வியாழன், 27 பிப்ரவரி, 2014

சுஜாதா - ஒரு தீராத தேடல்.


  மறைந்த சுஜாதா என்ற ரங்கராஜன் நினைவில் ....

முதலில் மதுமிதா..

                        தமிழ் வாசிக்க  ஆர்வம் பிறந்த போது  முதன் முதலில்   வீட்டில் படிக்க கிடைக்கும் ஒரே வார இதழ் குமுதத்தில் வந்த ’பிரிவோம் சந்திப்போம்’ தொடர்தான்  , ஜெ...வின் படங்களில் மயங்கி ,சுஜாதாவை வாசிக்க துவங்கினேன் ..அதுவும் முதன் முதலில் மதுமிதா - ரகுபதியின் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போடும் பகுதி ... என்னவோ செய்தது அந்த எழுத்து ..அதுவரை பாட புத்தகங்கள் கூட அவ்வளவு நட்பாய் என்னை நோக்கி வந்ததில்லை. அந்த மனிதனின் எழுத்து நடையில் எனக்கான ஏதோ ஒன்று இருப்பதாய் பட்டது ...

நினைவு கொள்ள என்னிடம் ..
  
                உடன் பிறந்த சகோதரர் செல்வம் எனக்கான வாசிப்பை கற்று கொடுத்தவர் அவருக்கு மிக பெரிய வாசிக்கும் நட்பு கூட்டம் இருந்ததால், சுஜாதா நாவல்கள் எல்லோரும் படித்த பிறகே என் கைக்கு வரும் .எப்போதுமே எனக்கு அதில் ஒரு கோபம் உண்டு. யாரும் படிக்கும் முன்,வீட்டுக்கு வரும்  எந்த புத்தகம் படிக்க வேண்டும் என்பது .அவரோ குளிக்கும்போது தவிர மீதி நேரமெல்லாம் படிப்பவர் .ஒரு சமயம் படித்து கொண்டே சாப்பிடும் போது ஒரு கரு வண்டை சின்ன வெங்காயம் என்று நினைத்து “நறுக்கெண்டு “ கடித்து கொண்டவர் என்பது சிறு எடுத்து காட்டு .(எந்த உணவையும் குறை சொல்லும் “நல்ல “ பழக்கம் இன்றுவரை இதனால்தான் அவரிடம் வந்தது என்பது வேறு விசயம )அதில் நான் படிக்க முடியவில்லை என்ற விரக்தியின் உச்ச கட்டம் அடைந்தது அதிகம் உண்டு. சரி இதெல்லாம் கிடக்கட்டும் .இன்று சுஜாதாவை நினைவு கொள்ள என்னிடம் இருப்பது என்ன..


சுஜாதாவின் பலம் ..

                    எல்லோரும் சுஜாதாவை நேசிக்க அவர்  எழுத்தில் உள்ள வேகத்தை நேசித்தார்கள்  என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது  .அந்த வேகத்தில் கடக்கும் தூரம் அதிகமிருக்கும் .வாசிப்பவன் அவர் சிறு கதை படித்தால் கூட அதில் ஆழ்ந்து நேரம் போவது தெரியாமல்  ஏதோ டைம் மெசினின் உட்கார்ந்து பயனிப்பது போல காணாமல் போவதுண்டு . சுஜாதா உலக இலக்கிய வாசிப்பு இருந்ததால், எதை பற்றி சொல்ல நினைத்தாலும் அதில் ஒரு தீர்மானம் இருந்தது .அந்த நேர்த்தியும் லாவகமும் மிக பல பிரபலங்களிடமும் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த பகுதிகளில் கொஞ்சம் தாமதமாக கடப்பது உணர முடியும்.

              அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதில் யாருக்கும் (அவரை விமர்சித்து பிரபலம் தேடி கொள்ளுபவர்களுக்கு கூட ) மாற்று எண்ணம் இல்லை . அவரின் அந்த  கெட்டியான எழுத்து நடை வாசிப்பவனை ஒரு மந்திரகோல் போல வேலை செய்ய வைத்தது . அவரின் எழுத்தின் சிறப்பு குணத்தில் ஒன்று அவர் எழுத்து , எப்போதும் அறிவுரை என்ற பகுதியை நோக்கி நகர்ந்ததில்லை .


