநீர்க் கழிக்கவில்லை செக்கப் வந்த மருத்துவரிடம் எதேச்சையாகக் கேட்டப் போது இதை ஏன் சொல்லவில்லை என்று கோபப்பட்டார்.அடுத்த நிமிடம் இன்குபேட்டரில் வைக்கச்சொல்லி எழுதிக் கொடுத்தார்கள்.இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பு இல்லை என்று எழுதி நிரப்பிய ஃபாரத்தில்  கையெழுத்துக் கேட்ட போது, வலியோடு போட்டேன் .

அடுத்த நாள் காலை திருப்பூர் வந்து ,மருத்துவமனை  கொஞ்சம் தாமதமாகப் போக, மனைவிக்குப் பாத்ரூம் போகத்தரும் வெண்ணீருக்காக இருபது ரூபாய்ப் பணம் கேட்டு இருக்கிறார்கள் அங்கு பணிபுரிபவர்கள் .சில்லறை இல்லை என்று சொன்னதற்காகத் திட்டிவிட்டு, பிரசவமானவர்களுக்குத் தரும் கோதுமை ரொட்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டர்களாம் . 

ஆண்டொன்றுக்கு ஈ.எஸ்.ஐ தொழிலாளிகளிடம் இருந்து பெறப்படும் மொத்தக் காப்பீட்டுத் தொகை வருமானம் 14,000 கோடியாம் .

ஆனால் ஒரு ரொட்டித்துண்டு 5 ரூபாய்

மருத்துவச் சேவைப் புரிபவர்கள் !

கடந்த வாரம் சனிக்கிழமை மாமானார் ( மனைவியின் தந்தை ) ஒரு சாலையில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டதால், ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.எனக்கு இந்த விசயம் சொன்னவுடன் நான் விசாரித்த அளவில் அந்த மருத்துவமனை சிகிச்சைப் பார்ப்பதை விட  மிக மோசமாகவும் பில்லை போடுவதில் மட்டும் கவனம் கொள்பவர்கள் என அறிந்து முதலுதவியோடு வெளியே வந்து குடும்ப மருத்துவரிடம் போன போது ,அடிபட்டப் போது மூன்று முறை வாந்தி எடுத்தார் எனச் சொன்னதும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டால் நல்லது. அரசு மருத்துவமனையில் சேர்த்து விடுங்கள் இரவு பிரச்சனை ஏற்பட்டால் எப்படிச் சமாளிக்க முடியும் என்றார் .உடனே அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப் போனோம் அங்கு உடனே பார்க்க முடியாது வேண்டுமானால் எழுதி வாங்கிக் கொண்டு கோவைச் செல்லுங்கள் என்றார்கள் ஏற்கனவே இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது .இங்கே பார்த்துக் கொள்கிறோம் .என்று சேர்த்தோம் . 

காலைதான் தெரிந்தது. ஞாயிறு ஸ்கேன் எடுக்கமாட்டார்களாம் .விடுமுறையாம். காத்து இருந்தோம் அடுத்த நாள் காலை ஸ்கேன் எடுக்கப்பட்டது .அதை வார்டுக்கு வரும் மருத்துவரிடம் கேட்டப் போது பொறுங்கள் இதற்கு வேறு ஒரு மருத்துவர் வருவார் என்று கழற்றிக்கொண்டார் அங்கு இருந்த நர்ஸ்களிடம் கேட்டப் போது வருவார் காத்து இருங்கள் என்றனர் அவர்களும்.  கடவுளைக் கேட்டால்கூடச் சொல்லியிருப்பார்கள் போல ! ஆனால் நடந்தது வேறு .அந்த நாள் மட்டுமல்ல அடுத்த நாள்  மதியம் வரை கூட யாரும் வரவில்லை .வேறு வழியில்லை டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு ,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கிளம்பினோம். 

அரசு மருத்துவமனை வராண்டா விட்டு  வெளியே வரும்போது அங்கு ஒரு அறிவிப்பைப் பார்த்தேன் “ மருத்துவமனைப் பாதுகாப்புத் தண்டனைச் சட்டம் எண் 48/2008ன் படி, அரசு மருத்துவமனைகளில் மருத்துவச் சேவைப் புரிபவர்களுக்குக் காயம் ஏற்படுத்துதல், உடல், உயிருக்குப் பாதிப்பு ஏற்படுத்துதல், பணிச் செய்ய விடாமல் தடுப்பது, சொத்துகளுக்குச் சேதம் உண்டாக்குதல் செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் ” 

அப்படியானால் நோயாளிக்கு யார் பாதுகாப்பும் இல்லையா ? 

இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ! 

எனக்கு ஒரு சமயம் சிறுநீர்த் தொற்று ( urinary infection ) ஏற்பட்டுவிட்டது .கொஞ்சம் வேலை அதிகம் என்பதால் முதலில் உடல் சூட்டினால் வந்ததாகக் கவனமில்லாமல் இருந்து உடல் சோர்வு மற்றும் குறையாத காய்சல் அதிகரிக்கவும் சந்தேகம் வலுக்கவே ஒட்டன்சத்திரம் - அம்பிளிக்கையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் அனுமதிக்கப்பட்டேன் . வழக்கம்போல ரத்த அழுத்தம் ,ரத்தம் மற்றும் சிறுநீர்ச் சோதனைக்கு அப்புறம் பிரத்தியோக மருத்துவரிடம் அனுப்பினார்கள் .அவர் உடனே பெட்டில் சேரச் சொன்னார்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறைச் சிறுநீர்ப் பரிசோதனை நடந்ததது .காய்ச்சல் நின்றபாடில்லை. இரவு அப்பாதான் கூட இருந்தார் எனக்கு நடக்கும் தொடர்ச் சோதனை மற்றும் குறையாத காய்ச்சலால் லேசாய் அப்பாவுக்குப் பயம் வரத் தொடங்கி விட்டது . 

காலை வந்த முதல் வேளையாக என் அறைக்கு வந்து மீண்டும் பரிசோதித்த மருத்துவர் முற்றிலுமாக அனைத்து மருந்துகளையும் மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டார். மதியத்திற்குள் மூன்று முறை என்னை நேரில் அவரே வந்து சோதித்தார் .அவர் முகத்தில் ஏதோ ஒரு கேள்வி இருந்தது .அப்பா அவரிடம் கேட்டே விட்டார்.சார் என்ன பிரச்சனை என்று . ஒரு நிமிடம் அப்பாவின் முகத்தைப் பார்த்த அவர் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் .இந்தத் தொற்றுக்கிருமியால்தன் இந்தப் பாதிப்பு என்பதைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்த அளவு போராடிக்கொண்டு இருக்கிறேன்.நீங்கள் பயப்படாதீர்கள் என்று தோளில் கைவைத்து அப்பாவை பார்த்துச் சொல்லிவிட்டு  , என்னைப்பார்த்தும் பயப்படாதீங்கக் குணமாக்கிடலாம் என்றார் .நர்ஸ்களைக் கூப்பிட்டுச் சில மாத்திரைகளை இருப்பில் இருக்கிறதா எனக் கேட்க்க சொன்னார் .காய்ச்சல் கொஞ்சம் விடைபெற்றது.மெல்ல , மெல்ல  என்னுடைய உடல் உணர்வு  திரும்பத் தொடங்கிவிட்டது . 

மதியம் மூன்று மணி இருக்கும்.திடீரெனெ என்னை வந்து பரிசோதித்தவர் கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப்  இருந்தது , கையில் எழுதிக் கொண்டு இருந்த பேனாவுடன் அப்படியே வந்து விட்டார் போல ! .நர்ஸ்ஸ்ஸ் என்ற அழைப்பின் அழுத்தத்தில் ஒரு புது உற்சாகம் இருந்தது.என்னைப் பெயரைச் சொல்லி அழைத்து , நீங்க கவலைப்படாதீங்க நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகிடலாம் என்றார் .அப்பாவிடம் , உங்க மகனுக்கு ஒன்னுமில்லை காலைல நீங்க அழைத்துச் செல்லலாம் என்றார் மீண்டும் . ஏற்கனவே கொடுப்பட்ட மருந்துகள் திருப்பிப் பெற .நர்ஸ்களிடம் உத்தரவிட்டார். அப்பா சந்தோசமானார் .

சொன்ன மாதிரி மதியம் இரண்டு மணிக்கு அறையைக் காலிசெய்துவிட்டு இரண்டரை நாள் சிகிச்சைக்கும் தங்கியிருந்ததற்கும் சேர்த்து ஐந்தாயிரம் பில் கொடுத்தோம். மருத்துவர் அறையில் அப்பாவுடன் போனேன்.சில நாளுக்கும் மட்டும் மாத்திரைக் கொடுத்தார்.சத்தான ஆகாரம் எது என்ற ஒரு பட்டியலைத் தந்தார்.  

விடைப் பெறும்போது சார் இது எதனால் வந்தது என்று அவரிடம்
கேட்டேன் .பதில் சொல்லாமல் அப்பாவைப் பார்த்தார் .ஐயா நீங்க ரெண்டு நிமிசம் வெளியே இருங்க என்றார் அப்பா வெளியே போன பிறகு , இது மூன்று காரணத்தால வரும் .தவறான தொடர்பு , பொதுக் கழிவரை உபயோகப்படுத்துவது ,மற்றவர்கள் உபயோகித்த உள் ஆடைகளை உபயோகிப்பது .நீங்கள் எதனால் பாதிக்கப்பட்டீர்கள் என்பது உங்களிடம் கேட்க வேண்டும் என்று நிறுத்தினார் .அப்போதுதான் எனக்கு அது ஞாபகத்துக்கு வந்ததது.அலுவலகம் தொடர்பாகப் பலமுறை கோவைச் சென்று வந்தேன் .அப்போது பொதுக்கழிவறை உபயோகித்து இருக்கிறேன்.அதைச் சொன்னதும் இனிமேல் தவிர்த்து விடுங்கள் என்றார் .விடபெற்று வெளியே வந்தோம் . அப்போது எனக்கு உடல் அசதியாக இருந்தது .ஆனால் மனம் இன்னும் சில நம்பிக்கைகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தது .

அந்த மருத்துவமனையை விட்டு வரவேற்பு அறையைக் கடக்கும் போது அப்பா அங்கு இருந்த ஒரு வாசகத்தை காட்டினார். 

 ” நாங்கள் மருந்தளிக்கிறோம் இறைவன் உங்களைக் குணப்படுத்துகிறார் ”. 

சமர்பணம் .

இது எனக்கான அனுபவம் மட்டுமே. எல்லோருக்கும் பொதுவானது அல்ல . எல்லோருக்கும் பொருந்தவும் வாய்ப்பும் இல்லை. மருத்துவம் தொழில் அல்ல சேவை .மருத்துவர்கள் நோயாளிகளின்  வாழ்நாளை அல்லது தலைவிதியை நிர்ணயிக்கும்  இன்னொரு  கடவுளர்கள் .இங்கு வெகு பல மருத்துவர்கள் தனது மருத்துவத் தொழிலைக் கடவுளுக்கு மேலாக மதித்து வருகிறார்கள் அவர்களுக்கும் அவர்களின் அன்புக்குடும்பத்தின்   பாதத்திற்கும் இந்தப் பதிவு சமர்பணம் .

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

காதலுக்காகக் காதலையே கொடு !



வெகு நாளைகுப் பிறகு மிக நெருங்கிய நண்பர் ஒருவரிடமிருந்து ஃபோன் . நாளைக்குத் திருச்சிவரைப் போகவேண்டும் கூட வர முடியுமா ? எனக் கேட்டார் . கேட்ட அவர் குரலில் ஒருவித அயற்சியும் சங்கடமும் கலந்து இருந்தது.எனக்குச் சமீபத்தில் இருக்கும் பொறுப்பு பற்றி அவருக்கும் தெரியும் இருந்தாலும் அவர் அப்படிக் கேட்பதில் அவருடன் நான் இருக்க வேண்டிய ஏதோ ஒரு அவசியம் இருக்கிறது .பதிலுக்கு அவரிடம் ஏதோ கேட்க நினைத்தேன் .ஆனால் உடனே சரி என்று சொல்லிவிட்டு என் வேலைக்குள் மூழ்கிப் போனாலும் வேறு ஏதாவது ஃபோன் வரும்போதெல்லாம் நண்பரிடம் எதற்கும் என்று கேட்டு இருக்கலாம் என்று பல முறை நினைவுகள் கரை மோதும் அலைகள் போல வந்து, வந்து போனது . 

என் நண்பர்கள் இப்படித்தான் .சந்தோசமாய் இருக்கும் போது விடவும் சங்கடமாக அல்லது முடிவெடுக்கும் தயக்கம் இருக்கும் போது என்னுடன் தங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவார்கள் .அது ஏன் என்பதை எனக்குள் கேட்டுக்கொள்வேன் .ஒரே பதில் அதைத்தான் நானும் விரும்பி இருக்கிறேன் என்பதாக எனக்கு என் மனது சொல்லி விடும் .இது இன்று நேற்று அல்ல 30 வருடமாகத் தொடரும் நட்பு ஊர்வலத்தின் தொடர்ப் பயணம் ... 