தீராத தேடல்..

                அவரின் சுய சரிதை , இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்ற எழுத்து பயணத்தில் அவரின் நடையே பலம் .அந்த ஒன்றை வைத்தே அத்தனை இடத்தை நம்மை கவனிக்க வைத்தவர் .எழுத்தின் தொலைவை அதன் மூலம் அருகே கொண்டு வந்தவர் .உலக இலக்கியத்தின் வாசல் போல படிப்பதெல்லாம் படைப்புகளாக்கினார் .அவரின் அந்த உயரம் வாசிப்பவனிடத்தில் கிடைத்த உணர்வினால் வந்ததே  என்பதுவும் ,எழுத்தின் உயரத்தை பற்றிய அவருக்குள் இருந்த  தீராத தேடலுமே என்பதாகவும் கொள்ளலாம்  .



தொலைந்து போகவில்லை ... 

               வாசிப்பவனுக்காக எழுத்துக்கள் மாறும் போது அங்கு பக்கங்கள் அத்தனையும் பிழைதான் .எழுத்து காத்து இருக்கிறது தன்னை படைத்து  கொள்ள ஏதோ ஒரு எழுதுகோளுக்காக .அதில் ஒன்று சுஜாதாவின் எண்ணம் என்ற எழுதுகோள் .அவர் வாசிக்கப்பட்டார்.தனக்காக இது படைக்க பட்டதாக வாசிப்பவன் நினைத்து கொண்டான் .அந்த உணர்வு வாசிப்பவனுக்குள் இன்றும் தொலைந்து போகவில்லை ... ஒவ்வொரு புத்தக கண்காட்சிகளும் அவரை முன்னிறுத்திதான் பெருமை சேர்த்து கொள்கின்றன .
                இன்றும் கூட .மனைவிக்கு தெரியாமல் கணவன்மார்களும் கணவனுக்கு தெரியாமல் மனைவிமார்களும்  சுஜாதாவை வாசிக்கும் போது ரகசியமாய் சிரித்து கொள்வதுண்டு .அந்த சூட்சுமமான ரசணை உணர்வை ஒருவேளை இளமையை கடந்தவகள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.


எழுதியதையெல்லாம்  படிக்கலாம்...

                     நல்ல வேளை பெசன்ட் நகர் மின்சார மயானத்தில்,2008 பிப்ரவரி 29ஆம் அவரை எரித்து விட்டார்கள். (அதில் கூட லீஃப் வருடம்) .புதைத்து இருந்தால் அவரை தோண்டி எடுத்து எந்த பேனாவால் இதையெல்லாம் எழுதினார் என்று அவர் எழுதியதையெல்லாம்  படிக்காமல் ,இதை மட்டுமே  சிலர் கேட்க வாய்ப்பு இருந்து  இருக்கலாம் .. (பேனாவில் அவர் இருக்குபோதே எழுதுவதை நிறுத்தி விட்டார் என்பது வேறு விசயம் !) 
   


நினைவின் பகுதியின் முடிவாக...பேக் டு த  ஃபெவிலியன் ..
 சுஜாதாவின் மறைவுக்கு  கமல்ஹாசன் சொல்லியது. 

               தர்மம் கிடைக்கும் இடத்தில்தான் பிச்சைக்காரர்கள் கூடுவது போல், கொடுக்கும் இடத்தில்தான் இன்னும் எதிர்பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்பொழுது, சுஜாதா இன்னும் கொடுத்திருக்கலாம் என்று சொல்வதை விட, கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டிய நேரமாகவே இதை நான் கருதுகிறேன்.தமிழகத்தில் சுஜாதாவைப் படித்தவர்கள் எல்லோருமே வாசக தரத்தில் உயர்ந்தவர்களாகவே கருதுகிறேன். நன்றி தமிழ் உலகம் அவருக்குச் சொல்லும் ...

 

   

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாலுமஹேந்திரா - ஏகலைவன்களின் பிதா மகன் .


பார்வையால் கட்டி போடபோகின்றான் !