      திரைபடத்தில் ’எண்ட் கார்டு’ போட்டது சில நட்புக்கள் வேறு வித சூழ்நிலையால் கரை ஒதுங்கிவிடும் .பல வருடங்களுக்குப் பிறகும் ஏதாவது ஒரு சந்திப்பில் அதே நட்பு ஒரு வித பெருமூச்சுடன் மீண்டும் தத்தித் தத்தியாவது தொடரும்.இப்படித்தான் பல வருட இடைவெளிக்குப் பிறகு கூட என்னை விடச் சில வயது இளைய நண்பன் ஒருவன் ஊர் விட்டு வீடு தேடி வந்தான் .வந்த சில அரைமணிக்குள் வா மேலே போய்ப் பேச வேண்டும் என்றான்.மொட்டை மாடியில் காற்று வாங்க போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டுப் போனால் இரவு ஒன்பதுக்குத் தொடங்கிய பேச்சு ஒரு மணிக்கும் மேலும் நீண்டது .

      விசயம் இதுதான் .நண்பணுக்கு நல்ல சம்பாத்யம் .அற்புதமான மனைவி குழந்தைகள் ,நிறைவான வாழ்க்கை .இதெல்லாம் விட ஊரில் உள்ள எல்லாச் சிவாலயங்களுக்கும் தேடித் தேடிப் பண உதவி செய்பவன். இது அவன் இங்கு என்னைத்தேடி வரும் சில வாரங்களுக்கும் முன்வரை .இப்போது அவனுக்கு ஒரு சிக்கல் யாரோ ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டது இதற்குத் தான் காரணமில்லை என்பதான ஒரு புளுகு மூட்டை என் தோளில் ஏற்றி வைத்தாலும்,இதுத் தவறு என்று அவன் மனதில் உள்ளுணர்வுக் சதா கூக்குரலிட்டு இருக்கிறது.அதனால் அவனுக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள் எனத் தெரிந்து கொள்ள ஜாதகர்கள் ஒருவரிடமல்ல மூவரிடம் போயிருக்கிறான் எல்லோரும் ஒரே மாதிரி அவனுக்கு நடக்கும் தசா மற்றும் புத்திக்குப் பெண்களால் அவமானம் என்ற ஒரே ஒரு வாக்கியம்தான் சொல்லியிருக்கிறார்கள் .அந்தப் புயலில் சிக்கிய கப்பல்தான் என் வீட்டு வாசலுக்குக் கரையேற்றி என்னைத் மீண்டும் தேடி வரவைத்து இருக்கிறது .அதனால் நான் அப்படி ஆள்களுக்குக் குறிச் சொல்லுபவனோ குடுக் குடுப்பை ஆட்டும் ஆள் அல்ல .எல்லாச் செயலுக்கும் விளைவுகள் காத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லாதவன்.அது மட்டுமல்ல .எண்ணங்கள் எனபது விதை.யாரோ நினைத்தால் மட்டும் வளர்வதில்லை.செயல்படுத்த முடியாத அதற்குத் திராணியில்லாத பலரின் எண்ணங்களின் கொத்து எவன் கழுத்திலாவது மாலையாக விழுந்து யாரோ ஒருவனை மேடையேற்றி வேடிக்கப் பார்க்கும்! 

நாம் இப்படி இருக்கப் பல பேரின் நல்ல எண்ணமும் அதற்கு எதிரான எண்ணமுமே காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. என்பதால் அவன் பேசியதைக் கேட்டு விட்டு நான் சொன்னச் சில ஆலோசனைகளை அவன் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை .என் நோக்கமும் அதுதான். எது அவனுக்குச் சரி என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம்.சொல்லிவிட்டேன்.கேட்பது அவன் சொந்த விசயமே ! இதில் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவன் வாரம் ஒருமுறை போனில் பேசுகிறான் .தொடர்பு மீண்டுள்ளது. 

சரி திருச்சி விசயம்...

அடுத்த நாள் நண்பருடன் திருச்சி .போகும் போதும் எதற்கு போகிறோம் என்று அப்போதும் அவர் எதுவும் சொல்லவில்லை.நிறைய புத்தகங்களைப் பற்றிப் பேசினோம்.திரைப்படங்கள் ,சமீபத்திய வலைப்பூ பற்றிக்கூட பேசினோம் .ஆனால் எங்கு போகிறோம் என்பது மட்டும் சஸ்பென்ஷாக நீண்டுகொண்டே போனது .ஆனால் அவர் தூக்கம் வருகிறது என்று திருச்சிக்கு சென்றைடையும் அரை மணி நேரம் முன்பு தூங்க துவங்கி விட்டார்.அப்போது அவர் இத்தனை நேரம் பேசிய பேச்சுக்களில் பொதுவான ஒரு ஒற்றுமை  இருந்தது உணர்ந்தேன் .அது மிகவும் எதிர்மறையான அதே சமயம் காதல் தோல்விகள் பற்றி இருந்தது.


மதியம் ஒரு மணி திருச்சி வந்துவிட்டது .மன்னிக்கவும் .நாங்கள்

திருச்சிக்கு வந்து விட்டோம்.அவரை மெல்ல எழுப்பினேன். இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து பத்து நிமிடம் பயணித்து ,ஒரு வீட்டு முன் வண்டி நின்றது. வாசலில் நிறைய இரண்டு சக்கர வாகனங்களும் கார்களும் நின்று இருந்தன .சில சேர்களில் உதிறிகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் .ஹோட்டல் ஆட்டோ ஒன்று மதிய உணவு இறக்கிக் கொண்டு இருந்தது.ரசம் வாசனை லேசாய் சுண்டி இழுத்தது.நண்பர் தயங்கி தயங்கி முன் சென்றார்.நிறைய செருப்புகள் வாசலை நிறைத்து இருந்தன.சின்ன வயது பிள்ளைகள் துரத்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள் வழக்கம் போல பெரியவர்களின் அதட்டலோடு.


             நண்பர் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த பெரியவரைப் பார்த்து வணக்கம் சொன்னார்.பெரியவர் ஏற்கனவே பேசிக்கொண்டு இருந்தவருக்கு விடைக் கொடுத்து விட்டு,எங்களைப் பார்த்துத் திரும்பி, நண்பரை உற்றுப் பார்த்து நீங்க...என்று லேசாய் இழுத்தார்.நண்பர்த் தன் அண்ணன் பெயரைச் சொன்னார்.உடனே பெரியவர் முகம் பிரகாசம் ஆகி .அடடே நீங்களா என்று கைகளைப் பிடித்தார்.அடுத்த சில நொடிகளில் அவர் முகம் சோகம் தொற்றிக்கொண்டதைக் கவனித்தேன்.உள்ளே போய் அவளைப் பார்த்து விட்டு வாங்க என்றார்.நண்பர் என்னைப்பார்த்து .இவர் சாந்தி அப்பா என்றார் நண்பர் .நான் யார் சாந்தி என்று யோசித்துக் கொண்டே அவருக்கு வணக்கம் சொன்னேன்.எனக்கும் வணக்கம் சொன்னவர் நண்பரைப் பார்த்துக் கூட்டிடு .உள்ளே போங்க என்றார் மீண்டும். 

வாசலைக் கடந்தவுடன் பெரிய ஹால் வரவேற்றது .அங்கும் பல பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் .ஆச்சர்யமாய் மெல்லப்பேசிக்கொண்டு இருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஹாலின் மையப்பகுதியைக் கவனித்தேன். ஒரு டீபாய் போன்ற மேசையில் துணி விரித்து அதன் மேல் ஒரு ஆணின் போட்டோ வைத்துப் பெரிய மாலைப் போட்டு ,அதற்கு முன் இரண்டு விளக்கும் ,ஒரு விபூதித் தட்டும் இருந்தது.போட்டோவில் அந்த நபர் அல்லது உருவம் சிரித்துக்கொண்டு இருந்தது.

எங்கள் இருவரையும் அங்கு இருந்த சில பெண்கள் யார் என்பது போலப் பார்த்தார்கள்.நண்பர்ப் போட்டோவையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.நான் மெல்லச் சுவற்றின் மற்றொரு பெரிய குடும்பப் போட்டோவைப் பார்த்தேன் .அதில் இங்குச் சிரித்துக் கொண்டு இருக்கும் மனிதரும் அவரோடு அந்த ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தனர். அந்தப் பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன்.எங்கே ?எனது ந்யுரான்கள் சாந்தி என்ற பெயரோடு பல முகம் தெரியாதவர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொண்டு இருந்தது. 

அப்போது, எங்களுக்குப் பின்னால் இருந்து வாங்க என்று நண்பர் பெயரைச் சொல்லி அழைத்த பெண் குரலைப் பார்க்கத் திரும்பினேன். 
இந்தப் பெண் ,இந்த முகம், சாந்தி . 
எஸ். 
நண்பரின் காதலி. 
அந்தக் குடும்பப் போட்டோவில் இருக்கும் பெண் இவள்தான் .அப்படியானால் அவள் கணவர் இறந்து விட்டார். 

எனக்கு உள்ளே சொரேர் என்று ஒரு கத்தி இறங்கியது போல இருந்தது !

சுமார் 15 வருடம் இருக்கும் .சாந்தியை நண்பரின் அண்ணன் வீட்டு விசேசத்தில் அண்ணிக்கு நட்பான இந்தச் சாந்தியைப் பார்த்த நண்பரின் அம்மா உடனே பிடித்துப்போக இந்தச் சாந்தியைப் வீட்டுக்கு அழைத்து விருப்பம் நண்பருக்குத் திருமணம் செய்யும் தன் ஆசையைச் சொன்னார்கள்.அவர்கள் வீட்டில் நண்பரின் அண்ணி இதை நேரில் தெரிவித்தபோது அப்பா உடனே சம்மதித்தார்,அம்மா மெல்லத் தயங்கினார்.அம்மாத் தயங்கியதன் காரணம் எதுவெனெ அப்போது புரிந்து இருந்தால் சாந்திக்கும் நண்பருக்குமிடையே காதல் என்ற ஒரு மாயவலைப் பின்னப்படாமலேயே போயிருக்கும். 
வீட்டின் சம்மதத்தோடு இருவருமே காதல் காதல் யாத்திரைத் துவங்கி விட்டார்கள் .எங்கள் நண்பர்கள் சிலர் அப்போது காதலித்து இருந்தாலும் திருமணம் வரை போகும் நிச்சயக்காதல் என்று நண்பரின் காதலை நாங்கள் பெருமையாகக் கொண்டாடுவோம். 

ஆனால் நண்பருக்கு வெளியூரில் வேலை மாற்றம் ஆனப் பிறகும் அந்தக் காதல் சில ஆண்டுகள்தான் வெகு ஆரோக்கியமாகப் பூவும் பிஞ்சுமாக நீடித்தது.ஆனால் சாந்தியின் தாய் மாமன் என்ற புயல் ஒன்று குறுக்கே வந்து கலைத்துப்போடும் வரைதான் அது நீடித்தது. 
சாந்தியின் அம்மாவின் உடன் பிறந்த சகோதரன்தான் இப்போது நடுவீட்டில் சிரித்த போட்டோவாகிப் போன தாய்மாமன் ராஜா.பெயருக்கேற்றார் போல ராஜாவாகச் சுற்றினார்ப் பத்தாததற்கு நல்ல சம்பாத்யம் .ரியல் எஸ்டேட்,ஹோட்டல் எனப் பணம் குவிந்துகொண்டு இருந்தது .ஆனால் சாந்தி வீடு விவசாயம் .பெரிய வசதியில்லை .அதனால் தனது தம்பியைக் கட்டிவைத்தால் தனது மூத்த பெண் நல்லா வாழ்வாள் என்ற எல்லாத் தாய்மாரின் கனவுச் சாந்தியின் அம்மாவுக்கு இருந்தது.சாந்தியின் அப்பாவுக்கு இதில் கொஞ்சமும்.விருப்பமில்லை.அவர் அந்தக் குடும்பத்தை விட்டு விலகியே இருந்தார்.காரணம் ராஜாச் சின்ன வயதிலேயே சம்பாதிக்கும் சூத்திரம் தெரிந்ததால் அவனை வெற்றி மிதப்புக் குடிப்பழக்கத்தில் தள்ளியிருந்தது.அதுவும் பந்தயம் கட்டி ஒரு ஃபுல் பாட்டிலை எவ்வளவு சீக்கிரம் ’ராவா’ (எதுவும் கலக்காமல்) குடிக்கிறேன் என்று போட்டிப் போட்டு ஜெயிப்பவன் ராஜா.இளம் வயதில் காசு சம்பாதிக்கத் தெரிந்தவர்கள் நிறையப் பேரின் நிலை இப்படித்தனோ? 