1951 வருடத்தில் மே மாதம் 20 ஆம் தேதியில் தனது 13 வது வயது பிறந்த நாளை  இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழியில் கொண்டாடும்  தனது மகனுக்கு ,Kodak Eastman, Baby Brownie கேமிரா வாங்கி தந்த  பாலநாதன்  என்ற கணித ஆசிரியருக்கு அப்போதே தெரிந்திருக்கிறது தன்னுடைய பையன் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் தென்னிந்திய மாநிலம் நான்கையும் தனது காமிராவின் பார்வையால் கட்டி போடபோகின்றான் என்று.


செல்லுலாயிடு சித்திரக்காரன் .

ஆனால் Sir David Lean என்ற ஆங்கில இயக்குனரின் The Bridge on the River Kwai படபிடிப்புக்கு வேடிக்கை பார்க்க போன  பாலநாதன்  மகேந்திரனனுக்கு  டேவிட் லீனின் அந்த ஆளுமை பிடித்து போனது .ஒரு பக்கம் கேமிரா ஆக்சன் என்கிறார் ,இன்னொரு பக்கமிருந்து ரோல்லிங் என்று பதில் குரல் வருகிறது .அடுத்து லீன் ஒரு கையசைவில் மழை என்கிறார்  மேஜிக் போல மழை கொட்டுகிறது என்பதெல்லாம் பார்த்த பாலு மஹேந்தினுக்கு தான் யார் என்பதையும்  தனது பூமி அவதாரம்  சினிமா என்ற செல்லுலாயிடு சித்திரக்காரன்  என்பதை  உணரவைத்தது .இவ்வளவு அருமையான பதிவுகளை இயற்கை இவர் மூல வருங்காலத்தில் தரப்போகிறது  என்பதை செல்லுலாயிடு (அதை மேம்படுத்தி) கண்டுபிடித்த,  கிறிஸ்டியன் ஷோன்பின் கூட அறியமாட்டார் .


செல்லுலாயிடு கல்லூரி

தனது செல்லுலாயிடு உருவாக்க கனவை 1966 வரை மனதுக்குள் உருவேற்றிய பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன் அங்கீரத்தை பெற்று கொண்டது Film and Television Institute of India, பூனாவில்தான் .ஆனால் அந்த திரைப்பட கல்லூரி அப்போது அறியவில்லை தான் அனுப்பும் இந்த பாலுமகேந்திரன் என்ற செல்லுலாயிடு சித்திரக்காரனுக்கு ஐந்து தேசிய விருதுகளும் , மூன்று மாநில மற்றும் ஃப்லிம்பேர் விருதுகளும் இரண்டு நந்தி விருதுகளும் காத்து  இருக்கின்றன என்பது. அது மட்டுமல்ல ஒளிப்பதிவுக்கலைக்கு 1971 ல் தங்கபதக்கம் பெற்றது ஒரு மாணவனுக்கு என்பதுதான் தெரியும் அது ஒருசெல்லுலாயிடு கல்லூரிக்கு வழங்கப்பட்டது என்பதை .



ஏகலைவன்களின் பிதா மகன்

ஆம். அவரின் அற்புத வார்ப்புகள்தானே பாலா,ராம், வெற்றி மாறன், சீமான் சுகா போன்றவர்கள் தனது உதவி இயகுனர்களை தினமும் சிறு கதைகள் படிக்க வைத்து ,அந்த கதையின் ஆக்கத்தின் பின் புலம் ,அதன் பாத்திர படைப்புகள் அதன் மன ஓட்டங்களின் மனோதத்துவம் ,உரையாடல்கள் ,ஆரம்பம் ,முடிவு என்ற பல அம்சங்களை பிரித்து அதை எழுதி வர சொல்லுவாராம் . அப்படி ஒவ்வொரு சிறுகதையில் கவனித்து உருவான உதவி இயக்குனர்கள்தான் இன்றைய இயக்குனர்கள் பலர் ஆனால் அவரின் படங்களை  பார்த்து உருவான கட்டை விரலை இழக்காத இயக்குனர் ஏகலைவன்கள் ஏராளம்.


ஒரு படைப்பாளியின் பார்வை

 பாலுமகேந்திரா என்ற கலைஞன் தன்னை ஒரு ஒளிபதிவாளராகவும் ,இயக்குனராகவும் ,கதாசிரியராகவும் ,எடிட்டராவும் ,ஒரு நடிகராகவும் பல் அவதாரம் எடுத்து கொண்டாலும்  இந்த எல்லாத்துறைகளிலும் உள்ளே தந்து கலையின் ஒரு உயிரோட்டத்தை பிண்ணி படர்ந்து இழையோட செய்வதை தவிர்க்கவில்லை .ஒரு படைப்பாளியின் பார்வை ஆழமான மன உணர்வை வெளிக்கொண்டுவரும் முயற்சியாகும் .அதுதான் படைப்பாளியை வேறுபடுத்தி காட்டும் திறமை என்பதை சொல்லியதோடு அதை தனது ஒவ்வொரு ஆக்கங்களிலும் செய்து காட்டினார் .

அளவு கோள் 

சினிமாவை அதன் கோணத்தில் பார்க்க கற்று கொள்பவர்களால் மட்டும்தான் அதை புரிந்து கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் நம்பினார் .இது ஒரு சூத்திரம் .ஆம் . யார் வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம் என்று சில பேர் கிளம்பியதன் விளைவுதான் அப்படி பார்க்க படாத பல சிறந்த திரை படங்கள் இன்றும் பல ஆச்சர்யங்களை விதைத்து விட்டு போய் இருக்கிறது .நல்ல படங்களுக்கு மோசமான படங்களுக்கும் அளவு கோள் அது பார்க்க படும் விதத்தில்தான் என்பது மிக முக்கியமான நிதர்சனம்.



உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்தவர்!

பாலு மகேந்திரா என்ற மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் எப்போதுமே சாபம் போல பெண்களுக்கும் அவருக்குமான உறவில் இருந்து வந்து இருக்கிறது  உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது என்று அவர் அழுந்த புதைந்து பேசியும் வருந்தி இருக்கிறார் .தனது மூன்று மனைவிகளான அகிலா,ஷோபா(ஷோபா. தற்கொலை செய்து கொண்டார்) ,மௌனிகா வரை எல்லோரையும் பற்றியும் அவர்களின்  பங்கு என்ன என்பதை ஒருபோதும் வெளிப்படையாகப் பேச மறுத்ததில்லை. சொந்த வாழ்க்கையை புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்ததால் ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்ததாகிவிட்டது .ஆனால் என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான் என்றும் சொல்லி இருக்கிறார்  அந்த மறைந்த கலைஞர் பாலு மகேந்திரா.



 கொட்டித் தீர்த்துக்கொண்டேன்...

பொதுவாக கமல் உட்பட நிறைய அற்புதமான கலைஞர்கள் சொல்வது கலைஞனின் வாழ்கையில் எட்டி பார்க்காதீர்கள் .தலையிடாதீர்கள் என்கிறார்.அது உண்மைதான் .அது உரிமைதான் .ஆனால் அதே கலைஞன் தன்னுடய கோபதாபங்களை காட்டாமல் அல்லது வெளிப்படுத்தி கொள்ள தன் கலை எனும் ஆயுததின் வழியாக  வெளிப்பட்டுட்தானே நிற்கிரான் .அதர்க்கு அவரே சொன்ன காட்சி -   மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நாம்  பார்த்த, கமலை விட்டு ஸ்ரீ தேவி ரயில் பயணிக்க தொடங்குபோது அழுது புரள்வாரே! (அதர்க்கு கமல் தேசிய அவார்டு வாங்கி கொண்டார் ) அது ஷோபா  மீது வைத்து இருந்த   நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன் என்கிறார் .

               தான் பெற்றதை மற்றவர்க்கு சொல்லி தர வேண்டும் நினைத்து , அவர் தொடங்கிய ”சினிமா பட்டறை: ஒரு முழுமையான கலைஞனின் நன்றி  உணர்வின்  வெளிப்பாடு .தான் கற்று கொண்ட இடத்திர்க்கு செய்த நன்றி . தான் பெற்றதை விட்டு செல்லும் அடையாளம் .