      சாந்தியின் அம்மாவுக்கு அந்தக் காதல் வலுவான அடித்தளம் போட்டு வருவதை லேசாய்க் கண்டித்து வந்தார் .சாந்தி உறுதியாய் இருந்தாள்
நண்பர் வெளியூரில் இருந்ததும்,சில விசேசங்களில் ஒன்று கூடிப் பேசிச் சில திட்டங்கள் தீட்டித் தம்பியை அடிக்கடி வீட்டுக்கு அழைப்பதுவும் ,பழக வைத்தார் சாந்தி அம்மா .ராஜா நிறையச் செலவுச் செய்தான் .அதுவும் குறிப்பாய்ச் சாந்திக்கு . ஆரம்பத்தில் வேண்டாம் என மறுத்த சாந்தி அம்மாவின் சொந்தம் என்பதுவும் ,சாதாரண வீட்டுச் சூழலில் வளர்ந்துவிட்டு நிறையச் செலவு செய்து, தாய் மாமன் ,புடவை ,நகை என அடுக்கியதில் அதை அன்பாகப் புரிந்துக் கொண்டாள் .மெல்ல அவள் மனதில் அவள் அம்மா நினைத்த நீரூற்றுப் பெருகத் தொடங்கியது..ஒருப் பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பது அப்போது எங்களுக்குப் புரியவைத்தது சாந்தி அம்மாதான் 
       இதைச் சாந்தியே நண்பருக்குக் கடிதமாக எழுத ,நண்பர் மனதளவில் விலகத் துவங்கினார் .நாங்கள் பேசிப் பார்ப்போம் என்றோம் .அதற்கு அவர் சொன்னப் பதில் ,எதுவேண்டுமானாலும் பேசிப் புரிய வைத்து விடலாம் நாழுச் சுவருக்குள் ஒன்றாய் வாழும் ஆண் பெண்ணுக்கிடையே உள்ளக் காதல் பேசிப் புரியும் விசயமல்ல.அவளுக்கு அதுதான் பிடிக்கும் என்று தெரிந்தப் பிறகு நாம் பேசித் திசை மாற்றினால் அந்த வாழ்க்கைப் பயணமாக இருக்காது சுமையாகத்தான் இருக்கும் விட்டு விடுங்கள் அவளை விரும்பிய எனக்கு அவள் விரும்புவதையும் மதித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார். 

      அதற்கு பிறகு சில மாதங்களில் அவசர அவசரமாக அதே ஜோரில் திருமணமும் முடித்து விட்டார்ச் சாந்தி அம்மா.அவர் கணவர் வேண்டாம் உன் தம்பி குடும்பதிற்கு ஆகாதவர்கள் என்று எவ்வளவோ தடுத்தார் .காசுதான் முழு வாழ்வின் அர்த்தம் என்று நம்பிய சாந்தியும் ,அவர் அம்மாவும் அவரைத் தோற்கடித்தார்கள் .பெரிய வீடு, நகை,கார், பைக் எனச் செல்வம் கூரையைப் பொத்துக்கொண்டும் கதவை,ஜன்னலைத் திறந்துகொண்டும் பீரோவை நிரப்பியது.சொந்தமெல்லாம் ஒவ்வொரு விசேசத்திலும் செய்முறையில் அசந்துப் போனது. .

செல்வம் எப்படி வந்தது என்பதை யாருக் கேட்கவில்லை.ஆனால் எப்போதும் போலக் கட்டுசோறுக்குள் பெரிச்சாளி போல ராஜாவின் குடியின் அளவுக் கொஞ்சமும் குறையாததால் மெல்ல எமன் யாருக்கும் சொல்லாமல் பாட்டில் வழியாக நுழைந்து ராஜாவின் கிட்டினியில் போய்த் தஞ்சம் புகுந்தார்.ஒரு சமயத்தில் ஒரு சேர இரண்டு கிட்டினியும் செயல் இழந்தது.இதில் பெரிய வெடிக்கை என்னவென்றால் சொந்தமெல்லாம் கிட்னித் தர மறுத்த போது சாந்தி நண்பரிடமும் கேட்டு இருக்கிறாள் .எங்களுக்குத் தெரியாமல் அவரும் தரச் சம்மதித்து விட்டார் ஆனால் வீட்டாரின் சம்மதம் கேட்டப் போது அவர்கள்  மறுத்து விட்டார்கள்.இதை அண்ணியிடம் சொல்லி சாந்தி ஒருமுறை வருத்தப்பட்டாளாம் ! 
 

இதனால் வேறு வலியில்லாத சாந்தித் இதே மாதிரி பிரச்சனையில் உள்ள ஒருவருக்கு தன் கிட்னியை வேறொருவருக்குக் கொடுத்து அவர் குடும்பத்தில் ஒருவர் கிட்னியை ராஜாவுக்குப் பெற்றுக்கொண்டாள்.ஆனால் அதுவும் ராஜாவின் உடல் தன்மைக்குப் பொருந்தவில்லை அதுவும் செயல் இழக்க, வீட்டிலேயே டயாலிசிஸ் அமைத்துக்கொண்டார்கள் ஆனால் அப்போது யாரும் அறியாமல் கிட்னியில் தங்கியிருந்த எமன் மெல்ல இன்ஃபெக்சன் என்ற தொற்று மூலம் மூளைக்குபோய் யாருக்கும் தெரியாமல் தஞ்சம் புகுந்து ராஜாவின் மரணத்திற்கு நாள் குறித்து விட்டார். 

 இன்று ராஜாவுக்குப் பதினாறாம் நாள் . சாந்தியை இந்தக். கோளத்தில் சந்திக்கும் மன தைரியம் இல்லாத நண்பர் இங்கு வருவதற்கு மிகப்பெரிய தயக்கம் இருந்ததால் என்னை அழைத்து வந்து இருக்கிறார்
நாங்கள் இரண்டு பேரும் போட்டோவைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு விபூதிப் பூசிக்கொண்டோம்.மெல்ல அங்கு அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தோம்.

சாந்தி எதிரில் போட்டோவுக்கு அருகில் உட்கார்ந்தாள் .அவள் முகத்தில் நண்பரின் பல கேள்விக்குப் பதில் இல்லை.ஆனால் நண்பருக்குத் தெரியாத பல விசயங்கள் சாந்தி முகத்தில் இருந்ததாக நான் நினைத்தேன் .

வெகு நேரம் இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை . நண்பர் அடிக்கடி அவர்கள் குடும்பப் போட்டோவை அண்ணாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார், அங்கு அந்த வழியாக வந்த ஒரு பெண்ணை நிறுத்திய சாந்தி, இவள்தான் மூத்தவள் பி.ஈ பண்ணுகிறாள் என்றாள் .

அந்தப் பெண் வணக்கம் அங்கிள் என்றது நண்பரைப்பார்த்து .நண்பர் முகம் வெகுவாக மாறியது.

ஒரு அரை மணி நேரம் கழித்து கம்பெனியிலிருந்து ஒரு போன் ’வைபிரேசன்’ மூடில் அதிர்ந்தது . அவர்கள் வீட்டுக்கு பின் பக்கம் போய் பேசலாம் என்று  போனேன் .அங்கு வீட்டுக்கு மேலே மாடி செல்ல பின் வழிப்படி இருந்தது .ஆனால் யாரும் பெரிதாய் உபயோகிப்பது மாதிரி தெரியவில்லை .அந்த படிக்கு அருகில் கீழே நின்று பேசலாம் என்று போனை ஆன் செய்யும்போது அந்த படிகளில் ஓரத்தில் சாந்தியின் மகள் உட்கார்ந்து இருப்பதுவும் போனில் சுவாரசியமாக, முகம் பிரகாசிக்க சாட் செய்து கொண்டு இருந்தது தெரிந்தது . வெளியிலிருந்து பார்த்தால் சுலபமாக தெரியாத இடம் அது. என்னைப் பார்த்ததும் மெல்ல ஒரு புன்னகை செய்து விட்டு .மீண்டும் அவசரமாக செல்லுக்குள் விட்ட இடத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டது அந்தப்பெண். 