கடைசி ஆசை .
திரைப்படங்களுக்கான ஒரு ஆவணக் காப்பகம் அமைப்பதன் அவசியத்தை கடந்த மூன்று வருடமாக பேசிவந்தார் பாலு மஹேந்திரா மேலும் அதர்க்கான  பாதிச் செலவை அரசும், மீதிச் செலவை திரையுலகமும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் கூட திட்டம் கூறினார்.ஆனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர் .வருவாயை மட்டுமே பார்க்கும் சினிமாதுறை இதை எப்போது செய்யும் ? வந்து அழுது விட்டு போன கலைஞர்களின் மனதுள் இனி பஞ்ச பௌதீகங்களாய் பிரிந்து நிற்க்கும் அவரின் ”அதுவே” கலந்து செயல் படுத்தட்டும் .


https://www.youtube.com/watch?v=EWO-yNnWdFA

அடையாளாம் காணும் குணம் .

அற்புதமான அந்த படைப்பாளியின் மனதை எனக்கு மிக அருகிலே கொண்டு வந்தது எனது பள்ளி தோழன் சுகுமாரின்   கேரிகேச்சர் ( ஒரு வித ஓவிய முறை... அது ஒரு வித்தியாமான வெளிப்பாடு. மனிதரை, அவரின் குணங்களை, செயல்பாடுகளை தனியாக, மிகைப்படுத்தி காட்டும் ) ஓவியமுறையில், பாலு சாரை வரைந்து பாலு சாரின்  உதவி இயக்குநர் சுகா மூலம் அனுப்பி வைக்க அதை பார்த்து விட்டு அவர் ,சுமார் ஒரு நிமிடம் பேசிய வீடியோ பதிவை முக நூலில் பதிவிட்டு இருந்தார் .ஒரு கலைஞன் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும் என்ற அந்த மறைந்த கலைஞனின் ,மறக்க முடியாத  அடையாளாம் காணும் குணம் என்னை மீளாத ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது .அன்றிலிருந்து மிக தீவிர ரசிகனாக பாலு சாருக்கு ஆகிவிட்டேன் .


அவரை வழியனுப்ப வந்த  திரைப்பட  உலகம் ,அவரின் நினைவுகளை  பாதுகாக்க விட்டு சென்ற ”தலைமுறைகளின் ’ வளர்ச்சியை கொண்டாடினால்  குறைந்த பட்சம் அந்த கலைஞனை ஆவணக் காப்பகமாக ஆக்கமாலேயே பாதுகாக்கலாம்.  





செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

முதல் பக்கம் முகம் சுளிக்கிறது - புத்தக திருவிழா .




புத்தகங்களின் வாசனையோடு ..

நமக்கு மிகவும் பிடித்த சொந்தம் வீடு நிறைய வந்து இருந்து விட்டு  திடீரெனெ கிளம்பி போன பிறகு வீட்டில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது போல திருப்பூர் - KRC சிட்டி சென்டரில் புத்தக திருவிழா ஏக்கத்தை ஏற்படுத்தியது .பொதுவாகவே புத்தகங்கள் நிறைந்த பகுதியில் சும்மாவாது உட்காந்து போகவே ஆசையாக இருக்கும் அதிலும் புத்தக திருவிழாவில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் ? கிடைத்தது . ஸ்டால் எண் 92 வேதாத்ரி நிலையம் - மனவளக்கலை மன்றத்தின் சார்பில் (கரும்பு தின்னும்) பணி .பல மணி நேரம் அவசரமில்லாமல் பல்லாயிரம் புத்தகங்களின் வாசனையோடு கலந்து உறவாடும் அலாதியான அற்புத வாய்ப்பு .பல புத்தக ஆர்வ நண்பர்களை ஃபோன் செய்து  வர வைத்து  ஆர அமர 77 புத்தக வெளியீட்டாளர்களின் 99 ஸ்டால்களையும் சுற்றி பார்த்து பிரித்து படித்து பார்த்து மேய்ந்து தள்ளினோம்  .


நூல்களின்  அறுவடை...

ஒன்பது நாள் புத்தக விழாவில் ஐந்து  நாட்கள் - ஆறுமுறை போனோம் .முதல் நாள் சென்றபோது வெகு நாளாய் காத்து இருந்து பாலகுமாரனின் உடையார் தொகுப்பு,சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை ,ஜெயகாந்தனின் ரிஷி மூலம் ,அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு,கல்கியின் பார்த்தீபன் கனவும் சிவகாமியின் சபதம் இணைப்பையும் நண்பர் ஆதி வாங்கி விட்டார். ( என்னுடைய சில புத்தகங்களை முடித்து விட்டு மெல்ல வாங்கிபடித்து விடலாம் ) .இரண்டாவது நாள் உமர் பாருக்கின் - உடல் மொழி கடைசி நாள் இரண்டாவது படிக்கும் பையனோடு போய் அவருக்கு ஹிந்தி மற்றும் தமிழ் சார்ட் வாங்கினேன் .அவர் பென் டென்னிசனின் ஏழியன் அவதார - கலரிங் புத்தகத்தை வாங்கினார்.  
     