மீண்டும் போன் பேசிவிட்டு உள்ளே வந்தேன்.

 தாழ்ந்த குரலில்  சாந்தி யாரோ ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.
 என்னிடம்  பல பேர் வந்து செய்முறைகள் செய்யவும் , பணம் வைத்துக் கொடுக்கவும் துணியெடுத்துக் கொடுக்கவும்  கேட்டார்கள்  என் வீட்டில் அவரே இல்லை நீங்கள் துணி எடுத்துக் கொடுப்பதும் ,விருந்துப் போடுவதும் செய்தால் ஒரு நாள் உங்கள் வீட்டிலும் நான் திருப்பி செய்ய வேண்டி வரும் அது என்னால் முடியாது எனவே வேண்டாம் கோவித்துக்கொள்ளாதீர்கள் என்று பக்குவமாய்  சொல்லி அனுப்பி விட்டேன்  என்றாள்.

சாந்தி சொன்னதை நண்பர் கேட்டாரோ இல்லையோ தெரியவில்லை. 

காலம் எனும் சதுரங்கம் நமக்கு  எவ்வளவுதான் பாடம் நடத்தினாலும்,நாம் அதை புரிந்து கொள்ளாமல் சதா காலத்தையே ஏமாற்றக் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறோம் !

வியாழன், 3 செப்டம்பர், 2015

எதிரணிக்கும் நடுவர்



பொதுவா நம்ம லோக்கல் அணிகளில் கார்க் மற்றும் ரப்பர்ப் பந்துக் கிரிக்கெட்டுக்கு உப்புக்குச் சப்பாணியைத்தான் அம்பயரா நியமனம் செய்வது வழக்கம் .ஆறு கல்லைப் பெறக்கிக் கையில் வைத்துக் கொண்டு பௌலிங் கிரீஸ் கோடு போட ஒரு குச்சியை வைத்துக் கொண்டு,அதே குச்சியில் ஓவர் கணக்கும் எழுதிக் கொள்வதும் முக்கியமான வேலைகள் ! .ஆனால் கிரீஸ் நோ பால் கொடுப்பது அடிக்க முடியாத அல்லது அடிக்கத் தெரியாத பந்துக்கெல்லாம் வைடுப் பால் என்று கூச்சலிடும் பேட்ஸ்மேன்களை சமாளிப்பதும் ,சில சமயத்தில் லெக் அம்பயர்ன்னு ( எதற்கும் அணியில் பயன்படாத உப்புக்குக் கூட இல்லை ஒப்புக்குச் சப்பாணி ) இல்லாத போது அவன் வேலையும் சேர்த்துப் பார்த்து .நெஞ்சுக்கு வரும் சாதரண ஃபுல் டாஸ் பந்தைத் தூக்கி அடித்து,அவுட் ஆனதும் நோ பால் கேட்டு வெளியே போக மறுக்கும் பேட்ஸ் மேன்களிடம் தாவுத் தீர்க்கும் வேலைதான் மிகக் கஷ்டமான நடுவர் வேலை .

 அந்த வேலையை நான் பார்க்கப் போனது கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டதை விடப் பெரிய விபத்து .ஒரு சமயம் நாங்கள் அதிகம் விளையாடும் அல்லது அனுமதிக்கப்படும் திண்டுக்கல் பப்ளிக் ஸ்கூல் கிரவுண்டில் எனக்குக் குறி வைத்து விக்கெட்டுக்கு அழகாக வீசப்பட்ட பந்தை ஏறி அடிக்கிறேன் என்ற பெயரில் முன்னேற, பந்துத் தாடையைப் பதம் பார்த்தது சாதாரண அந்தப் பந்தை வீணாகப் பாடி லைன் (Bodyline) பந்தாக்கி ஒன்றரை இன் சதைக் கிழிந்து ரத்தம் வந்து நிற்கவில்லை.ஃபேமிலி டாக்டரிடம் போனால் வீட்டுக்கு விசயம் போய் விடும் .மெனெக்கெட்டு டாக்டரே காரை எடுத்துக்கொண்டு நேரில் போய்ச் சொல்லிவிட்டுத்தான் அடுத்தப் பேசண்டைப் பார்க்கப்போகும் அளவுக்கு நல்ல மனுசன் அவர் .எனவே ஜி ஹெச் போனோம் .அங்கு நண்பர் வரிசையில் நின்றுச் சீட் வாங்கி ,டாக்டரைப் பார்த்து,அவர் இன்னும் கொஞ்சம் இழுத்துக் காயத்தை இரண்டு இன்ஞ்சாக மாற்றித் தையல் போட அனுப்ப (அங்கும் கெட்ட நேரம்) ஒரு ஆண் உதவியாளர் மிகச் சாவதானமாகப் பக்கத்திலிருப்பவரிடம் விலா வாரியாகப் பேசிக் கொண்டே வலிக்க வலிக்கத் தையல் போட்டார் .அசங்கதப்பா தையல் விழாது என்ற அலட்டல் வேறு வலியை விடக் கடுப்பேற்றியது .ஒரு வழியாய்த் திருப்பி அடுத்த வாரமும் விளையாடப் போனால் எல்லாப் பந்தும் தாவாங் கொட்டைக்கு வீசப்படுவதாக ஒரு பிரம்மை அடிக்கடி வந்தது .( எல்.பி.டபில்யூ இல்லாததால் ) எப்போதும் போல்டாகாமல் பட்டோடி நவாப்புக்கு இணையாக விளையாடும் நான் (!) அன்று பார்த்து விக்கேட்டே எடுக்காத ஒரு ஸ்பின்னரிடம் இரண்டடித் தூரம் ஸ்டிக் பறக்க, வெளியேற்றப்பட்டேன்.

அன்றைக்குப் பார்த்து அந்த வழியாகப் போன இன்னொரு டீம் மேட்ச் கேன்சலாகி எங்களோடு விளையாடக் கேட்க எங்கள் டீமில் நல்ல அற்புதமான ஆல் ரவுண்டர்கள் இருந்தாலும் இன்று திண்டுக்கல்லில் மாதா எலெட்ரானிக்ஸ் உரிமையாளரக இருக்கும் செல்வராஜ் ,ராபர்ட் சகோதரர்கள் ,எலும்பு மூட்டுச் சிகிச்சை மருத்துவர் ஐயப்பன் டாக்டரின் தம்பி கார்த்தி ,எல் ஐ.சி ஏஜென்ட்களின் செயலாளார்க் கணபதி ,வெங்கடேஸ் சைக்கிள் மார்ட் வெங்கடேஸ் ,சென்னையில் இப்போது சுகாதாரக் கண்காளிப்பாராகக் கோவிந்தராஜ் ,பின்னாளில் வெறும் கேட்டரிங் மட்டுமே படித்து அமெரிக்கக் கப்பலில் உலைகையே வலம் வந்த சதீஸ் போன்ற எல்லோரும் எங்கள் அணீயின் தூண்கள். ஆனால் பலரும் அணியில் ஒரு பொழுதுப் போக்குக்காக விளையாடுவதால் அடுத்த அணியுடன் சீரியஸாகப் போட்டியில் போராடுவதை விரும்பாதவர்கள் .அதிலும் முக்கிய இடங்களில் இருப்பதால் சின்னப் பையன்களுடன் போட்டியிட்டு முடிவு (சென்னை 600028 படத்தில் வருவது மாதிரி) ஊத்திக் கொண்டால் என்ன செய்வது என்று ஒரு பயமும் அப்புறம் எதாவது அழுகுனி ஆட்டம் ஆடிச் சண்டை வந்து விடும் போன்ற இத்யாதிக் காரணங்களால் வெளி அணிகளுடன் பொதுவாக ஒத்துக் கொள்வதில்லை ஆனால் அன்று அப்படி விட முடியவில்லை .காரணம் எங்கள் அணியிலே பலரும் வரவில்லை .எனவே பால் மேட்சுக்கு ஒத்துக் கொண்டோம் .

டாஸ் வெற்றிப் பெற்றுப் புது அணியுடன் மோதுவதாலும் எங்களுக்கு இது பழக்கபட்டப் பிட்ச் என்பதால் பந்து வீச்சைத் தேர்வு செய்தோம் பொதுவாக இடக்கைப் பந்து வீச்சாளனான எனக்கு இருபது ஓவர் மேட்ச்சுகளில், எட்டு ஓவருக்குப் பிறகுதான் பந்து வீசும் வாய்ப்பு வரும் அதுவும் முன்னனிப் பவுலர்கள் அல்லது டீம் கேப்படனுக்கு நெருக்கமான எதுக்கு வீசுகிறோம் என்று தெரியாத சில பவுலர்கள் எதிர் அணியிடம் அடி வாங்கி நல்ல ரன் கொடுத்துப் பேட்ஸ்மேன்களை ஃபாமுக்குக் கொண்டு வந்த பிறகு எனக்கு (அடி வாங்க) பந்து வீச்சுத் தருவது வழக்கம் .அன்று அதனால் என்னை நடுவராக அணி நிற்கச் சொன்னது என் அணி .கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது .பொதுவா நான் உலகக் கிரிக்கெட்டில் கூட எந்த நாடு விளையாடுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள மாட்டேன் அவர்கள் எப்படி வியூகம் வகுத்து ஒருங்கிணைந்துப் போட்டியை நகர்த்துகிறார்கள் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வேன் .அப்படி இருக்கும் நான் விளையாட்டு ஆர்வத்தில் எத்தனை பந்துகள் போடுகிறார்கள் ,மொத்தம் எத்தனை ஓவர் போடுகிறாகள் ,ஒரு ஆள் எத்தனை ஓவர் போடுகிறான் ,ரன் அவுட்டுக்குப் பக்கவாட்டுக்கு நகர்வது ,கையில் இருக்கும் பந்து வீசும் கணக்குக்குக் கை மாற்றிக் கல் வைத்துக் கொள்வது முடியுமா என்று தெரியவில்லை என்பதே என் பயத்திற்கான காரணம் .அதை விட என் அணி ஆள்களிடம் கெட்டப் பெயர் வந்து விடக் கூடாது என்ற சட்டச் சிக்கல் வேறு இருக்குதே.

ஆனால் Think Of the Devil and there He Appears என்ற வாஈயம் எனக்காக்காவே எழுதப்பட்டது போல ! ஐந்து ஓவர் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை .நானும் என்னை ஏதோ இரு அணிகள் விளையாடுவதாகவும் அதற்குத் தேர்வு ஆனால் ஆறாவது ஓவரில் அந்த டீம் எங்கள் பந்து வீச்சாளார்களைக் கணித்து விட்டது .அடித்து ஆடத் தொடங்கி விட்டார்கள்.ஏழாவது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த ஒரு பையனக்கு எங்கள் அணி ஒரு ரன் அவுட் கேட்க நான் மறுத்து விட்டேன் .ஒன்பதாவது ஓவரில் அந்த அணியின் ஸ்கோர் 43.விக்கெட் ஒன்று கூடப் போகவில்லை .எங்கள் பந்து வீச்சாளர்களைப் பதம் பார்த்துக் கொண்டு இருந்த நேரம் அதே நல்ல பேட்ஸ் மேன் தலைக்கு மேல் வந்த பௌன்சரைத் தூக்கி அடிக்க எல்லைக் கோட்டில் கேட்ச் ஆகும் முன்னே ,யாரும் கேட்க்காமல் நோ பால் என்று கூவி விட்டேன் .ஏதோ ஒரு அற்புதமான டைமிங் சென்ஸ் என்று என்னை நான் வியந்து கொண்டு இருக்கும் போது எங்கள் கேப்டன் என்னை முறைத்துக் கொண்டு இருந்த எங்கள் பவுலரைச் சமாதானப் படுத்தி அனுப்பி விட்டு , என் அருகே வந்து நோ பால் கொடுத்தது தப்பில்லை .அது அவர்களே கேட்க்கவில்லையே கிருஷ்ணா என்று மனசு நொந்தது போலக் கேட்டார் .அது தப்புதான் என்று என் புத்திக்கு உறைக்கும் முன் பத்தாவது ஓவரில் எனக்குப் பந்து வீசும் வாய்பு என்ற பெயரில் மெல்ல நடுவர் பதவியிலிருந்து கழட்டி விட்டு ஃபீல்டிங்கில் நிறுத்தி 13 ஆவது ஓவர் கொடுத்தார்கள் .