காணாமல் போன பக்கங்கள் ...

எனது மகனின் யோக மாஸ்டருக்கு பரமஹம்ச யோகானந்தரின் - ஒரு யோகியின் சுய சரிதை வாங்கினோம் ஆனால் முதல் நாள் பார்த்த - மனிதனின் நிரந்தர தேடல் கிடைக்கவில்லை அதே போல  நான்  ஒவ்வொரு முறையும் தேடிய புத்தகம் தோழமை வெளியீடு 'காலத்தின் சுருக்கமான வரலாறு' Tamil Translation of "A Brief History of Time" by Stephen Hawking's.இந்த புத்தகம் ஆசிரியர் .நல்லங்கிள்ளி மூலம் தமிழ் மொழிபெயர்ப்பு செய்து தோழமை வெளியீடு மூலம் இரண்டாம் பதிப்பு 2005 ல் வெளியீடு செய்துள்ளது -  ஆனால் அதே பதிப்பகத்தை  தொடர்புகொண்ட போது இல்லை என கைவிரித்து விட்டார்கள் .கோவை விஜயா பதிப்பகமும் இதே பதில் சொன்னது ஏமாற்றத்தை அதிகரித்தது .நண்பர்களிடம் பல ஊர்களுக்கு கேட்டு இருக்கிறேன் . 


முதல் பக்கம் முகம் சுளிக்கிறது !

யாரையும் குறை சொல்ல வில்லை என்றாலும் இங்கு ஒரு வேதனை.புத்தக திருவிழா அரங்கத்திர்க்குள்  உள்ளே போனபோதெல்லாம் வந்தது .அது புத்தகங்களின் விலை .தமிழ் வளர்ப்பதாகவும் சரித்திரங்ளை மீட்டு கொண்டுவருவதாகவும் சொல்லிகொள்ளும் பல தற்கால தமிழ் படைப்பாளிகள் மெனக்கெட்டு மேலே வருகிறார்கள் .இதை யாரும் மறுக்க முடியாது ஆனால் காலத்தின் பின்னோக்கிய பார்வையில் இவர்கள் சிறந்த படைப்பாளிகளின் புத்தககளுக்காக தேடும் போது அதன் விலை எவ்வளவு முக்கியம் என்பதை உணராமலா  இருப்பார்கள் .(அதிலும் டீலக்ஸ் பிரிண்ட் இரண்டு மடங்கு விலை வேறு ) அவர்கள் முதலில் வாசிப்பவனாக இருக்கும்போது இந்த விலை எவ்வளவு வலித்து இருக்கும் ?


படிப்பவன் யார் ? அதுவும் சரித்திர புத்தகங்களை வாசிப்பவன் தமிழ் மீது கொஞ்சமாவது நேசம் இல்லாமலா இருப்பான் ? அவனை ஏமாற்றுவதும் அந்த சரித்திரத்தை ஏமாற்றுவதும் ஒன்றுதானே? 
தமிழன் ஆன நான் என ராஜ ராஜ சோழனை படிக்க 1400 ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கிறது என்று பிரபல எழுத்தாளர் புத்தகத்தை வாங்கிய நண்பர் ஆதி நொந்து போய் கேட்டார். எத்தனை வலி மிகுந்த வார்த்தைகள் அவை ? பிரபல எழுத்தாளர்களை முன் வைக்கும் கேள்வி இதுதான். யாரை பற்றி சொல்ல யாரிடம் சம்பாதிக்கிறீர்கள் ? யோசியுங்கள் . இதனால் தமிழ் வளராது .உங்கள் தரித்திரமும் தீராது !வேதனையாக சொல்ல வேண்டி இருக்கிறது இதை .அப்படியானால் எழுதுபவன் கடைசி வரை பிச்சைகாரனாகத்தான் இருக்க வேண்டுமா என்பார்கள் .உங்களுக்கு தெரியும் .நீங்கள் தமிழ் மூலம் வளர்ந்து இருந்தால் அதில் வரும் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடுத்தவன் எவனும் உங்களுக்கு சொல்ல வேண்டாம்.