மன நிலைச் சரியில்லாமல் பந்து வீசப் போய் முதல் பாலுக்கு லெஃப்ட் ஆர்ம் அரவுண்ட் ஸ்டிக் என்று சொல்ல மறந்து விட்டேன்.கிரிஸ் நோ பால் கொடுத்து நானும் டேவிட் செப்பர்டுதான் என்று என் அணிக்காரர் நிரூபித்தார். நோ பாலுடன் ஏழு பந்து வீசி மூன்று ரன் கொடுத்தேன் .ஆனால் என் சகப் பந்து வீச்சாளார்கள் எட்டாவது வள்ளலாக ரன் கொடுத்தும் ,எனக்கு வாய்ப்புத் தரவில்லை .ஆனால் என் மீதான என் அணியின் கோபத்தை என் அணிக்காரகள் கவனித்தார்களோ இல்லையோ எதிரணியின் துணைத்தலைவன் கவனித்துக் கொண்டே இருந்து இருக்கிறான்.ஒரு ஆறுதலுக்காக எனக்கு 19 ஆவது வீச அழைத்தார்கள் .ஒரு விக்கெட் 7 ரன் கொடுத்தேன் .என் கேப்டன் செல்வராஜ் என் அண்ணனின் நண்பர் என்பதால் அந்தக் கோபத்தை மறந்து விட்டார்.ஆனால் சொந்த அணிக்கு விசுவாசம் இல்லாதவன் போலப் பலரும் என்னிடம் பேசவில்லை .மீண்டும் எதிரணிப் பந்து வீச வரும் முன் செல்வராஜ் ( எங்கள் கேப்டன் ) அவர்களிடம் என்னை மெயின் அம்பயராக நிற்க அனுமதிக் கேட்டார்கள் .அவர் அணியின் மற்றவர்களைப் பார்த்தார் .நம் பேட்ஸ்மேன்களுக்கு பேராபத்து என்பது போல அவர்கள் கண்களாலே வேண்டாம் என்றார்கள் .ஆனால் செல்வராஜ் அண்ணன் சரி என்று அனுப்பி வைக்கச் சம்மதித்தார் .ஆனால் நான் போகும் முன் என்னை அருகே அழைத்து , பயப்படாதீங்கக் கிருஷ்ணா , ஆனால் அப்பீலுக்கு அப்புறம் சரியா இருந்தா முடிவெடுங்க என்றார் .அது எனக்கு ஆறுதலாக இருந்தது .

நல்ல வேளை அந்தப் போட்டியில் நாங்களே ஜெயித்தோம் .எங்கள் அணியின் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டு இருந்த சுரேஸ் ( சின்னக் கவாஸ்கர் என்று அழைப்போம் ) நின்று நிதானமாக் 83 ரன் எடுத்துப் பிரித்து மேய , மூன்று விக்கெட் இழந்து 17 ஆவது ஓவரிலே வெற்றிப் பெற்றோம். .அந்த அணியில் நல்ல பவுலர்கள் இருந்தும் புதுப் பிட்ச் கைக் கொடுக்காததால் எங்கள் அணியிடம் எளிதாகக் கொஞ்சம் டஃப் கொடுத்துத் தோற்றுப் போனார்கள் .எனக்கும் முடிவெடுப்பதில் மிகப் பெரிய பிரச்சனை வரவில்லை. .எதிரணித் தோற்று விடைப் பெறும் போது அந்த அணியின் அத்தனை பேறும் எனக்குத் தேடித் தேடிக் கைக் கொடுத்தது, இன்னொரு பெரிய ஆறுதல் .பின்னாளில் எதிரணி அம்பயர் வேலைத் திருப்பூர் வந்த பிறகும் தொடர்ந்தது .நான் வேலைப் பார்த்தக் கம்பெனியின் மூன்று யூனிட்டிலும் அற்புதமான கிரிக்கெட்டர்கள் இருந்தார்கள் .ஆனால் வெறியர்கள் .விடிய விடிய வேலைச் செய்தப் பிறகும் (கல்யாணம் ஆனப் பலரும் இதில் இருந்தார்கள் ) கட்டாயம் விளையாட வருவார்கள் .ஒரு டோர்னமெண்ட்டில் நான் கேப்டனாக இருந்து ஃபைனலில் பாச்சாங்காட்டு அணியுடன் மோதி ரன்னர் கப் வாங்கி எனது அருள்புரம் யூனிட்டில் ( இப்போது சேடப் பாளையம் யூனிட்) வைத்து விட்டு வந்தோம்
.
என்னதான் இரண்டு அணிகளும் விளையாடும் வரை கால் வலிக்க நிற்கும் கோட் ஸ்டாண்ட் வேலை அம்பயர் வேலையாக இருந்தாலும் எனக்கு அம்பாயர் வேலையில் மிகுந்த ஈடுபாடு வந்து நானே விரும்பி ஒட்டிக் கொள்ள முக்கியக் காரணம் இருந்தது . முதலில் விளையாட்டை ரசிக்க முடிந்தது இரண்டு அணிகளுக்கும் அம்பயாராக இருக்கும் போது நம்மைப் பொதுவாய்ப் பார்த்தார்கள் அதனால் அவர்களின் வெளிப்படையான பேச்சுக்களில் அணிகளின் திட்டமிடல்கள் தெளிவாகப் புரிந்தது. எந்தப் பவுலருக்கு என்ன ப்ளேஸ்மெண்ட்டில் ஃபீல்டர்ப் போடுவது, எப்படிப் பேட்ஸ்மேன் ஆடினால் எங்கு மூவபிள் ஃபீல்டர்ப் போடுவது அவன் தகுதி ,அடிக்க ஆரம்பித்தால் மிக்ஸிங் பவுலர்களைக் கொடுத்துத் திசைத் திருப்புவது ,போன்ற உலகத்தர நுட்பங்கள் அருவி போல அந்த இடத்தில் கிடைத்தது .எந்த அணி எதில் பலம் எதில் பலவீனம் என்பது போன்ற கணிப்புகள் எப்படிச் செய்கிறார்கள் மிகச் சுலபமாகப் புரிந்தது. .நல்ல பேட்ஸ் மேன்களின் ஃபுட் மூவ் கிட்ட இருந்து பார்க்க வரப் பிரசாதமாகக் கிடைத்தது .நல்ல பவுலர்கள் எப்படிப் பால் வீசி விக்கெட் எடுக்கத் திட்டமிட்டுப் பந்தைப் பிட்ச்சில் வைக்கிறார்கள் என்பது போன்ற பல வெற்றி ரகசியங்கள் அம்பயர் ( என்ற கல் பொறுக்கி ) இடம் நிறையக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பில் கொட்டிக் கொடுத்தது .ரகசியமாக எல்லோரின் திறமையையும் ரசிக்கச் சிறந்த இடமாக இருந்தது .யார் நல்லா விளையாண்டாலும் ரன்னர் பக்கம் வரும் போது பாராட்ட முடிந்தது .முதல் தர கிரிக்கெட்டை இன்றும் நான் ரசிக்க,புரிந்து கொள்ள, விவாதிக்க அன்று எதிரணி நடுவராக நான் நின்றப் போதெல்லாம் கற்றுக் கொண்ட பாடம்தான் உதவுகிறது .அவ்வளவு ஏன் என் பையன் என் அப்பாவுக்குக் கிரிக்கெட் தெரியும் என்று அவன் வயது பசங்களிடம் சொல்லிக் கொள்ள இது உதவியது .

பேக் வாய்ஸ் !

யாருப்பா அது ,ஏதோ இண்டர் நேசனல் கிரிக்கெட் அம்பயர் ரேன்ஞ்சுக்கு அனுபவம் எழுதறயான்னு ?

பதிலுக்கு கூட்டத்தில் எந்த சத்தமும் இல்லை!

ஒரு வேளை எனக்கு மட்டுமே கேட்கும்  மனப் பிராந்தா ?