  சகோதரர் ஜோதிஜி (தேவியர் இல்லம்- http://deviyar-illam.blogspot.in/2013/12/2014.html ) டாலர் நகரம் புத்தகம் சிறந்த எட்டில் ஒன்று (ஆனந்த விகடன் இயர் புக் 2014) தேர்ந்தெடுத்த பின் கூட முதல் மின் நூல் இலவசமாக“ஈழம் – வந்தார்கள் வென்றார்கள்” வெளியிட்ட போது  வெளியிட்ட இரண்டு வாரத்தில் 1400க்கும் மேற்பட்டவர்கள் தரவிறக்கம் செய்து மகத்தான ஆச்சரியத்தையும் ஆதரவையும் தந்த காரணத்தால் இந்த மின் நூலையும் உருவாக்கும் எண்ணம் உருவானது என்ற அவர்  தனது அடுத்த படைப்பான ”வெள்ளை அடிமைகள்” வெளியிட்டார்( http://freetamilebooks.com/ebooks/white-slaves/) .ஒருவேளை வேறு வகையில் காசு பார்க்க அவர் போய் இருந்தால் பல்லாயிர  சாதாரண தமிழனிடம் இந்த கருத்து சேராமல் தொலைந்தல்லவா போய் இருக்கும் ?


இதனால் தான் என்னவோ http://tamilnovelsdownload.blogspot.in/2011/02/all-tamil-novels-download.html மற்றும் http://www.openreadingroom.com/ போன்ற பல பிரபலங்களின் புத்தகங்கள்  தன்னை வெளியே சொல்ல இந்தமாதிரி அவதாரங்களை எடுத்து கொள்வதில் தவறில்லையோ ? 
   

           
"ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ,ஒரு நூலகம் கட்டுவேன்" என்று மஹாத்மா காந்தி  சொன்னதாக இந்த புத்தக திருவிழாவின் வாசகம் (முதல் படம் )சொல்கிறது .இன்று காந்தி இருந்தால் , நூலகம் கட்டி இருப்பார் ஆனால் புத்தகம் வாங்க பத்து கோடி கடன் வாங்க வேண்டி இருந்து இருக்கும் எனபதைத்தான்   குனிந்த தலையுடன் சொல்லி இருப்பாரோ ? 

சனி, 1 பிப்ரவரி, 2014

ஸ்டீபன் ஹாக்கிங்கின் -கடவுளுக்கு அவசியம் இல்லை.

           

பிரபஞ்ச தோற்றம் பற்றிய கருத்துக்களை புரட்டி போட்ட இரண்டு புத்தகங்களின் பி.டி.எஃப் கோப்புகளை இலவசமாக ( மன்னிக்கவும் - ஆங்கிலத்தில் ) வாசித்து - யோசிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது .


'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்'

                         எந்திரன் படத்தில் ரஜினிக்கும்  ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் விவாகரத்து நடக்கும்போது அவர் பரிசளித்த பொறுள்களை திருப்பி தரும்போது  கோபமாக, ஸ்டீபன் ஹாக்கிங்கின் 'தி பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம் ' என்ற நூலை காட்டுவாரே ! 



             அந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள், பிக் பேங் தியரி, பிளாக் ஹோல்ஸ், லைட் கோன்ஸ் ஆகியவற்றை பற்றி எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி விவரித்திருக்கிறார். அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார்


  தறவிரக்க முகவரி 

http://www.fisica.net/relatividade/stephen_hawking_a_brief_history_of_time.pdf



                     ஆனால் அவரின் அடுத்த புத்தகமான 'தி கிரான்ட் டிசைன்'
இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று பிடிவாதமாக மறுக்கிறது . அதில் அவர் இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக அதில் எழுதியுள்ளார் ஹாக்கிங். இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது 



                      இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது. பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

அதன் தறவிரக்க முகவரி .. http://dxxandcdl.info/science/astronomy/5.pdf